ஆர்சிஐ செலாவணி விசாரணை: “ஆச்சரியத்தில்” அன்வார் இப்ராகிம்

Anwarastonishedபேங்க் நெகாரா அந்நியச் செலாவணி நட்டம் மீதான அரச ஆணையத்தின் விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம் அழைக்கப்படுவது பற்றி அரச ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளதாக அன்வார் கூறுகிறார்.

தமது சாட்சியத்தை செவிமடுக்காமல் இந்த அரச ஆணைய விசாரணை முடிவுற்றால் அது கேளிக்கூத்தாகும் என்று அன்வார் கருத்துரைத்தார்.

இதுவரையில் நடந்த விசாரணையில் தம்மைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டது தாம் அந்த விசாரணையில் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட வேண்டியது தட்டமுடியாததாக ஆகியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த விவகாரத்தின் உண்மையான நிலையைத் தாங்கள் கண்டாக வேண்டும் என்று அந்த ஆணையம் பல தடவைகளில் கூறியுள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கான சரியான வழி என்னை மற்றும் (டாக்டர் மகாதிர் முகமட்), அக்கட்டத்தில் பிரதமராக இருந்தவர், போன்ற சம்பந்தப்பட்ட மற்றும் முக்கியமான சாட்சிகளை சாட்சியமளிக்க அனுமதிப்பதாகும்”, என்று அன்வார் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

அரசாங்கத்தின் முன்னைய தலைமைச் செயலாளரான முகமட் சீடெக் ஹசான் இந்த அரச ஆணைய விசாரணைக்கு தலைமை ஏற்றுள்ளார்.

1980-1990 ஆம் ஆண்டுகளுக்கிடையில், பேங்க் நெகரா அடைந்த அந்நியச் செலாவணி நட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்வது அரச ஆணையத்தின் பணியாகும்.

இக்காலகட்டத்தில், அன்வார் நிதி அமைச்சராகவும், மகாதிர் பிரதமராகவும் இருந்தனர்.

அரச ஆணையம் இந்த இரு தலைவர்களையும் சாட்சியமளிக்க அழைக்குமா என்று ஆணையத்திடம் கேட்டதற்கு, “உங்களுக்கு பிறகு தெரிவிப்போம்” என்று பதில் கிடைத்ததாக மகாதிரின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் காட்ரி மற்றும் அன்வாரின் வழக்குரைஞர் குர்தியால் சிங் ஆகியோர் ஆகஸ்ட் 30 இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.