குலா: போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்தவர் எப்படி தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார்?

 

Kulaஜெலெப்பாங் போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் தனக்குத் தானாகவே தீயிட்டுக் கொண்டதாக கூறப்பட்ட பாஸ்கர் ராவ், 47, நேற்று பின்னேரம் மணி 4.10 மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் கடந்த 9 நாள்களாக மருத்துவமனையில் தனது உயிருக்காகப் போராடினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் போலீஸ் காவலில் இருந்த பாஸ்கர் ராவ் தமக்குத் தாமே தீயிட்டு பலியாகியிருக்கிறார். இதற்கான “உண்மையான மற்றும் நேர்மையான பதில் தேவைப்படுகிறது” என்று கூறிய குலா, இதில் முக்கியமான தரப்பாக போலீஸ் இருப்பதால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இது எப்படி நடந்தது என்று போலீஸ் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இச்சம்பவம் பற்றிய விசாரணையின் முடிவில் போஸீசுக்கு அக்கறை இருப்பதால், விசாரணையை போலீசாரிடமே விட்டுவிட முடியாது ஏன்னென்றால் அங்கு பாரபட்சத்திற்கு இடமுண்டு.

ஆகவே, இச்சம்பவம் ஏன் மற்றும் எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணையை இஎஐசி (அமலாக்க ஏஜென்சி நேர்மை ஆணையம்) அல்லது சுஹாகாம் அல்லது இரண்டு அமைப்புகளே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குலா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

போலீஸ் நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறிய குலா, “சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை, அதில் போலீசும் அடங்கும்”, என்றும் அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ வி. விமல் அரசன். என். செல்வம் மற்றும் குலா ஆகியோர் அடங்கிய குழு தேவையான சட்ட உதவிகளை வழங்கும் என்று குலா மேலும் கூறினார்.