மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன?

2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன.

அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி எடுப்பது தினசரி வாடிக்கையானது. பலர் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில், புதிய வேலைகளுக்கான வாய்ப்பே விடை தெரியாத வினாக்காளாகின.

இந்திய பொருளாதாரம் பலத்த அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. பலவீனமான பொருளாதாரத்திற்கு உள்நாட்டு நுகர்வு தோள்கொடுத்து உதவியதால், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்தார்கள்.

பெரியளவிலான வர்த்தகத்தில் தாக்கங்கள் ஏற்பட்டாலும், கிராமப்புறங்களில் விற்பனை வலுவாகவே இருந்தது அது மட்டுமல்ல, சிறிய தொழிற்துறைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன? இதற்கான விடையை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக இன்றைய பொருளாதார சூழ்நிலையை பார்ப்போம்.

பொருளாதார மந்தநிலையை நோக்கி நாம் செல்கிறோமா?

”இன்றைய பொருளாதார நிலை என்ன? தனியார் முதலீடு வீழ்ச்சியடைகிறது, தொழில்துறை உற்பத்தி சுருங்குகிறது. விவசாயமோ நெருக்கடியில், கட்டுமானம் மற்றும் பிற சேவைத்துறைகளும் மந்தமாகிவிட்டன. ஏற்றுமதி, சிக்கலை எதிர்கொண்டுள்ளது, பணவிலக்க நடவடிக்கையோ பலனை தரவில்லை. பணவிலக்கமும், கவனக்குறைவாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பும் மக்களை பாதித்துவிட்டது. காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.”

இதைச் சொல்வது எதிர்கட்சியினரோ, வேறு யாருமோ அல்ல, பாரதிய ஜனதா கட்சியின் உயர்நிலைத் தலைவரும், அடல் பிஹாரி வாஜ்பேயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றியவருமான யஷ்வந்த் சின்ஹா.

அவர் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால், சிறப்பான பலனளிக்கும் என்று எதிர்பார்த்த அரசின் பணவிலக்க நடவடிக்கை பலனளிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.’

உண்மையிலுமே நாடு பொருளாதார மந்த நிலையை நோக்கி நகர்கிறது என்றால், நிலைமையை சமாளிக்க பிரதமர் மோதியும், நிதியமைச்சர் ஜேட்லியும் என்ன செய்யலாம்? 2008இல் நாடு சிக்கலை சந்தித்தபோது, அதிலிருந்து வெளியேற அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் கடைபிடித்த வழிமுறைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன?

யஷ்வந்த் சின்ஹா சொன்னது சரியா?

இது பற்றி பொருளாதார நிபுணர்களின் கருத்தை பார்ப்போம்.

யஷ்வந்த் சின்ஹாவின் கருத்து சரியே என்கிறார் பொருளாதார நிபுணர் பரஞ்சய் குஹா டாகுர்தா.

குஹா கூறுகிறார், ”2008 ஆம் ஆண்டில் உலகளவிலான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, அரசு அதிக நிதியை செலவிடவேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் பரிந்துரை செய்தனர், அது அமல்படுத்தப்பட்டு சிறப்பான பலன்களையும் அளித்தது. இதை தற்போதைய பிரதமர் மோதியும் அவரது நிதியமைச்சர் ஜேட்லியும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வார்களா என்பதை எதிர்காலமே கூறமுடியும்.”

நிலைமை உண்மையிலுமே மிகவும் மோசமா?

பரஞ்சய் குஹா டாகுர்தா கூறுகிறார், ”சுமார் ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசிடம் அதிக நேரமில்லை. இந்த சூழ்நிலையில் அரசு முந்தைய அரசின் பாணியை கடைபிடிக்கலாம். நிதி பற்றாக்குற்றாக்குறை அதிகரித்தால், அதன் தாக்கம் பணவீக்கத்தில் எதிரொலிக்கும்.”

பெட்ரோல் விலையை பற்றி பொதுமக்கள் பெருங்கவலை கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்த நடவடிக்கை அரசுக்கு பலனளிக்கலாம்.

அவர் மேலும் கூறுகிறார், ”பெட்ரோல் விலையை அதிகரித்திருக்கும் அரசு தனது வருவாயை அதிகரித்திருக்கிறது. எனவே அரசு செலவு செய்யலாம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”

இதுவரை எதிர்கட்சியினர் தொடர்ந்து கூறிவந்த கருத்தை இப்போது யஷ்வந்த் சின்ஹா போன்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரே கூறும்போது மக்களின் கவனம் அதில் குவிகிறது.

வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

டாகுர்தவின் கருத்துப்படி, ”இந்தியா விடுதலை அடைந்தபிறகு முதன்முறையாக வேலையின்மை மிகவும் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் (2013-14 மற்றும் 2015-16), மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது”.

2008 ஆம் ஆண்டில் அரசு உள்நாட்டு பொருட்களின் நுகர்வை அதிகரித்து, அதற்காக பணம் செலவிட்டது. பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதால் நிலைமை முன்னேறியது. அதேபோன்ற நிலைமை மீண்டும் திரும்புமா?

“அரசு அதிகமாக செலவழித்தால் அதன் தாக்கம் பணவீக்கத்தில் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் எதுஎப்படியிருந்தாலும், அரசு செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை காலச் சக்கரத்தில் இதே கதை மீண்டும் நிகழலாம். வரவிருக்கும் நாட்களில், மோதி அரசு பழைய சூத்திரத்தை மீண்டும் கையில் எடுக்க நேரிடலாம்.”

2008ஆம் ஆண்டின் படிப்பினை என்ன?

தொழில்துறைக்கு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வேறு பல பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். 2008இன் நிதி நெருக்கடி உலகளாவியது என்று மூத்த பத்திரிகையாளரும் பொருளாதார செய்தியாளருமான எம்.கே. வேணு கூறுகிறார்.

2008 மந்த நிலையின் விளைவு உலகம் முழுவதும் பரவலாக உணரப்பட்டது. ஏனெனில் உலகளவிலான வர்த்தகத்திலும், முதலீட்டிலும் பொருளாதார மந்தநிலை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதில் இந்தியாவும் பாதிக்கப்பட்டது. நிதிச் சந்தை வீழ்ந்த்து, பங்குச் சந்தை ஆட்டம் கண்டது, கட்டுமானத்துறை பலவீனமடைந்தது, தொழிற்துறை பாதிக்கப்பட்ட்து.

“ஆனால் அந்த நேரத்தில் இந்திய அரசு இரண்டு முக்கியமான அம்சங்களைக் கொண்ட கொள்கையை கையில் எடுத்தது. முதலில், நிதி வரத்து அதிகரிக்கப்பட்டது. தனது செலவினங்களை அரசு அதிகரித்ததால், நுகர்வு நிலை பராமரிக்கப்பட்டது. இரண்டாவதாக, ரிசர்வ் வங்கி அதன் நிதிக்கொள்கையை மாற்றியதால் சந்தைகள் ஊக்கமடைந்தன” என்கிறார் எம்.கே.வேணு.

மோதி அரசு நன்மைகளை பெறமுடியவில்லையா?

“இந்த கொள்கைகளின் காரணமாக, பொருளாதார மந்தநிலையை இந்தியா சமாளித்தது. உலகளவிலான பொருளாதார மந்த நிலையின் தாக்கம் இந்தியாவிற்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 2008ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதிலும், இந்தியா 2009-10 மற்றும் 2010-11இல் தன்னை சமாளித்துக் கொண்டது.”

பொருளாதார மந்தநிலையின் தாக்கம் நீண்டகாலம் நீடித்ததில், வளர்ச்சிவிகிதம் குறைந்தது. ஆனாலும் தற்போதைய அளவுக்கு ஒருபோதும் வீழ்ச்சியடையவில்லை. மோதி அரசு பொறுப்பேற்றபோது, நாட்டின் நிதிநிலைமை நன்றாக இருப்பதாகவே நிதியமைச்சரும் கூறினார். பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்தன. நடப்பு கணக்கு பற்றாக்குறை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான வேறுபாடு) குறைவாக இருந்தது.

இந்த சாதகமான சூழலை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனதற்கான காரணத்தையும் வேணு சொல்கிறார், பொருளாதாரத்தை வலுவாக்குவதற்குப் பதிலாக, அமைப்பு ரீதியான மாறுதல்களை அரசு மேற்கொண்டது. இதனால் அதிக நன்மை ஏற்படவில்லை.

பணவிலக்க நடவடிக்கை தவறான சூதாட்டமா?

கருப்பு பணத்தை கையாள்வதற்காக செயல்படுத்தப்பட்ட பணவிலக்க நடவடிக்கையும், அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இவற்றில் இருந்து முற்றிலுமாக மீள்வதற்கு முன்னரே பொருளாதாரம் பலத்த அடிவாங்கிவிட்டது. குறிப்பாக சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துவிட்டன.

