கேட்டுப் பெறுவதல்ல ‘கைத்தட்டல்’

‘ஞாயிறு’ நக்கீரன்

--52451-0இன்றைய நாட்களில் பொது நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, திருமண விருந்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வதென்றால் ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. நிகழ்ச்சியை வழி நடத்துகிறவர்களும் ஒலி வாங்கிக்கு முன் நின்று முழங்குபவர்களும் வித்தைக் காட்டும் கழைகூத்தாடி தன்வசப்பட்ட குரங்கை இப்படியும் அப்படியும் தாவச் சொல்வதைப் போல, நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களை நிம்மதியாக விடாமல் ‘கைத்தட்டுங்கள்’, ‘கைத்தட்டுங்கள்’ என்று மூச்சுக்கு மூச்சு கேட்டுக் கேட்டு கைத்தட்டலைப் பெறும் தொல்லை தாங்க முடியவில்லை.

பொதுவாக தமிழர்கள், பெருமைக்கும் மரியாதைக்கும் அலைமோதுபவர்கள். அண்மைக் காலமாக, சமுதாயத்தில் ஏராளமான தலைமைத்துவ பயிற்சியை நடத்தி விட்டதாலோ என்னவோ, மலேசிய இந்திய சமுதாயத்தில் அனைவரும் தலைவராகத்தான் இருக்க விரும்புகின்றனர். அதனால்தான் வகைதொகை யின்றி அமைப்புகள் உருவாகி, ஏராளமான தலைவர்கள் நம்மிடையே உலா வருகின்றனர். இதனால், ‘அனைத்துலக தமிழ் நிகழ்ச்சி அறிவிப்பாளர் சங்கம்’, ‘அனைத்துலக இறை வணக்கம் பாடுவோர் அமைப்பு’, ‘அனைத்துலக தமிழ் நிகழ்ச்சிக்கு வருவோர் இயக்கம்’ என்றெல்லாம் புதுபுது அமைப்புகள் தோன்றி இன்னும் ஏராளமான தலைவர்கள் நம்மிடையேத் தோன்றக்கூடும். இப்பொழுதெல்லாம் வட்டார, உள்நாட்டு அமைப்பெல்லாம் உருவாவதில்லை; எல்லாமே பன்னாட்டு அமைப்புகள்தான். இதற்கெல்லாம் ஒரே வழி, இனி வரும் நாட்களில் தலைமைத்துவ பயிற்சிக்குப் பதிலாக ‘தொண்டத்துவப் பயிற்சி’ நடத்த வேண்டும் போலும்!

இப்படிப்பட்ட சமுதாயத்தில், மேடை காணும் அத்தனை பேரும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பார்த்து, ‘நிகழ்ச்சிக்கு வந்து வசமாக சிக்கிக் கொண்டீர்களா’ என்று எண்ணிக் கொள்வர் போலும்; தட்டுங்கள் கையை என்று கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்த வண்ணமாக இருக்கின்றனர்.

இப்படித்தான் கடந்த புதன் கிழமை(செப்டம்பர் 27) அ. கந்தன் என்பாரின் நூல் வெளியீட்டு விழாவை நேதாஜி மண்டபத்தில் வழிநடத்திய விஜயராணி, ‘போதும்’ என்ற அளவிற்கு கைத்தட்டலை கேட்டுக் கேட்டு நிறைய வாங்கிவிட்டார். சிறப்புரை ஆற்றிய பெ.இராஜேந்திரன், “ஒரு கருத்தைச் சொல்ல வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது. நூலாசிரியரைப் பற்றி பெருமையாக சொன்னால் கைத்தட்டி பாராட்டாமல் உட்கார்ந்திருக்கலாமா” என்றவாறு பேசினார்.

ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் சென்று, அங்கு பேசப்படும் கருத்துகளைக் கேட்டு இன்புற்று வரலாமே என்று திறந்த மனதோடும் தீட்டிய செவியோடும் காத்திருந்தால், பேசுகிறவர்கள் பேசிவிட்டு அந்த மட்டில் செல்வதை விட்டுவிட்டு, கைத்தட்டுங்கள் கைத்தட்டுங்கள் என்று கூப்பாடு போடுவதேன்?

எதற்காக கைத் தட்ட வேண்டும்? ஏன் கை தட்ட வேண்டும்?

மேடையில் ஆற்றப்படும் உரை இனிமையாக இருந்தாலோ, பொருள் பொதிந்ததாக இருந்தாலோ அல்லது புதுமையாக இருந்தாலோ நிச்சமாக அரங்கத்தில் குழுமியுள்ளோர் கையொலி எழுப்புவர்; அதைப்போல, ஒரு நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இடம்பெற்றால், அதற்கும் கரவொலி எழுப்ப பார்வையாளர்கள் தவறுவதில்லை. அப்படி இருக்கும்போது, எதற்காக இப்படி கைத்தட்டலுக்கு கெஞ்ச வேண்டும்?

இப்படித்தான் திருமண விருந்து நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது; திருமணத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்கள் விருந்திற்கு வந்து, சற்று நேரம் அமர்ந்து, பின் உணவுண்டு தொடர்ந்து அன்பளிப்பு செய்து விட்டு செல்லலாம் என்றால், சம்பந்தப்பட்ட அரங்கின் மேடையில் புது மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க, அங்கு கலை நிகழ்ச்சி படைப்பவர் தன்னுடைய வேலையை செவ்வனே செய்யாமல் பெண்ணும் மாப்பிளையும் மெச்சுவதற்காக ‘கைத்தட்டுகங்கள்’, ‘கைத்தட்டுகங்கள்’ என்று அலறிக் கொண்டிருப்பார்; நிம்மதியாக சாப்பிட விடவே மாட்டார்.

இதுவெல்லாம் அநாகரிகத்தின் உச்சம்!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நினைவில் வாழும் ஆச்சி மனோரமாவை அழைத்து வந்து கலைஞர் கரு.கார்த்திக் ஒரு நிகழ்ச்சி படைத்தார். அந்த நிகழ்ச்சியை கண்ணியமான கலைஞரும் தங்கக் குரலோனுமாகிய தங்கமணி தான் வழிநடத்தினார். ஆனால், அவர் ஒரு முறைகூட நிகழ்ச்சிக்கு வந்த கலை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பார்த்து கைத்தட்டுங்கள் என்று கேட்க வில்லை. அப்படி இருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், நிகழ்ச்சி தொடங்கியது முதல் நிறைவு வரை 55 முறை கைத்தட்டினர். ‘முணுக்’கென்றால் போதும்; உடனே கைத்தட்டுவதில் கைதேர்ந்தவர்கள் தமிழர்கள். உண்மை நிலை இவ்வாறிருக்க, கைத்தட்டலுக்காக ஏன் இப்படி கையேந்த வேண்டும்?

தானாக கைத்தட்டுவதுதான் கண்ணியம்!! கேட்டு வாங்கும் கைத்தட்டு கண்ணியக் குறைவானது!!