‘பாரிசானுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’, ஹிண்ட்ராப் 14-வது பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யும்!

waytha - harapanஎதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ‘பாரிசான் நேசனலுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’ என ஹிண்ட்ராப்    இயக்கம் நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யப்போவதாக அதன் தேசியத் தலைவர் வேதமூர்த்தி பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில், பிகேஆர் கூலாய் கிளை ஏற்பாடு செய்திருந்த, சுதந்திரத் தினத் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட பொ.வேதமூர்த்தி, தனதுரையில் இவ்வாறு பேசினார்.

“நம் அனைவருக்கும் தெரியும், 2008-ல் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்கு ஹிண்ட்ராப்பின் பங்களிப்பும் அளப்பரியது. இந்தியர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட அப்பேரணி ஒரு முக்கியக் காரணம்.”

“2013 இல் நடந்தது ஒரு வருத்தத்திற்குரிய சம்பவம். நாங்கள் அப்போதைய மக்கள் கூட்டணியிடம்தான் முதலில் பேசினோம், ஆனால், அவர்களிடமிருந்து எங்களுக்கு நல்லதொரு பதில் கிடைக்கவில்லை. அதனால், பாரிசான் நேசனல் அழைத்தபோது, அங்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டது,” என்றார் அவர்.

இந்தியர்களுக்கானச் சிறப்புத் திட்டங்கள்

“அரசியல் சாசனத்தில் நமது உரிமைகளை முறையாக எழுதி வாங்காததால், 60 ஆண்டுகள் நிறைவடைந்தும், இன்னும் இந்தியச் சமூகம் இந்நாட்டில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 55 வருடங்களுக்கு முன் பெற்றிருக்க வேண்டிய உரிமைகளை, 5 ஆண்டுகளுக்கு முன் நான் கேட்டு வாங்கினேன்.”

“அந்த உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டு, பாரிசான் அதில் கையெழுத்திட்டது. அதோடு மட்டுமல்லாமல், என்னைச் செனட்டராக நியமித்து, பிரதமர்துறை அமைச்சில் துணையமைச்சர் பதவியும் கொடுத்தது. ஆனால், 8 மாதங்கள் கடந்தும், ஹிண்ட்ராப் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் அவர்கள் முன்னெடுக்காததால், சமுதாய நலன் கருதி, நான் என் துணை அமைச்சர் பதவியைத் தூக்கி போட்டுவிட்டு வந்தேன்,” என்று தனதுரையில் அவர் கூறினார்.

“பட்டம் பதவியைக் கொடுத்துவிட்டால், நாம் வாய்மூடி கிடப்போமென அவர்கள் நினைத்துவிட்டனர். என்றைக்கு ஒரு தலைவர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகிறாரோ, அன்றே அவர் மக்களுக்குத் துரோகம் செய்தவர் ஆகிவிடுகிறார். எனவே, இன்று நான் சொல்கிறேன், நஜிப் மலேசிய இந்தியர்களுக்கு துரோகம் செய்துவிட்டார். எனவே, அவர் சார்ந்த பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாரும் வாக்களிக்காதீர்கள்,” என அங்கு கூடியிருந்த மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஹிண்ட்ராப்புடன் கையெழுத்திட்ட, புரிந்துணர்வு ஒப்பந்தத்தைblue print waytha நடைமுறைபடுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், தற்போது ம.இ.கா-வுடன் புதிதாக ‘இந்தியர் பெருந்திட்டம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளது பாரிசான். இதுவும் ஒரு பொதுத் தேர்தல் நாடகம் என்று வேதா வர்ணித்தார். தேர்தல் முடிந்ததும், இதுவும் அநேகமாக மறக்கப்பட்டுவிடும் என்றும் இந்தியர்களை அவர் எச்சரித்தார்.

கடந்த தேர்தலின் போது, மலேசிய இந்தியர்களின் பின்னடைவுக்குப் பாரிசான் அரசாங்கம்தான் காரணம் என்று கூறி, மன்னிப்பு கேட்டுகொண்டு, தங்கள் மீது ‘நம்பிக்கை’ வைக்கும்படியும், மீண்டும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் நஜிப் கேட்டுகொண்டதை வேதா நினைவுறுத்தினார். ஆனால், மக்கள் கொடுத்த வாய்ப்பை, அவர்கள் மீண்டும் பாழாக்கிவிட்டனர் என்றார் அவர்.

