தேசிய முன்னணியும் சட்டத்தின் ஆட்சியும் – முகமட் சாபு

 

sabu‘ஞாயிறு’ நக்கீரன்,   செப்டெம்பர் 19, 2017. ஆட்சி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமான நேரம் கனிந்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மலேசிய வாக்காளர்கள் அனைவரும் இனம், மொழி, சமயம், பண்பாடு ஆகியக் கூறுகளை மறந்துவிட்டு நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதையும் அரசியல் மறுமலர்ச்சி வேண்டும் என்பதையும் மனதிற்கொண்டு வாக்களித்தால் இந்த ஆட்சியை மாற்றுவது எளிது என்று ஹரப்பான் கட்சியின் துவான் ஹஜி முகமட் சாபு குறிப்பிட்டார்.

அத்துடன், தேசிய முன்னணியின் நெடிய ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி இடம்பெற்றுள்ளதா என்பதை மக்கள், குறிப்பாக வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள ஒவ்வொருவரும், எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் ஹரப்பான் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முகமட் சாபு கேட்டுக் கொண்டார்.

நாட்டில் நீதி பரிபாலனத்திற்காக வரையப்பட்ட சட்டம், தீர்க்கமானது; நாட்டின் இறையாண்மைக்கும் சமூகத்தின் ஒற்றுமைக்கும் அடித்தளம் அமைக்கக்கூடியது; ஆனால், அதை முறையாக கையாள வேண்டிய தேசிய முன்னணி அரசு, தனக்கு எதிராக கருத்து சொல்பவர்களை மடக்கவும் சில வேளைகளில் சட்ட முறைமை இருப்பதாக பொதுமக்களுக்கும் ஊடகத்திற்கும் காட்டிக் கொள்ளவுமே சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்று அண்மையில் கோலாலம்பூர், சீன சமூக மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டபோது முகமட் சாபு நகைச்சுவையாகவும் ஆழமாக சிந்திக்கும் வகையிலும் பேசினார்.

மகாதீரின் மகன்கள் நடத்துகின்ற நிறுவனங்களில் தவறு நடக்கிறதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, இதே மகாதீர் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறாமல் இருந்தால், மகாதீரின் மகன்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதுடன் ஒருவேளை அதிகமான தவறு நடந்தாலும் கண்டும் காணாமல் இந்த ஆட்சி இருந்துவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரேக் கட்சியோ அல்லது அணியோ தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் அஞ்சாது தவறு செய்வார்கள் என்பது உலகெங்கும் காணப்படும் நடைமுறை ஆகும். இதற்கு மலேசியா விலக்கு அல்ல.

மலேசியாவில் அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே அணியே (தேசிய முன்னணியே) ஆட்சியில் இருப்பதால்தான், அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, அரசாங்க அதிகாரிகளும் ஊழலில் திளைக்கின்றனர் என்று முன்னர் பாஸ் கட்சியில் துணைத் தலைவராக விளங்கியவரும் நடுநிலை அரசியல்வாதியுமான முகமட் சாபு அந்தக் கூட்டத்தில் பேசினார்.

மலாக்காவில் ஓர் அதிகாரி வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் எட்டு இலட்ச வெள்ளியை ரொக்கமாக கொத்தாகக் கைப்பற்றினர். இன்னுமொரு அதிகாரி வீட்டில் கட்டியாகவும் ஆபரணமாகவும் கிலோக் கணக்கில் தங்கத்தைக் கைப்பற்றினர். இந்த அளவுக்கு அதிகாரிகளுக்கு துணிவு பிறக்கிறது என்றால், அதற்கு தலைவர்களின் போக்கும் ஒரேக் கட்சி ஆட்சியில் நீடிப்பதும்தான் காரணம். அதைவிட இன்னொரு காரணம், பிரதமரின் வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படுவதும் இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு துளிர்விட்டு விடுகிறது.

நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாதாந்திர தவணையைக் கட்டுவதற்குக்கூட திணறியதை நான் அறிவேன். இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அமைச்சராகாத குறைதான்; அந்த அளவிற்கு செல்வச் செழிப்பில் திளைக்கின்றனர் என்று அரசியல் மட்டத்தில் ‘மாட் சாபு’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர் சொன்னார்.

இதற்கெல்லாம் ஒரேத் தீர்வு அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்தான். எனவே, நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பெரிய கட்சி, சிறியக் கட்சி என்ற பேதமெல்லாம் பார்க்காமல், எல்லோரும் மலேசிய மக்கள் – மலேசிய வாக்காளர்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

நான்கூட துன் மகாதீருடன் கைக்கோத்திருப்பது அந்த அடிப்படையில்தான். அவர் என்னை இரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்  சிறையில் தள்ளியவர். 1984, 1988-ஆம் ஆண்டுகளில் அரசியல் காரணத்திற்காக அந்தச் சட்டத்தை என்மீது ஏவியவர் அவர். இருந்தும், இப்போதைய அரசியல் களத்தில் அவருடன் நான் இணைந்திருப்பது அரசியல் மாற்றத்தை விரும்பித்தான் என்று கடந்த பொதுத் தேர்தலில் பெண்டாங் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டவருமான அவர் விளக்கமளித்தார்.

அடுத்து இடம்பெறவுள்ள பதினான்காவது பொதுத் தேர்தலின்வழி, நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் இலஞ்சம் அறவே இருக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஒருவேளை, இப்போதிருப்பதைவிட இன்னும்  அதிகமாக இருக்கலாம். பரவாயில்லை; அதற்கு அடுத்தப் பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை மாற்றி விடலாம்.

எனவே, ஜனநாயக அரசியல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது. மாற்றமே இல்லை யென்றால் அதற்குப் பெயர் அரசியல் கிடையாது;  அடிமைத்தனம் என்று ‘நம்பிக்கைக் கூட்டணி – விவேகப் பங்காளித்துவம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் முகமட் சாபு பேசினார்.

அரசியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்ட அந்தக் கருத்தரங்கில்  முன்னாள்  சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஹிண்ட்ராஃப் கட்சித் தலைவர் பொன். வேதமூர்த்தி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.