ஆஸ்திரியாவில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய தடை அமலுக்கு வந்தது

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை அமலுக்கு வந்தது.

ஆஸ்திரியவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாக, தலைமுடியில் இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.

தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி வெற்றிபெற அதிகம் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய குழுக்கள், ஆஸ்திரியாவில் சிறிய அளவிலான முஸ்லிம்கள் மட்டுமே முழு முகத்தையும் மறைக்கும் புர்கா அணிவதாகத் தெரிவித்துள்ளன.

இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைகளான புர்கா மற்றும் நிகாப்பிற்கு தடை விதித்துள்ளது.

மேலும் மருத்துவ முகமூடிகளுக்கு, கோமாளி போல அலங்காரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் சுமார் 150 பெண்கள் முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிகிறார்கள்.

இருந்த போதும், தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், வளைகுடா நாடுகளில் இருந்து, ஆஸ்திரியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என அந்நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகள் 2011- ஆம் ஆண்டு முதல் நிகாப் அணிய தடை விதித்துள்ளன.

இதே மாதிரியான தடைக்கான நடவடிக்கைகள் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு முகத்தை மறைக்கும் முக்காடு, சட்டப்படி சாத்தியமுள்ள இடங்களில் தடை செய்யப்படும் என ஜெர்மன் சான்ஸலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

நிகாப் மற்றும் புர்காவிற்கு இங்கிலாந்து தடை விதிக்கவில்லை.

நிகாப் மற்றும் புர்கா என்றால் என்ன?

நிகாப் என்பது, முகத்தில், கண்களை மட்டும் விட்டுவிடு, பிற பாகங்களை முழுமையாக மறைப்பது.

இதை, கண்களுக்கு மட்டும் தனியாகவும், தலையில் ஒரு முக்காட்டுடன் சேர்த்தும் அணியலாம்.

புர்கா என்பது இஸ்லாமியர்களால் அணியக்கூடிய முக்காடுகளில், முழுமையாக தலையை மறைக்கக் கூடியதாகும்.

இது, தலையையும், உடலையும் மறைக்கும் வகையிலாக ஒரே ஆடையாக இருப்பதோடு, பார்வைக்காக வலை மாதிரியான அமைப்பு உள்ள ஆடை. -BBC_Tamil