“ஆட்டோமேட்டிக்” வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, அஸலீனா கூறுகிறார்

 

Azanoautomaticஒரு மலேசியக் குடிமகன் 21 ஆவது வயதை அடைந்தவுடன் அவர் தானாகவே வாக்காளர் ஆகிவிட முடியாது. அவ்வாறான வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் கூறுகிறார்.

வாக்களிக்களிக்கும் வயதை எட்டியவரை தானாகவே வாக்காளராக்கும் பதிவுமுறை மற்றும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குதல் ஆகிய திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் இருக்கிறதா என்று பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கேட்டிருந்த கேள்விக்கு அஸலீனா இவ்வாறு பதில் அளித்தார்.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 119 தின்படி, 21 வயதை எட்டிய மற்றும் வாக்காளராவதற்கான தகுதி எதனையும் இழக்காத ஒரு மலேசிய குடிமகன், ஒரு வாக்காளராக பதிவு செய்யப்படுவதற்கு மனு செய்ய வேண்டும் என்று அஸ்லீனா விளக்கமளித்தார்.

எனினும், இது போன்ற நடவடிக்கை அமலாக்கம் செய்யப்பட வேண்டுமென்றால், இப்போது இருக்கும் சட்டவிதிகளுக்கு திருத்தம் கொண்டுவருதற்கு முன்னர் இது குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட வேன்டும் என்றாரவர்.

கடந்த மார்ச்சில், இவ்வாறான “ஆட்டோமேட்டிக்” வாக்காளர் பதிவு முறையை அமல்படுத்த மலேசியா தயாராக இல்லை என்று தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹாசிம் அப்துல்லா கூறியிருந்தார்.