கேமரன் மலை, கேவியசின் கோட்டை?

Kaveyas‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 5, 2017 – அதிரடியாகவும் வல்லடியாகவும் அவ்வப்பொழுது கருத்து தெரிவிப்பதில் வல்லவர் ‘மைபிபிபி’ என்னும் மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியெஸ். உதாரணத்திற்கு, இம்மலையகத் தமிழர்களின் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட தமிழ்ப் பள்ளிகளையே ‘வேண்டாம்’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவிட்டு, பிறகு அவர் பின்வாங்கியதைக் குறிப்பிடலாம்.

தற்பொழுது, மஇகா-வின் தொகுதியான கேமரன் மலையில் போட்டியிடப் போவதாக அவர் மல்லுக்கு நிற்பதில், அவரின் மறைமுக இலக்கு அடங்கி இருக்கிறது.

கடந்த பதின்மூன்றாவது பொதுத் தேர்தலை எப்படி நடத்தினாரோ அதைப் போலத்தான இந்த 14-ஆவது தேர்தலையும் நடத்தப் போகிறார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப். கடந்த தேர்தல், 2013 மே திங்கள் 5-ஆம் நாளில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அடுத்தப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் வரும் மே   திங்கள் தொடக்கத்திலோ அல்லது ஏப்ரலின் பிற்பகுதியிலோதான் நடைபெற வேண்டும்.

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்னும் நடைமுறை பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டிருப்பதால், பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை யாராலும் வரையறுக்க முடியவில்லை. 2012-ஆம் ஆண்டில், இதோ தேர்தல் வந்துவிட்டது; அதோ தேர்தல் வருகிறது என்றெல்லாம் பேசப்பட்டதால் அந்த ஆண்டில் ஒரு நிச்சயமற்ற நிலை தேசிய அரசியலில் நிலவியது; இது, வர்த்தக-பொருளாதார மேம்பாட்டிலும் பிரதிபலித்தது;

ஏறக்குறைய இந்த ஆண்டும் 2012-ஆம் ஆண்டைப் போல  நிச்சயமற்ற போக்கு நிலவுகிறது. ஆட்சியாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேர்தலை நடத்திக் கொள்ள அரசியல் சாசன அடிப்படையில் வாய்ப்பு இருப்பதால், அதை வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதன் அடிப்படையில்தான், இந்த 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொதுத் தேர்தலைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்ப, அரசியல் போக்கும் நிலவுகிறது.

எது எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் தேசிய முன்னணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பது நிச்சயம். இதனால்தான், எப்போது தேர்தலை நடத்தி முடித்து தங்களின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பொருத்தமான நேரத்தை எண்ணியெண்ணி உறக்கமில்லா இரவுகளுடன் தத்தளிக்கிறது தேசிய முன்னணி.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணியைவிட, ஏறக்குறைய 1.5 விழுக்காட்டு வாக்குகளைத்தான் தேசிய முன்னணி அதிகமாகப் பெற்றது. அதற்குப்பின் இடைப்பட்ட ஆண்டுகளில் எவரும் எதிர்பாராத பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில் பல கணக்குகளைப் போட்டு பார்த்துவிட்ட தேசிய முன்னணி, இறுதியாக இரண்டு முடிவுகளை எடுத்துள்ளது: 2018-ஆம் ஆண்டு பிறந்ததும் தேர்தலை நடத்துவது அல்லது இந்த நவம்பரில் நடத்தி முடிப்பது என்பவைதான் அம்முடிவுகள்.

அநேகமாக, நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முடித்த கையோடு, தேர்தல் அறிவிப்பும் வெளிவரலாம் என்பதுதான் தற்போது புத்ரா ஜெயாவில் பிரதிபலிக்கும் நிலை.

இப்படிப்பட்ட நிலையில், நம்பிக்கைக் கூட்டணியும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது; அத்துடன், வரும் பொதுத்தேர்தலின்வழி, தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளை ஒரு பதம் பார்த்துவிடுவது என்ற முனைப்பில் நம்பிக்கைக் கூட்டணி ஈடுபட்டுள்ளது. குறிப்பாக மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கு போட்டி இட்டாலும் அந்தந்தத் தொகுதிகளிலெல்லாம் வலுவான வேட்பாளர்களை களம் இறக்கி அவர்களை வீழ்த்துவது; அதன்மூலம் அந்தந்தக் கட்சிகளை நேரடியாகவும் தேசிய முன்னணியை மறைமுகமாகவும் பலவீனப்படுத்துவது என்பதுதான் நம்பிக்கைக் கூட்டணி அண்மையில் வகுத்துள்ள புதுத் திட்டம்.

இதை யெல்லாம் கேவியெஸ் அறிந்துள்ளாரோ இல்லையோ, தெரியவில்லை. ஆனால், அடுத்து அமையப் போகும் புது அமைச்சரவையில் தாம் கேபினெட் அமைச்சராக இடம்பெற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகா தொகுதி என்று தெரிந்தபின்னும் வல்லடியாக அங்கு போட்டியிடப் போவதாக மல்லுக்கு நிற்கிறார்.

இத்தனைக்கும் மஇகா எந்த அணியில் இருக்கிறதோ, அதே அணியில்தான் அவரும் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், கேவியெஸின் இந்த (முற்போக்கில்லாத) முனைப்பை பிரதமரும் இரசிக்கவில்லை; தேசிய முன்னணியின் மற்றக் கட்சிகளும் ஆதரிக்கவில்லை; மஇகா-வின் கொதிப்பும் அடங்கவில்லை.

எந்தெந்தக் கட்சியின் வேட்பாளர்கள் எந்தெந்தத் தொகுதிகளில் களம் இறங்க வேண்டும் என்பதை தேசிய முன்னணித் தலைமைதான் உறுதி செய்யும் என்பதை கேவியெஸ் அறிந்திருந்தும், தேசிய முன்னணி தனக்கு வாய்ப்பு அளிக்காவிட்டாலும் தான் அங்குதான் போட்டியிடப் போவதாக வல்லடி புரிவது, அவர் கேமரன்மலையில் போட்டியிட வேண்டும் என்பதைவிட, அமைச்சராக வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

14-ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பும் அமைச்சர் வாய்ப்பும் உறுதிசெய்யப்பட்டு விட்டால், தான் அமைதி காப்பதுடன் தேசிய முன்னணியின் வெற்றிக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், தேசிய முன்னணி தலைவர்களுக்காக ‘செம்பு தூக்கவும் தயார்’ என்ற கருத்தையும் பொதிய வைத்துதான் அண்டை வீட்டுக்குள் புகுந்து சண்டித்தனம் செய்வதைப் போல, மஇகா-வின் நம்பிக்கைத் தொகுதியான கேமரன் மலையில் ‘இரவுச் சந்தை’ப் போடுகிறார் கேவியெஸ்.