வேதா: 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுடன் ஒத்துழைத்தது தப்புத்தான்

wethaமலேசிய     ஹிண்ட்ராப்    அமைப்பின்  தலைவர்   பி.வேதமூர்த்தி,  அந்த   அமைப்பு  13வது  பொதுத்  தேர்தலில்    பிஎன்னுக்கு   ஆதரவாக   செயல்பட்டது   தப்பு  என்பதை   ஒப்புக்கொண்டார்.

முன்பிருந்த  பக்கத்தான்  ரக்யாட்டில்   சேரத்தான்   ஹிண்ட்ராப்  விரும்பியது.  அதற்காக  பல  தடவை   பேச்சுகளையும்   நடத்தியது.  அவை  பலனளிக்கவில்லை   என்பதால்,  வேறுவழியின்றி   ஹிண்ட்ராப்   பிஎன்  பக்கம்   சென்றது   என்றாரவர்.

“ஆமாம்.  நாங்கள்  அப்போது   ஒரு   தவறு   செய்து  விட்டோம். 2013-இல்   பிஎன்னை   ஆதரித்தது   உண்மைதான்.  துரதிர்ஷ்டவசமாக  அப்படி   நடந்துகொள்ள   வேண்டியதாயிற்று.

“பிஎன்  கொடுத்த   வாக்கைக்  காப்பாற்றாது   என்பது   எங்களுக்குத்   தெரியும்.  எங்களுக்கு  வேறு   வழியில்லாது   போயிற்று.  20தடவைக்குமேல்   பக்கத்தான்  ரக்யாட்டுடன்   பேச்சு   நடத்தினோம்……அவர்களுடன்  உடன்பாடு   காண  முடியவில்லை.

“இந்திய  சமூகத்துக்கு  அவர்கள்   அளிக்க  முன்வந்த  உதவிகள்  ஏற்புடையவையாக  இல்லை.  அதன்பின்னர்  பிஎன்  வந்தது.  எங்களுக்கு   நம்பிக்கை  இல்லைதான்.  எழுத்து   உடன்பாடு   செய்துகொள்ளலாம்    என்றனர்.சரி   என்றோம்”,  என  வேதமூர்த்தி   நேற்றிரவு   ஒரு  கருத்தரங்கில்   கூறினார்.

பிஎன்னுடன்   உடன்பாடு   செய்துகொண்ட  பின்னர்  வேதமூர்த்தி   செனட்டர்   ஆக்கப்பட்டு   ஒரு  துணை  அமைச்சராக   நியமனம்    செய்யப்பட்டார்.  எல்லாம்  எட்டு  மாதத்துக்குத்தான்.  2014  பிப்ரவரி-இல்,  வேதமூர்த்தி   பிஎன்   கொடுத்த   வாக்குறுதிகளை   நிறைவேற்றவில்லை    என்றும்   ஆகவே   பதவி   விலகுவதாகவும்   அறிவித்தார்.

பிஎன்  சொன்னபடி   நடந்துகொள்ளவில்லை   என்று  கூறியதை   அப்துல்   ரஹ்மான்   டஹ்லான்,   ஹிஷாமுடின்   உசேன்  போன்ற   அமைச்சர்கள்    மறுத்தனர்.

பதவி  விலகியதிலிருந்து   குறைந்த   வருமானம்   பெறும்   இந்திய   சமூகத்தினருடன்   கலந்து   பேசிவருவதாக   வேதமூர்த்தி    கருத்தரங்கில்   கூறினார்.

“பல   விவகாரங்கள்  பற்றிப்   பேசினோம். ஒரு  விசயத்தில்   அனைவருக்கும்  உடன்பாடு   இருந்தது.  பக்கத்தான்  ஹரபானில்   இந்தியர்களுக்குப்  பிரதிநிதித்துவம்    வேண்டும்   என்பதுதான்   அது.

“அதனால்தான்   ஹரபானின்  ஐந்தாவது   பங்காளிக்  கட்சியாகும்   நோக்கத்துடன்   பக்கத்தான்   ஹரபான்  தலைவர்களுடன்  பேச்சைத்   தொடங்கினேன்”,   என்று   வேதா  கூறினார்.

ஹிண்ட்ராப்   தேர்தல்   பணியாளர்களைத்   தேர்ந்தெடுத்து  விட்டது    என்று  கூறிய   அவர்,   அதன்   உதவியுடன்   ஹரபான்  இப்போது   வைத்திருப்பதைவிட   31  நாடாளுமன்ற  இடங்களையும்   51  சட்டமன்ற  இடங்களையும்  கூடுதலாக   வெல்ல  முடியும்   என்றார்.

ஹிண்ட்ராபின்  பத்தாமாண்டு   நிறைவை  முன்னிட்டு   நவம்பர்   25-இல்,  மெர்போக்கில்    பேரணி   ஒன்று  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கிறது   என வேதமூர்த்தி    தெரிவித்தார்.

அரசியல்  கட்சியாவதற்கு   ஹிண்ட்ராப்   சங்கப்   பதிவகத்திடம்   விண்ணப்பம்   செய்துள்ளது.  இன்னும்  அதற்கு  ஒப்புதல்  கிடைக்கவில்லை.

இதனிடையே,  அடுத்து  வரும்  வாரங்களில்   ஹரபான்   கூட்டணியில்   உறுப்புக்  கட்சியாவதற்கும்    அது  முறைப்படி   மனுச்   செய்துகொள்ளும்  என்றும்   அவர்  தெரிவித்தார்.