போர் பிரகடனம் செய்த அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்- வடகொரியா

north Korea Bஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டுக்கு எதிராக போர் பிரகடனம் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள வட கொரிய வெளியுறவு அமைச்சர், அமெரிக்க குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.

நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரி யங்-ஹோ, தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் வராவிட்டாலும் கூட இது பொருந்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா தொடர்பாக போர் பிரகடனம் என்ற வார்த்தையை வடகொரியா பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

வடகொரிய அதிபரும் ரியும் தொடர்ந்து பிதற்றிக் கொண்டிருந்தால், அவர்கள் நீண்ட காலம் நீடித்திருக்க மாட்டார்கள் என்று அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரிய அமைச்சர் பேசியுள்ளார்.

அமெரிக்காதான் முதலில் போரை அறிவித்திருக்கிறது என்பதை இந்த உலகம் தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ரி கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் பேசிய பின், நியூயார்க்கை விட்டுப் புறப்படுவதற்கு முன்னதாக ரி தனது கருத்துக்களை வெளியிட்டார்..

“அதிபர் டிரம்ப் வட கொரியா மீது போர் பிரகடனம் செய்ததை அடுத்து, மேற்கொள்ளவேண்டிய அனைத்து சாத்தியக் கூறுகும் வடகொரியத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

ஐ.நா.தொடர்ச்சியாக விதித்த தடைகளை மீறி, வட கொரியா சமீப வாரங்களில், அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

தங்களை அழிக்க நினைக்கும் அன்னிய சக்திகளை, தங்களது அணு ஆயுதத் திறன்தான் தடுத்து வருவதாக வடகொரியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

வட கொரியாவின் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி சோதனைக்குப் பின்னர், இந்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சில், அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை விதித்திருக்கிறது. -BBC_Tamil