நவீன் கொலை வழக்கு, டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது

நவின்இன்று, ஜோர்ஜ்டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றம், நவீன் கொலை வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அரசு தரப்பு துணை வழக்குரைஞர், பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, துணைப் பதிவாளர்  நுர்ஃபத்ரினா ஸுல்கய்ரி, இந்தத் தேதியை உறுதிபடுத்தினார்.

இன்றைய விசாரணையின் போது, தனது 18 வயது மகனின் கொலை வழக்கை, நேரில் காண நவீனின் தாயாரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

கடந்த ஜூன் 19-ல், ஜெ.ராகசுதன் (18) , எஸ்.கோகுலன் (18) இருவரோடு, படிவம் 4 மற்றும் படிவம் 5-ல் பயிலும் இரு மாணவர்கள் என, 4 இளைஞர்கள் நவீனைப் படுகொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இன்று நீதிமன்ற அறைக்குள் அந்நால்வரும் நுழைந்ததைப் பார்த்த, நவீனின் தாயார் சாந்தி கதறி அழுதார். அவரை ஆறுதல் படுத்த அறைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று என நவீன் தரப்பு வழக்குரைஞர் பல்ஜிட் சிங் கூறினார்.

நீதிமன்ற அறை நவீன் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களால் நிரம்பி வழிந்தது. இடைவேளைக்குப் பிறகு, இருதரப்பிலும் நெருங்கிய குடும்பத்தார் மட்டும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 15-ல், பினாங்கு மருத்துவமனையில் 1,000 ரிங்கிட் செலுத்தி, பிரேத பரிசோதனைக்கு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம், இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என பல்ஜிட் சிங் தெரிவித்தார்.

“விசாரணையைத் தொடங்க ஏதுவாக, எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் அவ்வறிக்கை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

நவீன் குடும்பத்திற்குத் தேவை நீதி மட்டுமே, அவர்கள் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை என பல்ஜித் தெரிவித்தார்.

“நவீனின் தாயார், தான் அனுபவித்தத் துயரத்தை, வேறு எந்தப் பெற்றோரும் அனுபவிக்கக்கூடாது என விரும்புகிறார்,” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைவரும், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், அவர்கள் சாகும்வரை தூக்கிலடப்படலாம்.