ரொகிங்யா, தமிழர் படுகொலைகளும் – அதில் மதமும் அரசியலும்!

rohingya2ஞாயிறு நக்கீரன்,  செப்டெம்பர் 10, 2017.  நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான் சிலோன் என்னும் தீவு நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டார். இன்றைய இலங்கையின் அன்றைய பெயர் அதுதான்; அந்த நாட்டின் விமானத் தளத்தில் அடி வைத்ததும் அவரை ஆச்சரியமும் பிரமிப்பும் தொற்றிக் கொண்டன;   இயற்கை வளம், செழிப்பான மண், மக்களின் அயராத உழைப்பு எல்லாமும் சேர்ந்து அந்த நாட்டை எழில் கொஞ்சும் பூங்காவாக மாற்றியிருந்தக் காட்சியை துங்கு கண்ணார அள்ளி அள்ளிப் பருகினார்.

இந்த நாட்டைவிட நம் நாடு அரை நூற்றாண்டு பின்தங்கியுள்ளதே என்று மனதிற்குள் பொறுமிய துங்கு, தேயிலை ஏற்றுமதியிலும் செயற்கை வைர உற்பத்தியிலும் உலக அளவில் முன் வரிசையில் இலங்கை திகழ்கிறது என்பதை அறிந்து மேலும் மேலும் வியப்பில் ஆழ்ந்தாராம்.

இன்றளவில் இவையெல்லாம் பழங்கதை; இன்று அந்த நாடு பீடையுற்றுக் கிடக்கிறது. இனத்தாலும் மொழியாலும் சம்பந்தமே இல்லாத சீனாவிடம் பொருளாதாரக் கடனாளியாக மண்டியிட்டு மன்றாடுகிறது. துங்கு உயிருடன் இருந்து ஒருவேளை இன்று அங்கு சென்றால், மலேசியாவைவிட ஒரு நூற்றாண்டு பின்தங்கி இருக்கிறதே இலங்கை என்று கருதுவார்.

tamil-peopleஇலங்கைத் தீவு நாடு இந்த அளவுக்கு சீர் கெட்டு, பெயர் கெட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்த ஒரே காரணம் மதத் தீவிரவாதம்தான்; இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மைச் சிங்கள மக்கள் பின்பற்றும் பௌத்த சமயத்தின் சாமியார் ‘ஆசாமி’கள் கைக்கொண்டுள்ள சமய வெறிதான்; காட்டு மாட்டை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் அங்கேயேக் கிடந்து வேடர்களின் அம்புக்கு இரையாவதைப் போல ஈழத் தமிழர்களின் இரத்தத்தை வெதுவெதுப்புக் குறையாமல் பச்சையாகக் குடித்துவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டு மல்லாந்து கிடக்கும் சிங்களன் இன்று சீனனின் கூரீட்டிக்கு முகம் கொடுக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறான்.

அப்பாவித் தமிழச்சியரின் சாபம் சும்மா விடுமா என்ன? அதுவும் எரிந்த வயிறோடும் பற்றிய மனதோடும் விட்ட கொடும் சாபம் அல்லவோ?

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சட்ட மாமேதை அம்பேத்கார் விரும்பி ஏற்றுக் கொண்ட சமயம் புத்த சமயம். அன்பு, அமைதி; சாந்தி சமாதானம்; பாசம் பரிவு; உண்மை நேர்மை; கனிவு இரக்கம்; ஒற்றுமை ஓர்மை; தானம் நிதானம்; இவை யாவும் நிரம்பிய சமயம் புத்தன் வகுத்த பௌத்த சமயம் என்று அவர் கருதினார். எல்லாவற்றையும் விட, அரவணைக்கும் தன்மை நிறைந்தது பௌத்தம் என்றும் சகோதரப் பாசமும் நேசமும் நிறைந்த சமயம் இந்த சமயம் என்றும் அவர் கருதினார். அதற்கும் மேலாக, இந்து சமயத்தில் பிறந்து தான் அனுபவித்த தீண்டாமை என்னும் கொடுமை இல்லாத சமயம் பௌத்த சமயம் என்று அம்பேத்கார் முழுமையாக நம்பினார்.

 

இதனால்தான், இந்து சமயத்தைவிட்டு பௌத்த சமயத்திற்கு அவர் சென்றபோது, போகிற போக்கில் பெரியாரையும் துணைக்கு அழைத்தார். பெரியாரைப் பற்றி அம்பேத்கார் போட்ட கணக்கு பிழையாகிவிட்டது. சாதிப் பயிரை தழைய தழைய வளர்ப்பது சமயம் என்பதால், அந்தச் சமயமே கூடாதென்ற பெரியாரிடம்போய், இந்த சமயத்திலிருந்து அந்த சமயத்திற்கு செல்லலாம் வாருங்கள் என்றால் எப்படி?

buddhaஇதுவொரு புறமிருக்க, இந்து சமயத்தைவிட்டு அகன்ற அண்ணல் அம்பேத்கார், இந்து சமயத்தை ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் போனார். இந்தியாவின் மத்தியப் பகுதியில் போபால் நகருக்கு அருகில் இவர் பிறந்த  கிராமத்தில் ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பிய வேளையில், பொதுக் குளத்தில் குளித்து விட்டார் என்பதற்காக, அந்தக் குளம் தீட்டுப் பட்டு விட்டதாகவும் அதனால் அந்த ஊர் பார்ப்பனர்களும் உயர் சாதிக்காரர்களும் சேர்ந்து கங்கையில் இருந்து 108 குடங்களில் புனித நீர் கொண்டு வந்து அந்தக் குளத்திற்கு தீட்டு கழித்தார்களாம்.

இப்படியெல்லாம் தீண்டாமைக் கொடுமையைத் தொடர்ந்து அனுபவித்து அனுபவித்து ஏராளமான சந்தர்ப்பங்களில் அவமானப்பட்ட இந்த சட்ட மேதை, உயர்க்கல்விக்காக வெளிநாடு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், இன்னுமொரு பெருஞ்சிறப்பையும் அவர் அடைந்தார். இந்திய அரசியல் சாசனத்தை வரையறுத்தக் குழுவை நேரு நியமித்தபொழுது அதில் இடம்பெற்ற ஐவரும் பிராமண குலத்தினராகவும் உயர்சாதியினராகவும் இருந்தனர். கே.எம்.முன்ஷி, சாதுல்லா, டி.டி.கிருஷ்ணாமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என். கோபாலசாமி ஐயங்கார் என்போர்தான் அந்த ஐவரும். இந்த ஐவருக்கும் தலைவராக அம்பேத்கரை நியமித்தார் நேரு.

நேரு சமதருமவாதியாக இருந்தாலும்கூட அம்பேத்காரை வெறுமனே இந்தப் பதவிக்கு நியமிக்கவில்லை. மாறாக, அண்ணல் அம்பேத்கர் அந்த அளவிற்கு சட்ட நுணுக்கமும் நுட்பமும் அறிந்திருந்தார். அனைத்து இந்திய அரசியல் சாசனம் முதன்முதலில் 1935-இல் பிரிட்டீஷ் மகாராணி முன்பு இலண்டனில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் அந்தக் காலக்கட்டத்தில் கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா என்றெல்லாம் நான்கைந்து இந்தியாக்கள் இருந்தன. அதனால்தான், ‘அனைத்து இந்தியா’, ‘அனைத்து இந்தியா’ என்றுதான் பிரிட்டீஷ் ஆவணங்கள் அனைத்திலும் அப்போது குறிப்பிடப்பட்டன. ஆனால், இப்போது இருப்பது ஒரேவோர் இந்தியாதான். இருந்தாலும் இந்தியர் அனைவரும் இன்னமும் அனைத்து இந்தியா என்று அழைத்துக் கொள்வது பழக்க தோஷமும் அறியாமையும்தான். இதுவொரு புறமிருக்க, 1940-ஆம் ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெறும் நேரத்தில் சுதந்திர இந்தியாவிற்கு ஏற்ப பிரட்டீஷ் இந்திய அரசியல் சாசனத்தை திருத்தி வரைவதற்காகத்தான் மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து சட்ட அறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தார் நேரு. அந்தக் குழுவிற்கு தலைமை ஏற்கும் அரிய வாய்ப்பைத்தான் அம்பேத்காருக்கு அள்ளி அளித்தார் ஜவஹர்லால் நேரு.

