தமிழகத்தில் 3வது நாளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

students-protest-arts-collegeதிருவாரூர் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனிதா உயிரிழப்புக்கு காரணமான நீட் தேர்வு காரணமாக இனியொரு ஏழை மாணவர் உயிரிழக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் கடந்த 3 நாட்களாகவே மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் .

இந்நிலையில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வி உரிமையை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போன்று நாமக்கல் அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வை தடை செய்வது மட்டுமே என்று மாணவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கந்தசாமி கல்லூரி, கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் வருங்காலங்களில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பது சவாலாகிவிடும் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். கல்லூரியை விட்டு வெளியே வந்து போராடினால் அவர்களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரிலும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் அனிதாவின் படத்தை ஏந்தி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

tamil.oneindia.com

TAGS: