இலக்கியவாதியா, அரசியல்வாதியா, பாரதி?


இலக்கியவாதியா, அரசியல்வாதியா, பாரதி?

Barathiyar‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 11, 2017.  மாகவி பாரதியாருக்கு இன்று நினைவு நாள்.  இந்தியா என்ற பத்திரிகையின் ஆசிரியராக விளங்கினாலும்  இந்தியாவை பாரதம் என்று அழைக்கத்தான் பிடிக்கும் பாரதிக்கு. பிறந்தது முதலே புரட்சி மனப்பான்மை கொண்டிருந்த பாரதி, இந்திய விடுதலைப் போராட்டம் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் மிதவாதிகள் ஓர் அணியாகவும் மராட்டிய சித்பவன பார்ப்பனரான பாலகங்காதர திலகர் தலைமையில் தீவிரவாதிகள் இன்னோர் அணியாகவும் செயல்பட்ட காலத்தில் திலகர் பக்கம் நின்றவர் பாரதி.

அதேவேளை, ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ‘பிளேக்’ என்னும் கொள்ளை நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்தடுத்த மடிய நேர்ந்தபோது, எலியால்தான் இந்த நோய் பரவுகிறது என்பதை அறிந்த அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் எலி ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட நேரத்தில், அதற்கு குறுக்கே நின்றவர் திலகர். பிள்ளையாரின் வாகனமான எலியைக் கொல்லக் கூடாதென்று எலி ஒழிப்பிற்கு மறுப்பு சொன்ன திலகர், மக்கள் மடிவதைப் பற்றி கவலைப்படவில்லை; ஆனால், சமூக நல சிந்தை கொண்ட பாரதியோ திலகரின் இத்தகையச் செய்கையை எள்ளிநகையாடினார். இந்தியாவின் தென் பகுதியில் விநாயகர் வழிபாட்டிற்கும் விநாயக சதுர்த்திக்கும் வித்திட்டவர் இதே திலகர்தான்.

தமிழ்-ஆங்கிலம்-பிரெஞ்சு-இந்தி-வங்காள மொழிகளில் தேர்ந்தவராகவும் தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளை அறிந்தவராகவும் திகழ்ந்த பாரதியார் பன்மொழி அறிஞராவர். அவர் புத்தாக்க எழுத்தாளர்; பெரும் பாவலர்; தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்;  ஆங்கிலப் பத்திரிகையாளர்; பெண் விடுதலை விரும்பி; சமூக சீர்திருத்தவாதி; விடுதலை வீரர்; புரட்சி எண்ணம் கொண்டவர்; அச்சத்தை அறியாதவர் என்றெல்லாம் பன்முகப் பாங்கு கொண்டவர்.

ஆயிரக் கணக்கில் ஆலயங்களை எழுப்புவதைக் காட்டிலும் பல்லாயிரத்தோருக்கு அன்னமிடுவதையும் விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி மேன்மைக்குரியது என்று உரைத்த சி.சுப்பிரமணிய பாரதி என்னும் இயற்பெயரைக் கொண்ட மாகவி பாரதியாருக்கு இன்று நினைவு நாள்.

இக்காலத் தமிழினத்திற்கும் தமிழிலக்கியத்திற்கும் ஒரு சிறப்புக் குணமிருக்கிறது. பத்து பேர் ஒருவரைப் பாராட்டினால் தானும் பாராட்டி வைப்பது; அதைப்போன்று ஒருவரை பத்து பேர் தாக்கினால் தானும் ஒரு கல்லை எடுத்து வீசுவது என்பதுதான் அது.

இன்று எத்தனையோ அடைமொழிகளால் பாரதியாரைப் பாராட்டுகிற மனிதர்கள் கூட்டம், அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவரின் எழுத்தையும் மதித்ததில்லை; கருத்தையும் கருதியதில்லை. ஆங்கிலேயன் அளித்த அனுகூலத்தை ஏற்றுக் கொண்டு, அவரைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்தனர் சிலர் அந்நாளில். வீரமும் தீரமும் மிக்க உடற்கூட்டிலிருந்து ஆவி பிரிந்து மண்ணன்னையின் மடியில் அவர் சரிந்து கிடந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்த அப்போதைய முப்பது கோடி பேரில் முப்பது பேர்கூட கூடவில்லை.

பாரதியாரின் தந்தையாரும் வ.உ.சிதம்பரனாரின் அப்பாவும் உற்ற நண்பர்கள். அவர்களைப் போலவே, பாரதியாரும் வ.உ.சியும் விழுமிய நட்புடன் திகழ்ந்தனர். நெல்லையிலிருந்து சென்னைக்கு பெயர்ந்து ஆங்கிலேயரின் நெருக்கடிக்கிடையே வாழ்ந்த நிலையிலும்இவர்களின் நட்பு தொடர்ந்தது. பாரதியார் தன் சமகாலத் தமிழ்ப் பற்றாளரும் சமூகப் போராளியும் விடுதலைப் போராளியுமான வ.உ.சி.யை ‘பிள்ளைவாள்’, ‘பிள்ளைவாள்’ என்றேதான் வாஞ்சையுடன் அழைப்பாராம். சிதம்பரனாரோ பாரதியை ‘மாமா’, ‘மாமா’ என்று செல்லமாகக் கூப்பிடுவாராம். இதனால்தான், வ.உ.சி. சிறைப்பட்டு மாட்டைப்போல செக்கிழுத்து மட்டியைப் போல கல்லுடைத்த தகவலையெல்லாம் அறிந்து கலங்கினாராம் பாரதி.

