அனிதாவுக்கு நீதி கோரி 6-வது நாளாக தொடரும் போராட்டம்… களத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்!

anitha-protest4545திருவாரூர் : நீட் தேர்வுக்கு தடை கோரி அரசுப் பள்ளி மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர், தங்களது மருத்துவ உயர்கல்விக் கனவை நசுக்கும் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்து பத்தாம் வகுப்பில் 476 மதிப்பெண், பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆயிரத்து 176 மதிப்பெண் என்று எந்த டியூஷனும் செல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சாதித்து காட்டினார் குழுமூர் மூட்டை தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா. ஆனால் நீட் தேர்வில் 700 மதிப்பெண்ணிற்கு வெறும் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் மருத்துவ கனவு கலைந்தது.

இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனிதா இறுதிவரை சொல்லி வந்தது, தனக்காக இல்லாவிட்டாலும் தன்னைப் போல கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்காகவாவது நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதே.

அனிதாவின் இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ அமைப்பினர் தமிழகத்தை போராட்ட களமாக்கியுள்ளனர். கல்லூரி மாணவர்களைப் போலவே அரசுப் பள்ளி மாணவர்களும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களின் உயர்கல்வியை பாதிக்கும் நீட் வேண்டவே வேண்டாம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இதே போன்று நெல்லை அருகே சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களும், அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பள்ளியின் மாணவர்களும் சாலை மறியல் செய்தனர். மயிலாடுதுறையிலும் நகராட்சி பள்ளி மாணவர்கள் நீட் தடை கேட்டு போராட்டத்தில் இறங்கனிர். பள்ளி மாணவர்களின் மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

tamil.oneindia.com

TAGS: