கிளந்தான், திரெங்கானுவை அமனா கைப்பற்றுவது ‘சாமானிய பணியல்ல’

amanahவரும்   தேர்தலில்   கிளந்தானிலும்   திரெங்கானுவிலும்   பாஸ்  கட்சியைத்   தோற்கடிக்க    வேண்டும்   என  பக்கத்தான்   ஹராபான்    கூட்டணி  அமனாவுக்கு    இட்டுள்ள  பணி   மிகக்  கடுமையானது,  சாத்தியமற்றது   என்றுகூடக்  கூறலாம்.

கிளந்தான்   பாஸின்  கோட்டை,  1990-இலிருந்து   தனித்து  நின்றே   அது   அம்மாநிலத்தை     தன்வசம்  வைத்துள்ளது.

2013  தேர்தலில்    அம்னோவைவிட   மூன்று   இடங்களை    அது   கூடுதலாக    வென்றிருந்தால்  திரெங்கானு  மாநிலத்தையும்    அது    திரும்பப்  பெற்றிருக்கக்  கூடும்.

பாஸ்   பெரிய  எதிர்க்கட்சிகளில்   ஒன்று.  ஏன்,  அதுவே  மிகப்   பெரிய   எதிர்க்கட்சி   என்று  சொன்னால்கூட    தப்பில்லை.     2013-இல்   அதிலிருந்து   பிரிந்து     வந்தவர்கள்தான்   இன்றைய   அமனா    தலைவர்கள்.

“எதுவும்  எங்களுக்குச்   சாதகமாக  இல்லைதான்,  ஆனாலும்   பாஸை   எதிர்த்து   நிற்பதற்குப்   பொருத்தமான   கட்சி   என்றால்   அது  அமனாதான்”,  என  அமனா   வியூக   இயக்குனர்   சுல்கிப்ளி   அஹமட்   மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.

ஆனால்,  போட்டி  கடுமையானதாக  இருக்கும்.

கடந்த   ஆண்டு   சுங்கை   புசார்,     கோலா  கங்சார்   இடைத்   தேர்தல்களில்   அம்னோவுக்கு  எதிராக   பாஸும்   அமனாவும்  போட்டிபோட்டுக் கொண்டு   களமிறங்கியது  ஆளும்  கட்சிக்கு    மிகப்  பெரிய   வெற்றியாக   முடிந்தது.

அந்நிலைதான்  14வது    பொதுத்  தேர்தலிலும்   ஏற்படும்    என   ஆய்வாளர்கள்  கருதுகின்றனர்.  பாஸ்    தேர்தலில்   தனித்துப்  போட்டியிட   முடிவு    செய்திருப்பதானது     எதிர்க்கட்சி    வாக்குகளைச்   சிதறடித்து   விடும்     என்கிறார்கள்    அவர்கள்.

அதை   அறிந்தே  பாஸுக்கு   எதிராக    அமனாவைக்  களமிறக்க     முடிவு   செய்துள்ளது   பக்கத்தான்   என்கிறார்  சுல்கிப்ளி.

“உண்மை  நிலவரத்தை    அவர்களுக்கு  உணர்த்தும்    ஒரு  முயற்சிதான்   இது.  மும்முனைப்   போட்டி   என்றால்   அதில்   அமனாவுக்கு   வெற்றி  கிடைக்காது   போகலாம்.  ஆனால்,   பாஸுக்கும்   வெற்றி   கிடைக்காது.  அம்னோ   வெற்றிபெறும்   வாய்ப்பே    அதிகம்.

“பாஸ்  மட்டும்   எதிரணியுடன்  ஒத்துப்போகுமானால்  (எதிரணி)    எளிதாக   வென்றுவிடும்”,  என்றாரவர்.

பாஸ்  கிளந்தானை  இழக்கும்   சாத்தியம்   இருப்பதால்    எதிரணியுடன்   ஒத்துழைப்பதுதான்    அதற்குச்  சாதகமாக   இருக்கும்    என   சுல்கிப்ளி   குறிப்பிட்டார்.

பாஸ்  புத்திசாலித்தனமாக   செயல்பட   நினைத்தால்   அமனாவைக்   கிழக்குக்  கரை  மாநிலங்களுக்கு   வராமல்  தடுக்க   ஓர்  உடன்பாட்டைச்   செய்துகொள்ளலாம்   என்றாரவர்.

அதையெல்லாம்   சுட்டிக்காட்டித்தான்     பிகேஆர்   துணைத்   தலைவர்   அஸ்மின்  அலியும்   மற்றவர்களும்    பாஸை    எதிரணி  பக்கம்  கவர்ந்திழுக்க
திரும்பத்   திரும்ப  முயன்றனர்.   ஆனால்,  பாஸ்   மறுத்து   விட்டது.

அதனை   அடுத்து,   ஹராபான்   தலைமை,   இனி  பாஸுடன்   தேர்தல்   உடன்பாடு   இல்லை   என்று  கடந்த   வாரம்   தெளிவாக    அறிவித்து   விட்டது.

என்றாலும்,  பாஸ்  மனம்  மாறி   எதிரணியுடன்   உடன்பாடு  காணலாம்   என்ற  நம்பிக்கையை   முற்றாகக்  கைவிட  சுல்கிப்ளி   தயாராக  இல்லை. எதுவும்  நடக்கலாம்   என்றே   அவர்   நம்புகிறார்.

இதனிடையே,  அமனா  கிழக்குக்கரையை   ஹராபானுக்கு   வென்று  கொடுக்கும்   முயற்சியில்   தீவிரமாக  இறங்கியுள்ளது.  அப்பணியைச்   செய்துமுடிக்க    பொருத்தமானவர்கள்   கட்சியில்  இருப்பதாக     அது   நம்புகிறது.

கிளந்தானில்,  கட்சி   உதவித்    தலைவர்   ஹுசாம்   மூசா   தலைமையில்   அமனா   களம்   இறங்கும்.