டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

vivasayi poraddam

இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் 53 ஆம் நாளான இன்று புதன்கிழமை விவசாயி ஒருவரை பிணத்தைப் போல படுக்க வைத்து, ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

விவசாய கடன்களை ரத்து செய்வது, நதிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அழிந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்காதது, வறட்சி நிவாரணம் வழங்காதது, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்காதது, இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்காமல் இருப்பது காவிரியில் நீர் வழங்காமல் இருப்பது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மெத்தனப்போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாதது, கதிராமங்கலம், நெடுவாசல், நல்லாண்டர் கொல்லை போன்ற ஊர்களில் விவசாய நிலங்களை அழித்து கொண்டிருப்பதாக விமர்சிக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தை அகற்றாதது போன்ற அனைத்து பிரச்சனைக்ளுக்கும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இறந்தது போன்று கிடத்தப்பட்ட விவசாயி ஒருவரை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், மெத்தனமாக இருக்கும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். -BBC_Tamil

TAGS: