14-வது பொதுத் தேர்தல் : சிலாங்கூரில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் பி.எஸ்.எம். போட்டி

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது.

சிலாங்கூரில் சுபாங், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய நாடாளுமன்ற இடங்களில், பக்காத்தான் ஹராப்பானுடன் மும்முனை போட்டி ஏற்பட்டாலும், தாங்கள் போட்டியிடப்போவது உறுதி எனப் பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறினார்.

அதேசமயம், மற்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் பக்காத்தான் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில், ஆர் சிவராசாவுக்கு முன்னமே பி.எஸ்.எம். போட்டியிட்டுள்ளது. ஆக, நாங்கள் மீண்டும் அந்த இடத்தை எடுத்துகொள்ள விரும்புகிறோம்,” என்றார் அவர்.

“நாடு தளுவிய நிலையில், நாங்கள் 3% இடங்களில் மட்டுமே போட்டியிடவுள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற 97% இடங்களிலும், ஹராப்பான் கூட்டணியின், தகுதி வாய்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மலேசிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என அவர் மேலும் கூறினார்

இன்று, ‘14-வது பொதுத் தேர்தலை நோக்கி பி.எஸ்.எம்.’ எனும் பிரச்சார இயக்கத்தின் ஊடே, பி.எஸ்.எம். சுபாங் கிளையின் மக்கள் சேவை மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அருட்செல்வன் இவ்வாறு பேசினார்.

மேலும், சிலாங்கூரில் கோத்தா டாமான்சாரா, செமிஞ்சே, கிள்ளான் துறைமுகம் மற்றும் ஶ்ரீ மூடா ஆகிய 4 சட்டமன்றங்களிலும் பி.எஸ்.எம். போட்டியிட உள்ளதாகவும் தேர்தல் பிரச்சாரக் குழு இயக்குநருமான அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கட்சி உறுப்பினர் அல்லாத இருவரை, பாயா ஜாராஸ் மற்றும் புக்கிட் லஞ்சான் தொகுதிகளில், கட்சியின் சின்னத்தில் நிறுத்தவும் பி.எஸ்.எம். ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

இருப்பினும், வேட்பாளர்கள் யார் யாரென்று, பிரிதொரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அருட்செல்வன், “நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறோம், அதுமட்டுமின்றி, எங்களிடம் அவ்விடங்களில் போட்டியிட தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் உள்ளனர்,” என்றார்.

குறிப்பாக, சுபாங் தொகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் ‘மக்கள் சேவை மையம்’ அமைத்து, பணியாற்றி வருகிறோம் என்றார்.

“தற்போது, சுபாங்கில் நடந்துவரும் சில சம்பவங்கள், மக்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது. எங்களிடம் இத்தொகுதியில் நீண்ட காலம் மக்கள் சேவையில் இருந்த, தகுதிவாய்ந்த வேட்பாளர் இருக்கிறார். ஆக, அவருக்கு ஒரு வாய்ப்பளிப்பதுதானே நியாயம்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த 1999-வது பொதுத் தேர்தலில், சுபாங் நாடாளுமன்றத்திற்கு பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் முகமட் நசீர் ஹசீம் போட்டியிடுவதாக இருந்தது என அக்கட்சியின் மற்றுமொரு மத்தியச் செயலவை உறுப்பினர் வி.செல்வம் தெரிவித்தார்.

“இருப்பினும், பிகேஆர் தங்கள் வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்ததால், வேட்புமனு தாக்கல் தினத்தன்று, நசீர் எதிர்க்கட்சிகளுக்கிடையிலான ‘நல்லுறவும், ஒற்றுமையும்’ கருதி, தனது வேட்புமனுவை மீட்டுக்கொண்டார்,” என, 1999-ல் நிகழ்ந்த சம்பவத்தைச் செல்வம் நினைவு கூர்ந்தார்.

கோத்த டாமன்சாராவில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்

“ஒருவேளை, இம்முறை சிவராசா அந்தக் காரியத்தைச் செய்யலாமே, இடத்தை விட்டுக் கொடுக்கலாமே.”

“கடந்த தேர்தலில் கோத்த டாமான்சாராவில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். ஆக, அதற்கு பிராய்சித்தமாக, இத்தேர்தலில் சுபாங் நாடாளுமன்றத்தை எங்களுக்கு விட்டுக்கொடுக்கலாமே,” என்றும் அருட்செல்வன் கூறினார்.

2008-ம் ஆண்டு, நசீர் கோத்த டாமான்சாரா சட்டமன்றதில் வெற்றி பெற்றார். 2013-ல் அவர் பிகேஆர் சின்னத்தில் அதே இடத்தில் நின்றபோது, பக்காத்தான் கூட்டணியின் உறுப்பு கட்சியான பாஸ், திடீரென அத்தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தியது.

கடந்த தேர்தலில், அத்தொகுதியில் பாரிசான் வெற்றி பெற்றதற்கு, பல்முனை போட்டியேக் காரணம் என அருட்செல்வன் நம்புகிறார்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) அரசியல்வாதிகளை நியமிக்கக்கூடாது என்று பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ராம்லி, கூறிய கருத்துடன் தான் உடன்படுவதாகவும் அவர் கூறினார்.

சிவராசாவிற்கு மட்டும் இது பொருந்தாது என்றாலும், தற்போதைய சுபாங் எம்.பி. சிலாங்கூர் மாநில ஜி.எல்.சி.-யில் பதவிவகிப்பது உண்மை.

“சிவராசா ஜி.எல்.சி. பணிகளைத் தொடர்ந்து செய்யட்டும், நாம் இங்கு அரசியல் பணிகளைச் செய்வோம்,” என்று அவர் தொடர்ந்து பேசினார்.

இதற்கிடையில், “மற்ற அரசியல்வாதிகளைக் குறைத்து மதிப்பிட நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அவர்கள் ஒரு பிரச்சனையைக் கையாளுவதில் எங்களிடமிருந்து மாறுபடுகின்றனர்,” என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.சிவராஜன் கூறினார்.

“அதற்காக, அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவில்லை, நாங்கள் தீர்வு கண்டுவிடுவோம் என்று சொல்லவில்லை. பிரச்சனையைக் கையாளும் முறைகளில் வித்தியாசம் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று காலை, கம்போங் பாரு சுங்கை பூலோவில் தொடங்கிய ‘14-வது பொதுத் தேர்தலை நோக்கி பி.எஸ்.எம்.’ பிரச்சார இயக்கம், அக்டோபர் 1-ம் தேதி, ஶ்ரீ மூடா பட்டணத்தில் அமைந்துள்ள கே.ஃப்.சி. மைதானத்தில் ஒரு பொது உரை நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.

அன்றைய இரவு 8 மணிக்கு, சே கு பாட், எஸ்.அருட்செல்வன், ஆ.சிவராஜன், ‘பெமுடா’ பி.எஸ்.எம்.-ன் தலைவர் காலிட் இஸ்மாத் ஆகியோர் அந்நிகழ்வில் பேசவுள்ளதாகத் தெரிகிறது.