அம்பிகாவை ஹரபான் எதிரி என்பதா: ரபிசிக்குக் கண்டனம்

rafiziபெர்சே   முன்னாள்  தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசனைக்  குறைகூறிய  பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லி   கண்டனத்துக்கு   ஆளானார்.

பெர்சே   செயலகத்தின்  மேலாளர்  மந்திப்   சிங்,  பாண்டான்  எம்பி-இன்  குறைகூறல்களுக்காக   அவரை   டிவிட்டரில்    சாடினார்.

“நான்   அறிந்தவரை    அம்பிகா   மக்களை  பிஎச்(பக்கத்தான்  ஹரபான்)-சுக்கு  எதிராக  வாக்களிக்குமாறு   கேட்டுக்கொண்டதே   இல்லை.  உங்களை  (ஹரபான்)   அவர்   குறைகூறுகிறார்   என்றால்   நீங்கள்    வெற்றிபெற   வேண்டும்    என்பதற்காகத்தான்.

“அவர்  உங்கள்  உள்கட்சி  விவகாரங்களில்    தலையிடுவதாகக்  குற்றஞ்சாட்டுகிறீர்கள்.  அவரை  பிஎச்  எதிரி   என்கிறீர்கள்.  இதற்குப்  பொருள்  என்ன?”,  என்று  மந்திப்   வினவினார்.

தேசிய  மனித  உரிமைக்  கழகத்  தலைவரான   அம்பிகா,     பொதுத்  தேர்தலுக்கு  முன்னதாக  எதிரணியினர்   வெளிப்படையாக   வாய்ச்சண்டையில்  ஈடுபடுவதை  கண்டித்ததைத்   தொடர்ந்து   நடுநிலை  வகிக்க  வேண்டிய   ஒருவர்   அப்படிக்  கண்டனம்    தெரிவித்தது  முறையாகுமா   என்று   ரபிசி   கேள்வி   எழுப்பியிருந்தார்.

அம்பிகாவின்  கருத்து  நியாயமற்றது,  பாரபட்சமானது,   தவறான  தகவல்  அவருக்குத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   என்றாரவர்.

“எனக்கு  இது  வியப்பளிக்கவில்லை.  பக்கத்தான்   ஹரபான்  அமைக்கப்பட்டதிலிருந்தே  அவர்   அதற்கெதிராகத்தான்   செயல்பட்டு   வந்துள்ளார்”,  என்று  ரபிசி   கூறினார்.

ரபிசி   அவரின்  எதிரிகளுக்குச்  சாதகமாக  அம்பிகா   பேசுவதாகக்  கூறுவதை  மந்திப்   நிராகரித்தார்.    மற்றவர்களின்  விமர்சனங்களை   ஏற்க  முடியாதவர்  ரபிசி   என்றவர்   சாடினார்.

அவரைப்  போன்றே   வழக்குரைஞரும்   சமூக    ஆர்வலருமான   ஷியாரெட்ஸான்  ஜொஹனும்,   தொடக்கத்திலிருந்தே   அம்பிகா   ஹரபானை   எதிர்த்து   வந்ததாக    ரபிசி  கூறுவதை    மறுத்தார்.

அது  “மிகவும்  அபத்தமான   கருத்து”  என்று   டிவிட்   செய்த   அவர், “நண்பர்களை   எதிரிகளாக்கிக்  கொள்ளாதீர்கள்”  என்றார்.

பாஸ்  கட்சியுடன்  பேச்சுகள்  நடத்துவதா,  கூடாதா  என்ற  விவகாரம்   பிகேஆரை  ஆட்டுவித்துக்  கொண்டிருக்கிறது.  அது   குறித்து   கட்சிக்குள்  மட்டுமல்லாமல்   கட்சிக்கு  வெளியில்   விவாதிக்கப்படுகிறது.

ரபிசியைப்  பொறுத்தவரை,    பேச்சுகளை   நிறுத்த  வேண்டும்   என்ற  கருத்தைக்  கொண்டவராக  இருக்கிறார். பக்கத்தான்  ஹரபான்  மும்முனைப்  போட்டிகளுக்குத்   தயாராக    வேண்டும்   என்பது   அவரது   வாதம்.

கடந்த  வாரம்  மலேசியாகினியிடம்  பேசிய   அம்பிகா,   மும்முனைப்   போட்டி  என்றால்  2008-இலு  2013-இலும்   ஆளும்  கட்சிக்குக்  கிடைக்காமல்   போன  மூன்றில்  இரண்டு  பங்குப்  பெரும்பான்மை   திரும்பவும்   கிடைத்து  விடும்  என்று   கூறியிருந்தார்.