அப்படிப்பட்ட வ.உ.சி., கோவையிலும் கண்ணனூரிலும் அடி வாங்கி, உதைப்பட்டு, வதைப்பட்டு, வாடி, வதங்கி, தன் வாழ்வையும் வசந்தத்தையும் சிறைச்சாலைகளிலேயேத் தொலைத்துவிட்டு, நீண்ட சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தபொழுது அவரை வரவேற்க சிறைவாசலில் வ.உ.சியின் மனைவி மீனாட்சி அம்மாள், உறவினரான கணபதி பிள்ளை, உற்ற நண்பர் சுப்பிர மணிய சிவா ஆகிய மூவர் மட்டுமே காத்திருந்தனராம். ஒருவர், இல்லாதபோதுதான் அவரை இந்த உலகம், குறிப்பாக தமிழுலகம் பாராட்டும் போலும்.

அது போகட்டும்; மீண்டும் பாரதியைப் பற்றிய சிந்தனைக்கு வருவோம்!

தமிழின்பால் தனியாத காதல் கொண்ட பாரதி, அயல் மொழிகளில் படைக்கப்பட்ட சிறந்தப் படைப்புகளைத் தமிழில் பெயர்த்திருக்கிறார். அவர் சிறந்த பொழி பெயர்ப்பு அறிஞருமாவார். அழகியல் உணர்வுமிக்க பாரதியார், பழந்தமிழ் இலக்கியங்களில்  மூழ்கித் திளைத்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற அளவிற்கு புகழப்படும் இம்மாகவி பாரதியார், பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய முறையில் பாடல்களை இயற்றினார்.

ஆனால், தமிழிலக்கிய உலகில் இன்று புதுக்கவிஞர்களும் உரை வீச்சர்களும் இலட்சக் கணக்கில் தோன்றுவதற்குக் காரணம் பாரதிதான். அவர்தான் முதல் புதுக்கவிஞர்.

தொல்காப்பியரின் இலக்கணச் சட்டத்தை அப்பட்டமாக மீறியவர் பாரதி. இது, தமிழ் இலக்கியத்திற்கு சாதகமா அல்லது பாதகமா என்பதைத் தீர்மானிக்க இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும். நம்மை அடுத்தடுத்த வருகின்ற தலைமுறையினர் இது குறித்துத் தீர்மானிக்கட்டும்.

எது எவ்வாறாயினும் அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் இரு பயணங்களை ஒருசேர மேற்கொண்ட பாரதியின் தமிழ்த் தொண்டும் தமிழ்க் குலத்தொண்டும் போற்றுதற்குரியது.

மிகப்பெரிய மனிதரைப் போல வாழ்ந்ததுடன் செம்மாந்த கருத்துகளையும் தம் சிந்தைச் சுரப்பியிலிருந்து தமிழ் மக்களுக்காக கரந்து வைத்த பாரதியார், இளைஞர் என்ற தகுதியுடனேயே 1921-ஆம் ஆண்டில் செப்டம்பர் 11-ஆம் நாளில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார். அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் தமிழ்ச் சமுதாயத்தில் மறுமலர்ச்சியும் தமிழ் இலக்கியத்தில் புதுமையும் இன்னும் நிகழ்ந்திருக்கும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • en thaai thamizh wrote on 11 செப்டம்பர், 2017, 19:48

    பாரதி மிக சிறந்த சமூக சீர்திருத்த வாதி. அவர் உயிருடன் இருந்த போது முதுகு எலும்பில்லா தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை. சீ- நினைக்கவே எரிகிறது.

  • நவின் பாரதி wrote on 13 செப்டம்பர், 2017, 8:09

    சின்ன வயதிலேயே அரிய பெரிய சாதனைகளை செய்த தவப்புதல்வன் பாரதி. அவற்றில் தலையாயது தமிழனை தமிழுணர்வும் சுயமரியாதையும் மிக்கவனாக ஆக்க வேண்டும் என்பது. சுருங்கச் சொல்லவேண்டுமானால் இலக்கிய ஆற்றில் மிதந்து கொண்டே அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்ய முனைந்த இறுமாப்புக் கவிஞன் பாரதி…இன்றைய தலைமுறைக்கு அவனது பிறப்பும் இறப்பும் தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் அவனது முழு பெயரும் கூட தெரியாமல் இருப்பது நாம் செய்த கருமமா அல்லது இளைய தலைமுறையினர் செய்த பாவமா?

  • K.I.Narayanan wrote on 14 செப்டம்பர், 2017, 11:04

    மகாகவி பாரதியார் இலக்கியம் அறிந்த அரசியல்வாதி: அரசியல் அறிந்த இலக்கியவாதி. அவரது புகழ் வாழ்க! வாழ்கவே!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: