வடக்கு மாகாண சபையிலுள்ளவர்கள் தகுதியற்றவர்கள்!

northern_provincial_councilவடக்கு மாகாண சபையில் அங்கம் வகிப்பவர்கள் மாகாண சபையை இயக்குவதற்கான எந்தவிதத் தகுதிகளுமற்றவர்கள் என பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலைப் பிரதி அதிபருமான பொ. ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் ஏற்பாட்டில் “வடக்கு மாகாண சபையும் வரலாற்று அநாமதேயங்களும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் 04 மணி முதல் யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள D.M.I தனியார் கல்வி நிறுவன மண்டபத்தில் யாழ். கல்வி வலய ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ஏ.சி.ஜோர்ஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள வேண்டிய முதலாவது கடப்பாடு மாகாண சபைக்குரியது. வடமாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான தேவை அதுவாகத்தானுள்ளது.

முதலாவது உலகமகா யுத்தம், இரண்டாவது உலக மகா யுத்தம் என்பன உலகளாவிய ரீதியில் நடந்துள்ளது. இந்நிலையில் முதலாவது உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் பல விடயங்களை உலக நாடுகளே செய்யத் தவறியுள்ளன.

இரண்டாவது உலகமகா யுத்தத்திற்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கிப் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபையில் எங்களுடைய தேவைகளை, பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காக வரைபுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறானதொரு வரைபு வரையப்படாததே அங்கத்தவர்களுடைய முதலாவது தவறு.

தேசியப் பிரச்சினைகளை விட எமது பிரதேச அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். எமது வடக்கு மாகாண சபை இந்த விடயத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை.

தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்ற வடக்கு மாகாண சபை தவறி விட்டது. வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கிக்கிறார்கள் எனக் கூறினாலும் அவர்களிடம் ஒருமைப்பாடு எதுவுமில்லை.

வடக்கு மாகாண முதலமைச்சர் ஜெனீவாவிற்குக் கடிதங்கள் பல எழுதியுள்ளமை போன்ற விடயங்கள் வரவேற்புக்குரியது. ஆனால், அவருக்குக் கீழுள்ள உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

ஆனால், வடக்கு மாகாண சபையில் அந்த இணைவுகளுக்கே துளியும் இடமில்லை.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வாறான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் ஒரு பட்டியலைச் சமர்ப்பிப்பது அவசியம். ஆனால், அதனை மேற்கொள்ள வடக்கு மாகாண சபை தவறியுள்ளது.

வடமாகாண அவைத்தலைவர் சீ .வீ .கே. சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராஜா போன்றவர்கள் சபை அமர்வில் பேசும் நேரங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது.

ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்குச் சபை அமர்வின் போது பேசுவதற்கான உரிமையுள்ள போதும் சபை அமர்வின் முழுநேரத்தையும் அவரே எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?

நானும் ஒரு பிரதேச சபைத் தலைவராகவிருந்தவன் என்ற அடிப்படையில் தான் நான் இவ்வாறான விடயங்களைக் கூறுகின்றேன்.

நான் தலைவராகவிருந்த காலப் பகுதியில் சமூகத்தின் தேவை அறிந்து பல விடயங்களைச் செய்துள்ள போதும் பல்வேறு விடயங்களை நானும் செய்யத் தவறியுள்ளேன்.

இதேவேளை, வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிப்பவர்கள் மாகாண சபையை இயக்குவதற்கான எந்தவிதத் தகுதிகளுமற்றவர்கள் எனக்கு குறிப்பிட்டுள்ள அவர், சாதாரண ,மக்களின் சிந்தனைகள் கூட அற்றுத் தான் மாகாண சபை செயற்படுகின்றதா? என எண்ணுமளவுக்குத் தான் அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

-tamilwin.com

TAGS: