உரிமைக் குரல் தொடரும்: குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான வளர்மதி ஆவேசம்

valarmathipicநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 23 வயதான சேலம் வீராணத்தை சேர்ந்த மாணவி வளர்மதி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் விடுவிக்கப்பட்டார்

கதிராமங்கலம் நெடுவாசல், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் விதமாக சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் அத்திட்டங்களைக் கைவிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

இதுதொடர்பாக சேலம் காவல்துறையினரால் ஜூலை 13-ஆம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் முதுநிலை இதழியல் படிப்பு படித்து வந்த இவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி ஜூலை 17-ஆம் தேதி வளர்மதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து வளர்மதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வளர்மதியின் தந்தை வழக்கு

இதனிடையே தனது மகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதைத் தொடர்ந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பொன்னுசாமி மற்றும் கலையரசன், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து வளர்மதி சிறை நடைமுறைகள் முடிவடைந்து, வியாழக்கிழமை பிற்பகல், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு பேசிய வளர்மதி,” உரிமைக்காக போராடியதை தீவிரவாத செயலாக சித்தரித்து, மாணவி என்று கூட பார்க்காமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவிற்கு தான் இந்த அரசு உள்ளது. இதுதான் இந்த அரசின் உண்மையான முகம். ஜனநாயக அடிப்படையில் எங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்போம்” என்கிறார். -BBC_Tamil

TAGS: