டையம்: மக்கள் மடையர்கள் அல்ல

Diamமுன்னாள் நிதி அமைச்சர்   டையம் ஸைனுடின் தாம் இப்போது அரசாங்கத்தில் இருந்தால், பதவியை விட்டு விலகுவேன் என்று கூறுகிறார்.

செப்டெம்பர் 7 ஆம் தேதி இடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், “நான் அரசாங்கத்தில் இருந்தால், நான் பதவியிலிருந்து விலகக்கூடும். அது எனக்கு சுலபமானது. பதவியைத் துறந்து விட்டு, போய்த் தூங்குவேன்”, என்று அவர் கூறுகிறார்.

அந்த வீடியோ பதிவில் டயம் 1எம்டிபி விவகாரம் கையாண்ட முறை குறித்து அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். மக்களிடம் உண்மையைக் கூறுங்கள் என்று அவர் அதில் வலியுறுத்துகிறார்.

1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி பொதுவுறவு துறையில் சிறந்தவர். ஆனால், 1எம்டிபி பற்றிய மக்களின் கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லை என்றாரவர்.

“1எம்டிபி பற்றிய பிரச்சனையைத் தீருங்கள். 1எம்டிபியில் என்ன நடக்கிறது என்று மக்களிடம் கூறுங்கள். பின்னர், கடவுள் கிருபையால் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

“நீங்கள் தொடர்ந்து மூடிமறைத்தால், மக்கள் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள்.

“இது ஒரு நெருக்கடியானது. நீங்கள் பணம் எங்கே போனது என்றுகூட கூறமுடியாவிட்டால், எப்படி மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள்”, என்று டை யம் மேலும் கூறினார்.

இது ஒரு ‘மலாய் அரசாங்கம்’

“நாம் நமது மக்களுக்கு கல்வி அறிவு கொடுத்துள்ளோம். அதனால், அவர்களை முட்டாள்கள் என்று எண்ணாதீர்கள். என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

“ஒரு பல்லின சமுதாயமாக இருப்பதால் இப்படி இருக்கிறது. மக்கள் பிளவுப்பட்டுள்ளனர். இப்போது அதிகாரத்தில் இருப்பது ஒரு “மலாய் அரசாங்கம்”. மக்கள் அதை ஒரு “மலாய் அரசாங்கமாகப்” பார்க்கிறார்கள், அம்னோவாக அல்ல.

“அதன் காரணமாக, அவர்கள் இன்னும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், இது நிரந்தரமாக நடந்துகொண்டிருக்க முடியாது, ஏனென்றால் மக்கள் மடையர்கள் அல்ல”, என்று டயம் மேலும் கூறினார்.