14-வது பொதுத் தேர்தல் : ம.இ.கா.-வின் வேட்பாளர்கள் யார் யார்?

ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலைப் பிரதமரிடம் கொடுத்துவிட்டதாக அறிவித்தது, கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் காய்ச்சலை ஏற்படுத்திவிட்டது.

சில பிரதான ஊடகங்களின் அறிக்கையை மேற்கோளிட்டு கூறுகையில், “பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பார், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) ஆய்வுக்கு ஒப்படைக்கப்படும்,” என்று சுப்ரமணியம்  கூறினார்.

அப்பட்டியலில், தாங்கள் குறிவைத்திருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ம.இ.கா. தங்கள் வேட்பாளர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது என்றார் அவர்.

எனவே, ம.இ.கா.-வின் வேட்பாளர்கள் யார்?

மஇகா ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக, மஇகா-வின் நம்பத்தகுந்த வட்டாரம் உறுதிபடுத்தியது.

“எனினும், சட்டமன்ற மட்டத்தில் பாரிசான் உறுப்புக் கட்சிகளுடன் சில இடங்களை மாற்றிக்கொள்ளும் சாத்தியம் உண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் கடந்த தேர்தலின் போது, நின்ற இடங்களிலேயே நாம் போட்டியிடுவோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத நபர் கூறியதாக ‘பெரித்தா டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 13-வது பொதுத் தேர்தலில், சுங்கை சிப்புட், தாப்பா (பேராக்), காப்பார், கோத்தா ராஜா, சுபாங், உலு சிலாங்கூர் (சிலாங்கூர்), தெலுக் கெமாங் (நெகிரி செம்பிலான்), சிகாமாட் (ஜொகூர்) மற்றும் கேமரன் மலை (பஹாங்) நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா. போட்டியிட்டது.

அந்த 9 தொகுதிகளில், ம.இ.கா. 4 தொகுதிகளை வென்றது – சுப்ரமணியம் (சிகாமாட்), எம்.சரவணன் (தாப்பா) , பி.கமலநாதன் (உலு சிலாங்கூர்) மற்றும் ஜி.பழநிவேலு (கேமரன் மலை). தற்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், பழநிவேலு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டார்.

சுகாதார அமைச்சருமான சுப்ரா, தொடர்ந்து 4-வது முறையாக (2004-ல் இருந்து) சிகாமாட் தொகுதியிலேயேப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எம்.சரவணனும் பி.கமலநாதனும் தற்போதைய இடங்களிலேயேப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

“சுங்கை சிப்புட்டில், ம.இ.கா.-வின் தலைமைச் செயலாளர் எ.சக்திவேலு போட்டியிடும் சாத்தியம் உள்ளது. கடந்த தேர்தலில், அவர் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால், பிகேஆர் வேட்பாளர் ஜி.மணிவண்ணனிடம் தோல்வியைத் தழுவினார்,” என அவர் தொடர்ந்து கூறினார்.

காப்பார் தொகுதி துணைத் தலைவர் தி.எம். செல்வத்தை, காப்பார் நாடாளுமன்றத்திலும் , முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவை சுபாங் நாடாளுமன்றத்திலும் நிற்கவைக்க ம.இ.கா. விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், கோத்தா ராஜாவின் வேட்பாளர் யார் என்று, இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

“சிலாங்கூர் இளைஞர் பிரிவு தலைவர் டி.கஜேந்திரன் அல்லது தொகுதி தலைவர் ஆர்.எஸ். மணியம் இருவரில் ஒருவருக்கு அங்கு போட்டியிடும் வாய்ப்புண்டு என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், இறுதி நேரத்தில் அத்தொகுதி அம்னோவிற்குக் கைமாறும் வாய்ப்பும் உள்ளது, காரணம், கோத்தா ராஜா தொகுதியில் இருக்கும் ஶ்ரீ அண்டாலஸ் சட்டமன்றத்தில் ம.இ.கா. போட்டியிடவுள்ளது,” என்றும் அவர் விளக்கப்படுத்தினார்.

ம.இ.கா. பிரச்சாரக் குழு தலைவர், வி.எஸ். மோகன் மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் சி.சிவராஜா இருவரும் தெலுக் கெமாங் மற்றும் கேமரன் மலையில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

ம.இ.கா. துணைத் தலைவர் எஸ்.கே. தேவமணி, உதவித் தலைவர் டி.மோகன், பொருளாளர் எஸ். வேள்பாரி மற்றும் மகளிர் தலைவி எம்.மோகனா பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.

“காரணம், அவர்கள் அனைவருக்கும் ‘செனட்டர்’ ஆகும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது,” என்று அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்ததாகப் பெரித்தா டெய்லி கூறியுள்ளது.