அப்படி தலைமைப் பொறுப்பை ஏற்ற அந்த நாள், அம்பேத்காரின் வாழ்வில் ஒரு பொன்னாள். எந்த பார்ப்பனரும் உயர் சாதியினரும் தான் குளித்த குளம் தீட்டானது என்று கொக்கரித்தனரோ அதேப் பிராமணர்களுக்கும் உயர்சாதிக்காரர்களுக்கும் தலைமையேற்ற நாளை தம் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க நன்னாளாகக் கருதினார் அம்பேத்கார்.

அப்படிப்பட்ட சட்ட மேதை விரும்பி ஏற்றுக் கொண்ட மதம் பௌத்த சமயம்.

இவர் மட்டுமா? இரத்த சகதியையும் போர் முனையையும் கண்டு ஒருபோதும் கலங்காமல் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட சாம்ராட் அசோகனையே மனம் கசிய வைத்த சமயம் ‘புத்தம்-சரணம்-கச்சாமி’ என்னும் மந்திரத்தை மூல மந்திரமாகக் கொண்ட பௌத்தம். மௌரியப் பேரரசையே நிறுவிய அந்த அசோகச் சக்ரவர்த்தி, தன் கையில் ஏந்தியிருந்த வாளை வீசிவிட்டு, நாடு பிடிக்கும் மண்ணாசையையும் தொலைத்துவிட்டு, பொன்னாசையையும் துறந்து இருக்கிய மண்ணையும் மக்களையும் கட்டியாண்டேலேப் போதும் என்ற முடிவுக்கு வரவும் மக்கள் நலப் பணி ஆற்றவும் தூண்டிய சமயம் பௌத்த சமயம்.

அப்படிப்பட்ட பௌத்த மதம் இன்று இலங்கையில் காலாடித்தனமான சாமியான்களிடம் சிக்கிக் கொண்டதுடன் அன்றி, அரசியலிலும் தலைகால் தெரியாதபடி அவர்களை ஆட்டம் போடவும் வைக்கிறது. அன்பு ஒன்றுதான் உலகை வெல்லும் நெறி என்று போதித்த புத்தனின் வாக்கும் பொய்த்துவிட்டது. மனிதர்களை மிகவும் வருத்தும் ‘பிணி-மூப்பு-சாக்காடு’ இந்த மூன்றுக்கும் விடைகாண விரும்பி கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளையையும் விட்டுவிட்டு அரண்மனை வாழ்வையும் துறந்துவிட்டு துறவறம் பூண்ட புத்தன் கண்ட புத்தமதம் கண்டது இதுவரை ஒன்றுமில்லை;

இன்றைய பௌத்த மதத்திற்கு தெரிந்ததெல்லாம் இரத்தவெறிதான். இந்த ரத்த வெறிதான், இதே ஆசியக் கண்டத்தில் உள்ள புத்த நாடுகளில் இன்றளவும் தொடர்கிறது. அண்மைக் காலம்வரை இலங்கையில் கருக்கொண்டிருந்த இந்த இரத்த வெறி, தற்பொழுது மியன்மாரில் மையம் கொண்டுள்ளது.

முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட அந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் அந்த மண்ணின் மேன்மைக்கும் பொருளாதார உயர்வுக்கும் அதிகமாகப் பாடாற்றி-யுள்ளனர். அப்படி இருந்தும் இதே பௌத்த மதத்தினர் தமிழர்களின் சொத்தையும் உடைமையையும் பிடுங்கிக் கொண்டு நிர்க்கதியாக விரட்டியடித்த போது அப்போதைய காங்கிரஸ் அரசும் கண்டு கொள்ளவில்லை; நேருவும் தெரியாததைப் போல இருந்துவிட்டார்.