நம்பி ஏமாந்த இனம் நாம்

மலாயாவில், தோட்ட வேலை (விவசாயம்) செய்ய ஆள் தேவை என்று கிராமத்துத் தலைவர்கள் ஆசை காட்டியதை நம்பி, இந்தியாவிலிருந்து நம் முன்னோர்கள் இங்கு வந்தனர் என்று வேதா கூறினார்.

“இங்கு வந்து பார்த்தப் போது, செய்ய வந்தது விவசாயம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, கங்காணிகள், கிராணிமார்களை நம்பி, அவர்கள் கொடுத்த வேலையைச் செய்யத் தொடங்கினர்.”

“நாடு சுதந்திரம் அடையும் தருவாயில், இந்தியர்களின் பிரதிநிதி ம.இ.கா. , எனவே ம.இ.கா. அனைத்தையும் பார்த்துகொள்ளுமென துங்கு கூறியதை நம்பினோம்.”

“சுதந்திரத்திற்குப் பின், இந்தியர்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட ம.இ.கா.வை நம்பினோம்.”

“கடந்த பொதுத் தேர்தலில், நஜிப்பை நம்பி பாரிசானுக்கு வாக்களித்தோம், அங்கும் நமக்கு மிஞ்சியது ஏமாற்றமே.”

“இப்படியாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை நம்பி நம்பியே இன்று நாம் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்,” என வேதமூர்த்தி கூறினார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான வழக்கு

மலேசிய இந்தியர்களின் பின்தங்கிய இன்றைய நிலைக்குப் பிரிட்டீஷ் அரசாங்கம்தான் காரணமெனக் குற்றம் சுமத்தி, 2007-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஹிண்ட்ராப்  ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

ஆகஸ்ட் 30, 2017-உடன், சரியாக 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை வேதமூர்த்தி நினைவு கூர்ந்தார்.

“அவ்வழக்கில் நாம் தோற்றுவிட்டோம், காரணம் நம்மிடமிருந்த ஆதாரங்களை முன்வைக்க முடியாத அளவுக்கு, அவர்கள் வழக்கை மூடிவிட்டனர். இருப்பினும், நான் மனம் தளரவில்லை. சில மாதங்களுக்கு முன் அவ்வழக்கை நான் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இன்னும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கண்டிப்பாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்பது நிச்சயம்,” என அவர் கூறினார்.

டாக்டர் மகாதீருடனான சந்திப்பு

Waytha-TunMடாக்டர் மகாதிருடனான பேச்சு வார்த்தைக் குறித்து பேசுகையில், பக்காத்தான் ஹராப்பானில் ஏற்கனவே இருக்கும் 4 கட்சிகளுடன், தங்களையும் இணைத்துகொள்ள வேண்டும் என்று தான் அவரிடம் கேட்டதாக வேதா தெரிவித்தார்.

“பாரிசானில் 12 உறுப்புக் கட்சிகள் உள்ளன, பக்காத்தானில் 4 கட்சிகள் உள்ளன. பக்காத்தானைப் பலமான ஓர் எதிர்க்கட்சி கூட்டணியாக்க ஹிண்ட்ராப் இயக்கத்தையும் அதனுடன் இணைத்துகொள்ள வேண்டுமென நான் பக்காத்தான் ஹராப்பான் தலைவரான டாக்டர் மகாதீரைக் கேட்டுகொண்டேன்.”

“பக்காத்தானில் உள்ள இந்தியத் தலைவர்கள், இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். இருப்பினும், தோட்ட மக்களை நன்கு அறிந்தவர்கள், அவர்களின் உண்மையான பிரச்சனையைப் புரிந்தவர்கள் ஹிண்ட்ராப் மட்டுமே. ஆக, இந்தியர்களின், குறிப்பாக, தோட்ட மக்களின் தேவைகளுக்குக் குரல் கொடுக்க ஹிண்ட்ராப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென நான் அவரிடம் கேட்டுகொண்டேன்,” என அவர் கூறினார்.

அதற்காக நான் மட்டும்தான் சிறந்த தலைவன் என்று நான் கூறவில்லை. பக்காத்தானிலும், ஏன் அரசு சாரா இயக்கங்களில்கூட நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆக, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, பாரிசான் நேசனலின் 60 ஆண்டு காலஆட்சியை வீழ்த்த பணிசெய்ய வேண்டும்,” என்று அவர் தனதுரையில் கூறினார்.