ஜெர்மன் F & B நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது, தெங் கூறுகிறார்

 

“சென்டிரோ மால் ஜெர்மன் எஃப்&பி நிகழ்ச்சிக்கு கிள்ளான் நகராட்சி மன்றமும் போலீசும் அனுமதி வழங்கியுள்ளன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்கிழு உறுப்பினர் தெங் சாங் கிம் இன்று கூறினார்.

ஏற்பாட்டாளர்கள் சட்டத்தையும் ஊராட்சிமன்றத்தின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறவரையில் நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடத்தப்படலாம்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் போலீசாரிடமிருந்து பெற்றுள்ள கடிதத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு ஆட்சேபம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. நிபந்தனைகள் உண்டு.

இதன் அடிப்படையில், கிள்ளான் நகராட்சி மன்றம் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்று தெங் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஒன்று: இது முஸ்லிம்-அல்லாதவர்களுக்கு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் 12 மற்றும் 13 இல் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் பாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு “மதுபான விழா” என்று அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் சென்டிரோ மாலில் நடந்துள்ளன. எவ்விதப் பிரச்சனையும் எழவில்லை.

பாஸ் அதன் சொந்த கொல்லைப்புறத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தெங் வலியுறுத்தினார்.

கிளந்தானில் எயிட்ஸ் நோய் மற்றும் இதர சமூகப் பிரச்சனைகள் சிலாங்கூரைவிட மிக அதிகமாக இருக்கின்றன. மற்றவர்களின் விவகாரங்களின் தலையிடுவதற்கு முன்பு அதை முதலில் கவனியுங்கள் என்று தெங் அறிவுறுத்தினார்.

அவர்கள் ஏன் குடிகாரர்கள்போல் கோபத்தில் குதிக்கிறார்கள் என்று தமக்குப் புரியவில்லை என்று கூறிய தெங், “குடிப்பது நான், அவர்கள் ஏன் குடிவெறியடைகிறார்கள்”, என்று அவர் வினவினார்.