1970-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானைப் பிரித்து வங்காள தேசம் என்னும் ஒரு நாட்டை இந்தியா புதிதாக உருவாக்கியபோது, மிரண்டு அரண்ட பர்மா, கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருந்தது. இடையில் மீண்டும் தறிகெட்டு பேயாட்டம் ஆடுகிறது.

rohingya_burmaதற்பொழுது ரொஹிங்கியா என்னும் மொழியை தாய் மொழியாகக் கொண்ட சிறுபான்மை நலிந்த மக்களை விலங்கிணும் கேவலமாக புழு-பூச்சியைவிட சிறுமையாகக் கருதி அந்த மக்களை அழிக்கவும் விரட்டவும் முற்படுகிறது. இத்தனைக்கும் தற்பொழுது இராணுவ ஆட்சியின் சாயலில்தான் அங்கு நிர்வாகம் நடைபெறுகிறது. உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆங் சான் சூகிதான் அந்த அரசாங்கத்திற்கு ஆலோசகராக இருக்கிறார்.

இருந்தும் ரொகிங்கியா என்னும் ஓர் இனத்தையே, அது சிறுபான்மை இனமாக இருக்கிறது என்ற ஒரேக் காரணத்திற்காக அந்த மக்களை ஒழித்துக் கட்டும் முனைப்பில் இறங்கியுள்ளது இன்றைய மியன்மார் அரசு. பண்பட்ட அரசியல் தலைவராகக் கருதப்பட்ட ஆங் சூ கியும் ரொகிங்கியா மக்களுடன் சமாதான வாழ்வு வாழ்வதைப் பற்றி அக்கறைப்படவில்லை. அங்கு நிலவும் உண்மை அறிய சென்ற ஐநா அமைதிக் குழுவையும் மியன்மார் அனுமதிக்கவில்லை; முன்னர் இலங்கையும் இப்படித்தான் நடந்தது. உள்ளபடியே பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல இருக்கும் ஐ.நா. மன்றம் இருந்தாலும் இல்லாமலே போனாலும் இரண்டும் ஒன்றுதான்.

இந்த நுற்றாண்டின் முதல் பத்தாண்டில் முதல் மனித அவலத்தை பௌத்த சமயம் நடத்தி முடித்துவிட்டது; இப்பொழுது அடுத்தப் பத்தாண்டில் இரண்டாவது மனித அவலத்தை இதே பௌத்த சமயம் நடத்திக் கொண்டிருக்கிறது. நடைபெறும் இடம்தான் வேறு; ஆனால் அருகருகில்.

இப்பொழுது உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இமயமலை அடிவாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கு  இடையே எழுந்துள்ள போர் மேகமோ  ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்கா-ஜெர்மனி-பிரான்ஸ் உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் சீனா-ஜப்பான் உள்ளிட்ட கீழை நாடுகளுக்கும் வட மொரியா தண்ணீர் காட்டி இரத்தத்தை சூடேற்றுவதோ இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோ அல்ல.

உலக நாடுகளுக்கே சோறு போடும் அளவிற்கு நெற்பயிரை விளைவித்து அறுவடை செய்யக் கூடிய மியன்மார் நாடு, அதை யெல்லாம் விடுத்து மனித உயிர்களை அறுவடை செய்கிறது. இந்தப் போக்கு உலகத்து நாடுகளை யெல்லாம் வருத்தமடையவே செய்கிறது. வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மக்களின் அவலத்தைப் போக்கி உதவிக்கரம் நீட்ட பல நாடுகளும் முன் வந்துள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது.

இப்படி ரோகிங்கியா மக்களுக்கு அன்புக்கரம் நீட்டவும் உற்றுழி உதவவும் முனைப்பு காட்டுகின்ற நாடுகளில் மலேசியா முதல் இடத்தில் உள்ளது. ஆசியான் என்னும் கூட்டமைப்பில் இப்படிப்பட்ட மனித அவலம் நிகழ்வதை நினைந்து நினைந்து மனம் வாடும் மலேசியா, இந்த மனித அவலத்திற்கு எதிராக ஆசியான் சார்பில் ஒரு கண்டனக் குரலை ஒருமித்த அளவில் எடுக்க முடியவில்லை.

காரணம், இதே ஆசியான் என்னும் வட்டார-பொருளாதார-வர்த்தக-புவிசார் கூட்டமைப்பில்தான் மியன்மாரும் இடம்பெற்றிருக்கிறது; ஆசியானின் கொள்கைப்படி எந்த முடிவாக இருந்தாலும் ஆசியானில் இடம்பெற்றுள்ள பத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஒருமித்த குரலில்தான் முடிவெடுக்க வேண்டும் என்பது கொள்கை முடிவு.

அது இப்பொழுது முடியாமல் போகவே, மலேசியா கைகளை பிசைந்து கொண்டு நிற்கிறது. சரி, மற்ற ஒன்பது நாடுகளாவது ஒன்று சேர்ந்து மியன்மாருக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றால் அதற்கும் இடம் இல்லை. காரணம், கொள்கை முடிவுப் படி பத்து நாடுகளும் சேர்ந்து எடுக்கும் ஒரு முடிவுதான் மற்ற நாட்டைக் கட்டுப்படுத்தும் என்பது ஒருபுறம் இருக்க, இப்போது மலேசியாவின் சிந்தையைப் பிரதிபலிக்கும் ஒரே நாடு இந்தோனேசியாதான். ஆசியான் மண்டலத்தைப் பொறுத்தவரை, மலேசியாவும் இந்தோனேசியாவும்தான் மியன்மாருக்கு எதிராக ஓங்கி முழங்குகின்றன.

மொத்தத்தில், மலேசியாவால் ஆசியான் மட்டத்தில் எதும் செய்ய முடியாத நிலையில், குறைந்த பட்சம் இந்தோனேசியாவைத் துணைக் கொள்கிறது. இந்தோனேசியா துணை வந்தாலும் வராவிட்டாலும்கூட தன்னாலான அனைத்தையும் ரோகிங்கியா மக்களுக்கு அளிக்க மலேசியா அணியமாக இருக்கிறது. அவர்களின் துயரைக் களைவதில் மலேசியா மிகுந்த முனைப்பு காட்டுவது, அதன் மனித நேயத் தன்மையை உலகுக்கு பறைசாற்றுகிறது.

மனித அவலத்தைக் களையும் மலேசியாவின் கருணைமிகுப் போக்கை இந்த உலகின் அனைத்து நாடுகளும் கைக்கொள்ள வேண்டும். தற்பொழுது ரோகிங்கியா மக்கள் அண்டை நாடு என்பதாலும் முஸ்லிம் நாடு என்பதாலும் வங்காள தேசத்திற்கு பேரளவில் இடம்பெயர்கின்றனர். இந்த விடயத்தில், வங்காள தேசத்திற்கு தோள் கொடுக்க மலேசியா அக்கறைக் காட்டுவதும் பாராட்டிற்குரியது.

ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மனதை நெருடுகிறது.

Tunku-Najib with Rajapakseஇதே பௌத்த சமயத்தால் ஈழத் தமிழ் மக்கள் பேரவலத்தை எதிர்கொண்டபோது, இதே மலேசியா குரல் கொடுக்கவில்லையே. கண்டனம்கூட தெரிவிக்க வேண்டாம், குறைந்தபட்சம் அப்பாவி ஈழத் தமிழ் மக்களுக்காக அனுதாபத்தைக்கூட தெரிவிக்க வில்லையே. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசுடனான இராஜாங்க உறவை மேலும் பலப்படுத்தியது.

தற்பொழுது துணைப் பிரதமர் சொல்கிறார்: ரோகிங்கியா மக்களுக்கு மலேசியா உதவிக்கரம் நிட்டுவது சமயத்தின் அடிப்படையில் அல்ல; மாறாக, மனித நேயத்தின் அடிப்படையில்தான் என்று. நாமும் நம்ப வேண்டும், அதுதான் நாடக அரசியல்.