1எம்டிபி விவகாரத்தைப் பயன்படுத்திப் பொருளாதாரத்தைக் கீழறுப்பு செய்ய முயல்கிறார்கள்: நஜிப் குற்றச்சாட்டு

najமலேசிய   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்,  மலேசியப்  பொருளாரத்துக்குக்  குழிபறிக்க   1எம்டிபி-க்கு   எதிராக    சதிவேலைகள்   முடுக்கி  விடப்பட்டிருப்பதாகக்  கூறினார்.

அதன்   முடிவான    நோக்கம்     அரசாங்கத்தைக்   கவிழ்ப்பதுதான்     என்றாரவர்.  நஜிப்,  நேற்றிரவு  யுஎஸ்- ஆசியான்  வணிக   மன்றமும்  அமெரிக்க  வர்த்தகச்  சங்கமும்   கலந்துகொண்ட   ஒரு   விருந்தில்   உரையாற்றினார்.

“மலேசிய   பொருளாதாரம்  பற்றி, குறிப்பாக    1எம்டிபி   குறித்து   தப்புத்   தப்பாகக்  கேள்விப்பட்டிருப்பீர்கள்.

“நாங்கள்  எதையும்  மூடிமறைக்க   விரும்பவில்லை. நாட்டின்   வரலாற்றில்   முன்  எப்போதுமில்லாத   வகையில்  விசாரணைக்கு   உத்தரவிட்டோம்.

“சில  குறைபாடுகள்  இருப்பது  தெரிந்ததும்   நிறுவனத்தின்  சீரமைப்புக்கு   உத்தரவிட்டேன். அது  நன்கு   நடைபெற்று   வருகிறது.  1எம்டிபி   முன்பு  வைத்திருந்த சொத்துகளின்   மதிப்புக்  கூடியுள்ளது”,  என   நஜிப்   கூறியதாக   என்எஸ்டி   ஆன்லைன்   கூறியது.

ஆனால்,  எதிரணியினர்  இவ்விவகாரத்தை    ஊதிப்   பெரிதாக்கி   விட்டார்கள்   என்று  கூறிய    அவர்,   எதிரணியினர்  போடும்  “சத்தத்துக்கு”க்   காதுகொடுக்க   வேண்டாம்   என்று  முதலீட்டாளர்களைக்   கேட்டுக்கொண்டார்.

“சில  பிரச்னைகள்   இருந்தது   உண்மைதான்.  ஆனால்,  எதிரணியினர்   அவற்றைப்   பெரிதுபடுத்தி   விட்டனர்”,  என்றார்.

தேர்தல்களில்     அரசாங்கத்தைக்  கைப்பற்றும்     முயற்சி     தோல்வி    அடையவே  அந்த   நிறுவனத்தைக்  கவிழ்க்கவும்   அதன்வழி   முதலீட்டாளர்களின்   நம்பிக்கைக்குக்  குழிபறிக்கவும்   முயற்சிகள்   முடுக்கி  விடப்பட்டுள்ளன   என்றாரவர்.