சமயப் பள்ளியில் ஏற்பட்ட தீ

கி. சீலதாஸ், செப்டெம்பர் 20, 2017.

schoolsmustfollowsafetystandards  14.9.2017இல்,  கோலாலம்பூரில்  உள்ள ஓர்  இஸ்லாமிய  சமயப்  பள்ளியில்  ஏற்பட்ட  தீயில்  இருபத்திரண்டு  மாணவர்களும்,  இரண்டு  காவலாளிகளும்  மாண்டனர்.  இந்தச்  சமயப்  பள்ளியைப்  பயன்படுத்துவதற்கான  அனுமதி  இன்னும்  வழங்கப்படவில்லை.  ஈராண்டுகளுக்கு  முன்னர்  கட்டடவரை  படங்களைச்  சமர்ப்பித்திருக்கிறது  பள்ளி  நிர்வாகம்.  சமீபத்தில்தான்  தீ  பாதுகாப்பு  இசைவுக்கான   மனுவைத்  தாக்கல்  செய்துள்ளது.  அது  இன்னும்  ஒப்புதல்  பெறவில்லை.

பாதிப்புற்ற  சமயப்  பள்ளியை  பயன்படுத்த  அனுமதி  வழங்கபடவில்லை.  காரணம்  போதுமான  பாதுகாப்பு  இல்லாததே.

அமலாக்கத்  துறைகள்  இந்த  கட்டடத்தின்   ஆபத்தான   நிலையைக்  கண்டு  அதை  குடியிருப்பாகப்  பயன்படுத்தப்பட்டதைத்   தடுத்திருக்க வேண்டும்.  அதை  செய்யத்  தவறியது  ஏன்?  அரசு  துறைகளின்  அனுமதி  பெறாமல்  பள்ளியைப்  பயன்படுத்தியது  குற்றமல்லவா?.  இந்த  நிலைக்குக்  காரணமானவர்களை  சட்டத்தின்  முன்  நிறுத்த  வேண்டும்.   அதோடு,  இப்படிப்பட்ட  விபத்து நடப்பது இது  முதல்  தடவை  அல்ல!  இப்பொழுது  விடுக்கப்படும்  அறிவுரைகள்,  பரிந்துரைகள்  யாவும்  எப்போதோ  நிறைவேற்றியிருக்க  வேண்டும்.  நிறைவேற்றாத  காரணம்  என்ன?  சட்டத்தை   ஒழுங்காக   அமல்படுத்தியிருந்தால்  மாய்ந்த  உயிர்களை   காப்பாற்றியிருக்கலாம்.  இனிமேல்,   பெற்றோர்களும் தங்களின்  பிள்ளைகளை  இதுபோன்ற  பள்ளிகளுக்கு  அனுப்பும்போது  அவை  சட்டத்துக்கு  இணங்க  செயல்படுகின்றனவா  என்பதை  உறுதிப்படுத்துவதே   சாலச்சிறந்தது.

part4 1 siladassஇந்த  நாட்டில்  தவறுகளை  மூடிமறைப்பதில்  சிறந்து  விளங்குகின்றது  என்ற  அவச்  சொல்  பரவாமல்  இருக்க  அரசு  தக்க  நடவடிக்கை  எடுக்கவேண்டும்.

இந்த  தீ  விபத்து  குறித்து  குறிப்பிட்ட  பள்ளி  பொறுப்பாளர்கள்  இது  ‘கடவுள்  சித்தம்’  என்று  சொல்லியிருக்கிறார்கள்.  குற்றம்  புரிந்தவர்களைக்  காப்பாற்றும்  நடவடிக்கை  இது  என்பது  தெளிவு.  அதோடு  அப்படிப்பட்ட  மனோபவம்   தீக்குப்  பலியானவர்களின்  பெற்றோர்,  உறவினர்கள்  அனைவரின்  வேதனையைக்  கொச்சைப்படுத்தும்  தரத்தைக்  கொண்டிருக்கிறது.  ‘கடவுள்  சித்தம்’  என்று  கடவுள்  மீது  பழி  சுமத்துபவர்கள்  மனிதர்களை  மனிதர்களாக  கருதவில்லை  என்றுதான்  பொருள்படும்.  இது  வேதனையில்  இருப்போரைப்  பழிப்பது  மட்டுமல்ல, இது உண்மையிலேயே  கடுமையான   அவதூறாகும்.

மற்றுமொரு  செய்தியின்படி  இது  தீவைப்புச்  செயல்  என்றும்  சம்பந்தப்பட்ட  சிலர்  கைது  செய்யப்பட்டுள்ளதாகச்  சொல்லப்படுகிறது.

இங்கே  முதல்நிலை  சாட்சியத்தை  மறுக்கலாகாது.  கட்டடம்  குடியிருக்க  தகுதி  பெற்றிருந்ததா…?  என்பதே  அது.  கட்டடத்தைப்  பயன்படுத்த  அனுமதிக்கப்பட்டதா?  பாதுகாப்பு  முறையற்ற  நிலையில்  இருந்ததை  கவனிக்காதது  ஏன்?

மாணவர்களுக்கு  நம்  பிரார்த்தனை  உரித்தாகட்டும்.  இனியும்  இதுபோன்றச்  சம்பவம்  நிகழாது  இருக்க  பிரார்த்திப்போம்.