ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் கைகோர்க்கிறார்களா கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும்?

kamal_kejirivalசென்னை : ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாகச் சொன்ன நடிகர் கமல்ஹாசனை ஊழல் ஒழிப்பை மையமாக வைத்து தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சமூக ஆர்வலருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக சொன்னதால் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன். வெளியில் இருந்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், அரசியலுக்கு வந்துவிட்டு பேச வேண்டும் என்று அமைச்சர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாக டுவிட்டரில் அறிவித்தார் கமல்ஹாசன்.

தொடர்ந்து டெங்கு ஒழிப்பு, நீட் தேர்வு தடை என மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். அவரிடம் அரசியல் குறித்து பேசியதாகவும், விரைவில் கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாகவும் செய்திகள் பரவின.

2011ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி

இந்நிலையில் ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஆம் ஆத்மி கட்சியை துவங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கமல்ஹாசனை சென்னையில் சந்தித்துள்ளார்.

மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்த கட்சி

ஆம் ஆத்மி கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது.

3 ஆண்டில் ஆட்சியை பிடித்தது

2013 டெல்லி சட்ட பேரவை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி டெல்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி இக்கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது. 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலில் இக்கட்சி நாட்டின் பல பகுதிகளில் போட்டியிட்டாலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நான்கு இடங்களில் வென்றது.

கைகோர்ப்பார்களா?

இதனிடையே ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து செயல்பட நடிகர் கமல்ஹாசனுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. கெஜ்ரிவாலின் இந்த அழைப்பை கமல்ஹாசன் ஏற்பாரா, அல்லது தனது பாணியில் அரசியல் செய்வாரா என்பதே அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

tamil.oneindia.com