14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட நஜிப் தகுதியற்றவர் என்று எம்எசிசி அறிவிக்குமா?, கிட் சியாங் சவால்

 

1எம்டிபி ஊழல் விவகாரம் காரணமாக பிரதமர் நஜிப் ரசாக் தேர்தல் வேட்பாளராக இருக்கத் தகுதியற்றவர் என்று அறிவிக்கும்படி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சவால் விட்டுள்ளார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்களின் பகுதிப் பட்டியலை பிஎன் எம்எசிசியிடம் தாக்கல் செய்து விட்டதாக நஜிப் அறிவித்ததைத் தொடர்ந்து கிட் சியாங் இச்சவாலை வெளியிட்டார்.

பிஎன் தாக்கல் செய்துள்ள அந்தப் பட்டியலில் நஜிப்பின் பெயர் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய கிட் சியாங், எம்எசிசி தலைவர் சுல்கிப்ளி அஹமட் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட நஜிப் தகுதியற்றவர் என்று அறிவிப்பாரா என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுள்ளார்.

ஒரு தனிப்பட்ட மனிதராக நஜிப் ரசாக் மலேசியாவை ஓர் உலகக் கொள்ளைக்கார நாடாக மாற்றியிருக்கிறார்.

கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் பிரதமர்களாக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் ஹுசேன், ஹுசேன் ஓன், மகாதிர் முகமட் மற்றும் அப்துல்லா படாவி ஆகியோர் இது போன்றதைச் செய்யவே இல்லை என்று கிட் சியாங் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இவ்வாறான சூழ்நிலையில், இவ்வாறான அறிவிப்பை சுல்கிப்ளியோ எம்எசிசியோ அறிவிக்கும் தைரியம் இல்லை என்றால், 14ஆவது போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களை சோதணைக்கும் தீவிர புலன் விசாரணைக்கும் உட்படுத்துவதில் என்ன பயன்”, என்று கிட் சியாங் மேலும் கேட்டுள்ளார்.