கதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் நீடிக்கும் போராட்டம் – கண்டு கொள்ளாத அரசுகள்

neduvasal66புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கிராம மக்கள் 154 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல கதிராமங்கலத்தில் 116வது நாளாக போராட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் ஒன்றுகூடி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள்.

முதல் கட்டப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2ஆம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ம் தேதி துவக்கினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். 154வது நாளான நேற்றும் போராட்டம் நடந்தது.

இதேபோல தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் 116வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரைக் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலிருக்கும் 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கதிராமங்கலம் அய்யனார் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை.

மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது கதிராமங்கலம் கிராம மக்கள் இதனை புறக்கணித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கதிராமங்கலத்தில் போராட்டம் நடைபெறவில்லை என்றும் மக்கள் கூடி பேசி வருகின்றனர் என்றும் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: