டிஏபி-இன் ‘அலைவுக் கோட்பாடு’ விசயத்தில் எச்சரிக்கை தேவை: மலாய்க்காரர்களுக்குத் தகவலமைச்சர் அறிவுறுத்து

sallehஎதிர்வரும்   பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்  ஹராபானின்  வெற்றிக்கு  டிஏபி   செய்துள்ள  ஒரு   கணிப்பு   சரியானதே   என   தகவலமைச்சர்   சாலே  சைட்  கெருவாக்   நினைப்பதுபோல்    தெரிகிறது.

அதனால்தான்  சாலே,     டிஏபி   ஆட்சிக்கு   வருவதைத்   தடுக்க   நினைத்தால்   மலாய்க்காரர்கள்    டிஏபி   செய்துள்ள   கணிப்பைக்  கருத்தில்   கொள்ள   வேண்டும்   என்று     கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“எதிர்வரும்  தேர்தலில்  மலாய்  வாக்காளர்களின்  ஆதரவு   இருந்தால்,  டிஏபி  (சுமார்)  60   நாடாளுமன்ற  இடங்களுக்குப்   போட்டியிட்டு   ஆட்சியைக்  கைப்பற்ற  முடியுமா?  முடியும், மலாய்க்காரர்கள்  ஒன்றுபடாவிட்டால்” ,  என்கிறார்  சாலே.

“பல  தொகுதிகள்,  குறிப்பாக  பேராக்,  ஜோகூர்,  சிலாங்கூர்,  நெகிரி   செம்பிலான்,  மலாக்கார்  ஆகியவற்றில்,  பல  இனங்களைக்   கொண்டவை.

“டிஏபி   தலைவர்கள்   கூறுவதைப்போல்   அங்கெல்லாம்  10-15 விழுக்காடு   மலாய்  வாக்குகள்  இடம்  மாறினால்  அவர்கள் (ஹராபான்)  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்ற   முடியும்”,  என   சாலே  குறிப்பிட்டார்.

அது   சாத்தியமானதே    என்று    கூறிய     சாலே,   டிஏபி  மலாய்   ஆதரவைப்  பெற   அதன்  கூட்டுக்கட்சிகளான  அமனா,  பிகேஆர்,    பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)   ஆகியவற்றைப்   பயன்படுத்திக்கொள்கிறது    என்றார்.

அதுதான்   நடந்தது   2008,  2013  பொதுத்   தேர்தல்களில்.  அப்போது   டிஏபி  பாஸுடன்  நட்பாக  இருந்தது.

இப்போது   நிலைமை   மாறிவிட்டது.  இரண்டும்   உறவுகளை   முறித்துக்கொண்டன.  டிஏபி  பல்வேறு   பரப்புரைக்ளைச்   செய்து   பாஸ்   ஆதரவாளர்களைத்   தன்  பக்கம்   இழுக்கப்   பார்க்கிறது.

“மலாய்க்காரர்கள்  ஹராபானை   ஆதரித்தால்  டிஏபியும்   அதன்  பங்காளிக்  கட்சிகளும்   பல- இனத்  தொகுதிகள்   சிலவற்றை  வெல்லக்  கூடும்.

“எனவே,  உணர்ச்சிவசப்படாதீர்கள்.  ஹராபான்  பக்கம்  செல்வதற்குமுன்  நாட்டின்   எதிர்காலத்தை   எண்ணிப்  பாருங்கள்.

“பிஎன்  அரசியலால்   நல்லதே   நடந்துள்ளது, பல்வேறு  இனங்களுக்கிடையில்  இணக்கம்  ஏற்பட்டுள்ளது,   நாடு   மேம்பாடு  அடைந்துள்ளது”,  என  சாலே கூறினார்.