எம்.எ.சி.சி: ஆய்வு வேட்பாளருக்கு மட்டும்தான், குடும்பத்தாருக்கு இல்லை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.எ.சி.சி.), 14-வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மீதான ஆய்வு, போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே, அவர்களின் குடும்பத்தார் அதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அதன் கமிஷனர் சுல்கிஃப்லி அஹ்மத் கூறினார்.

“அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே செயல்முறை தேவையில்லை … இது ஒரு சாதாரண ஆய்வு மட்டுமே, விசாரணை அல்ல,” என்று, இன்று கோலாலம்பூரில் ‘2017 ஊழல் எதிர்ப்பு இயக்க’த்தை (கெஜார் 17) நிறைவு செய்தபின் கூறினார்.

ஆய்வுக்கு வந்திருக்கும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்கள் தொடர்பாக கட்சிகளிடமிருந்து பெறப்படும் விவரங்கள் எதையும் எம்.ஏ.சி.சி. வெளியிடாது.

“ஆய்வு விவரங்கள், தொடர் நடவடிக்கைகளுக்காக அவர்கள் சார்ந்த காட்சிகளுக்கு வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

நேற்று, பாரிசான் நேசனலின் தேசியத் தலைவர் நஜிப் ரசாக், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் சிலரின் பெயர் பட்டியலை எம். எ.சி.சி.-யின் ஆய்வுக்காக வழங்கியதாகக் கூறியிருந்தார்.

கெராக்கான் கட்சி சார்பில் 50 பேர் கொண்ட பெயர்பட்டியல் எம். எ .சி.சி.-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எம். எ. சி.சி.-யின் ஆய்வில் தேர்வுபெறும் வேட்பாளர்களின் பெயர்கள், பாரிசான் நேசனல் உச்சமன்றத்திடம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர், மா சியு கியோங் தெரிவித்தார்.

“அந்த 50 பெயர்களில், 60 விழுக்காட்டினர் புதிய முகங்கள் என தாராளமாகச் சொல்லலாம்; அவர்கள் அவரவர் சார்ந்த தொகுதிகளில் சேவை செய்து, மக்களால் நன்கு அறியப்பட்டவர்கள் ஆவர்,” என்றார் அவர்.

இதற்கிடையே, மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன், தங்கள் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள், அவர்களின் சொத்து மதிப்பைப் பொதுவில் அறிவிக்கும் கொள்கை கொண்டுள்ளதால், எம். எ.சி.சி.-யிடம் பி.எஸ்.எம். வேட்பாளர்கள் பெயரைக் கொடுக்க தயக்கமில்லை என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.