தகுதியற்ற அம்னோ தலைவர்களை தூக்கி வீசுங்கள்: ஜோகூர் மக்களுக்கு மகாதிர் வலியுறுத்து

இப்போதைய  அம்னோ  தலைவர்கள்   தகுதியற்றவர்கள்    என்பதால்   அடுத்த    பொதுத்   தேர்தலில்   அவர்களைத்  “தீர்த்துக்  கட்ட   வேண்டும்”  என்று   பக்கத்தான்  ஹரபான்    தலைவர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்  கூறினார்.

அவர்கள்  இன்னமும்  கண்மூடித்தனமாக   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கை   நம்புகிறார்கள்  என்று  குறிப்பிட்ட    அவர்,  தமக்கும்   அமைச்சர்    ஒருவருக்குமிடையில்  நடந்த  ஓர்  உரையாடலைச்  சுட்டிக்காட்டினார்.

“ஒரு  அமைச்சரைப்  பார்க்க   நேர்ந்தது. அவர்  பெயரைக்  குறிப்பிட   விரும்பவில்லை.  அவரிடம்    கேட்டேன்: ம்ம்ம்……ஷகிடான்….. அடடா,  தவறுதலாக   பேரைச்   சொல்லிவிட்டேனே,    அவரிடம்,   ஷகிடான்   எதற்கய்யா  இன்னும்   உங்கள்    தலைவரின்(நஜிப்பை)   பின்னாடியே   ஓடுகிறீர்கள்  என்றேன்’”.

மகாதிர்   குறிப்பிட்டது   முன்னாள்   பெர்லிஸ்   மந்திரி   புசாரும்   இப்போது  பிரதமர்துறை   அமைச்சராகவுமுள்ள   ஷாகிடான்   காசிமைத்தான்.

“அதற்கு  ஷகிடான்   கூறினார், ‘அவர்   எதையும்   எடுக்கவில்லை’.  சட்டத்துறைத்   தலைவர்   அபாண்டி  அலி   கூறிவிட்டாராம்,    அவர்  (பணம்)   எடுக்கவில்லை   என்று.  அபாண்டி   கூறியதை   அவர்   அப்படியே   நம்புகிறாராம்.

“நஜிப்பைக்  காப்பாற்றுவதற்காக    நியமிக்கப்பட்ட   ஒருவரை    நம்பும்   இப்படிப்பட்ட    தலைவர்கள்  எல்லாம்   இருக்கிறார்கள். இதிலிருந்து  எப்படிப்பட்ட    தலைவர்கள்   நம்மிடையே   இருக்கிறார்கள்    என்பது   நன்றாகவே   தெரிகிறது. எல்லாரும்  கண்ணையும்  காதையும்  வாயையும்  மூடிக்கொண்டிருக்கிறார்கள்”,  என்றார்    மகாதிர்.

“நாட்டை   நேசிப்பவர்களும்   அதைக்   காப்பாற்ற   நினைப்போரும்   இப்படிப்பட்ட   தலைவர்களை   ஒழியட்டும்   என்று   விட்டுவிட    வேண்டும்.  அவர்களுக்கு    வாக்களிக்காதீர்ப்கள்,   பிஎன்னையும்  அம்னோவையும்  நஜிப்  உள்பட    அவர்களின்   தலைவர்களையும்   ஒழித்துக்கட்டுங்கள்”,  என்றவர்   வலியுறுத்தினார்.