மன்மோகன் சிங் அரசின் கொள்கைகளிலிருந்து மோதியும் ஜேட்லியும் கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பினைகள் இருக்கிறதா?

இதற்கு பதிலளிக்கிறார் வேணு, “இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தற்போதும் அதிகமாகவே உள்ளது. வங்கிகளுக்கு அதிக பணம் வழங்கப்படுவது மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் வங்கிகளின் நிலையே மோசமாக இருக்கிறதே? முதலில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டு தத்தளித்த நிறுவனங்கள், வங்கிக்கடனை திரும்ப செலுத்தாத நிலையில், வங்கிகளின் நெருக்கடி அதிகரித்துவிட்டது.”

”10 லட்சம் கோடி ரூபாய் கடனை 50 நிறுவனங்கள் திரும்பச் செலுத்தவில்லை. இத்தகைய சூழ்நிலையில், வங்கிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பணத்தை கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அவர்கள் லாபமீட்ட முடியும்.

”கடந்த எட்டு மாத காலத்தில் வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கவில்லை. அரசின் பணவிலக்க நடவடிக்கைக்கு பிறகு, வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றவர்கள் ஏழு-எட்டு மாதங்களாக தவணையை செலுத்த முடியவில்லை என்பதும் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது.”

சிறு தொழில்களுக்கு வங்கி உதவி தேவை

முறைப்படுத்தப்பட்ட தொழில்துறையின் எட்டு துறைகளில், 2011-12 வரை பத்து லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் இருந்தன, அது தற்போது ஒன்றரை லட்சமாக வீழ்ந்துவிட்டது. முறைப்படுத்தப்படாத தொழில்துறையின் நிலையோ மேலும் மோசம், அதில் மிகப்பெரிய வீழ்ச்சி தென்படுகிறது.

தனியார் தொழில்களுக்கு அரசு புத்துயிரூட்டவேண்டும். இது ஒரு சுழற்சி. வங்கி கடன் கொடுக்கவில்லையென்றால், தொழில்கள் நம்பிக்கை இழந்துபோகும். வர்த்தகத்தை குறிப்பாக சிறு தொழில்களை அரசு ஊக்குவித்து, நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாதங்களில் சிறிய அளவிலான தொழில் துறை விற்பனை 58% குறைந்துள்ளது. விற்பனையில் இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டால், வேலைவாய்ப்பின் நிலை?

இந்திய பொருளாதாரத்தின் செயல்பாட்டை பற்றி புரிந்துக் கொள்வதில் சுணக்கமாக இருப்பதுதான் தற்போதைய அரசின் சிக்கல். பணவிலக்க நடவடிக்கை என்பது பெரு வணிகர்களின் கறுப்பு பணத்தை இலக்காகக் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில், பலனோ முற்றிலும் நேர்மாறாக இருந்தது.

கழுத்தை நெரித்து டிஜிட்டல்மயமாக்க முடியுமா?

“தொழிற்துறை வளர்ச்சியில் சிறு வணிகர்களின் பங்கு 40 சதவீகிதம். பொதுவாக ரொக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அவர்கள் பணவிலக்க நடவடிக்கையால் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். இந்த பிரச்சனை தீர்க்கப்பட முடியாத சிக்கலாகிவிட்டது” என்கிறார் வேணு. இது மட்டுமா?

“விவசாயிகளின் நிலைமையோ இன்னும் மோசம். சம்பா பயிர்கள் சிறப்பான விளைச்சலை கொடுத்தன, பருப்பு உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் விவசாயிகள் சந்தைக்கு சென்றால் பாதி விலையே கிடைக்கும் நிலைமை! இதற்கு காரணம்? வர்த்தகர்கள் ரொக்க பரிவர்த்தனையையே மேற்கொள்வார்கள். அதில் பணவிலக்க நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கத்தின் பலன் விவசாயிகளின் தலையில் விடிந்தது.”

”சங் பரிவாரின் பொருளாதார ஆலோசகர், அரசின் பணவிலக்க நடவடிக்கையை நியாயப்படுத்தியே பேசுகிறார். ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் முறைசாரா தொழில்கள் முக்கிய பங்காற்றுகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவர்களை கட்டாயப்படுத்தி டிஜிட்டல்மயமாகுங்கள் என்று நெருக்கடி கொடுக்கமுடியாது என்றும் அவர் கூறினார். சந்தை நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்துதான் மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தமுடியும்,” என்கிறார் அவர்.

-BBC_Tamil

TAGS: