ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ரஜினியும், கமலும் ஏன் வாய் திறக்கவில்லை? விளாசும் விஜயகாந்த்

சென்னை: ஜெயலலிதா ஆட்சியிலும் ஊழல் இருந்தது. அப்போது ஏன் நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் குரல் கொடுக்கவில்லை என்று நடிகர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி தொடங்கி 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய பரிமாணத்தில் வந்துள்ளார் விஜயகாந்த். அவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், நான் மார்டின் லூதர் கிங் மாதிரி. எத்தனை தோல்விகள் வந்தாலும் மீண்டு வருவேன். ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் அரசியலுக்கு வரட்டும். அரசியல் களம் எப்படி என்பது குறித்து நான் அவர்களுக்கு எந்த வித அறிவுரையும் கூற மாட்டேன்.

எச்சரிக்கை இல்லை

அவர்கள் இருவரும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்க ஏராளமானோர் உள்ளனர். தற்போது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என்று கூறும் நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கே போயிருந்தார்.

துணிந்து கருத்து சொல்லவில்லை

ஜெயலலிதா இருந்தபோது அவரது ஆட்சியில் ஊழல் நடைபெற்றது. எனினும் சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினியும், கமலும் ஏன் துணிந்து அவருக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கவில்லை. ஆனால் நான் அப்படி அல்ல. ஜெயலலிதா அரசின் ஊழலை நான் மட்டுமே எதிர்த்தேன். அவருக்கு எதிராக குரல் கொடுத்தேன். இவ்வளவு ஏன் கருணாநிதியையும் நான் எதிர்த்துள்ளேன்.

ஊழல்வாதிகளுக்கு மத்தியில்…

நான் கறை படியாத கைக்குச் சொந்தகாரர் என்பதால் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று சிலர் கூறினர். ஆனால் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் என்னை போன்ற ஒருவர் இருக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். அதன்படி என்னை மக்கள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரகுருவை வெற்றியடைய செய்ய ஜெயலலிதா ஏராளமான பணத்தை செலவழித்தார்.

கருணாநிதியின் புத்திசாலித்தனம்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்று விட்டார். கருணாநிதி உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் அவர் எடப்பாடி ஆட்சியை எளிதாக கவிழ்த்திருப்பார். கருணாநிதிக்கு இதுபோன்ற சூழல்களை சமாளிக்க திறமையும் அரசியல் புத்திசாலித்தனமும் உள்ளது.

சென்னையில் டெங்கு

சென்னையில் இன்னும் டெங்கு காய்ச்சல் தொற்று கட்டுப்படாத நிலை உள்ளபோதிலும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்தும் இயல்பாக உள்ளது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். நான் ஆட்சிக்கு வந்தால் உண்மை என்னவென்று அவர்களுக்கு தெரியவரும். ஜெயலலிதா மரண விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதற்கு முன்பே கூறியவர் ஓ.பன்னீர் செல்வம்தான். ஆனால் சிவாஜிகணேசனை விட மிகச் சிறந்த நடிகர் ஓபிஎஸ் என்பதை தற்போது நாம் உணர்ந்துவிட்டோம். இந்த விவகாரத்தை நான் மேலும் தோண்ட விரும்பவில்லை.

தேர்தல் வரட்டும்

2019-இல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். யார் கண்டார்கள், கூட்டணியே அமைக்காமல் நான் கூட தேர்தலில் வெற்றி பெறலாம். இந்த மாத இறுதியில் எடப்பாடி அரசு கவிழ்க்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனவே தேர்தல் வரட்டும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

tamil.oneindia.com