எதிரணி ஆட்சியில் வாழ்க்கை இருண்டு விடும்: அரசுப் பணியாளர்களுக்கு நஜிப் எச்சரிக்கை

இன்று     புத்ரா   ஜெயா    அனைத்துலக   மாநாட்டு  மண்டபத்தில்   சுமார்   5,000   அரசுப்  பணியாளர்களிடையே   உரையாற்றிய  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   எதிரணி  ஆட்சிக்கு    வந்தால்   அவர்களின்   வாழ்க்கை   இருண்டு விடும்   என்று எச்சரித்தார்.

ஆளும்  கூட்டணியும்  அரசுச்  சேவையும்   பிரிக்க  முடியாதபடி   ஒன்றிணைந்துள்ளன  என்றாரவர்.

“அதனால்தான்  சில   தரப்பினர்,  குறிப்பாக     எதிரணியினர்,  மற்ற   நாடுகளுடன்   ஒப்பிட்டு    நம்  நாட்டு   அரசுப்  பணியில்   தேவைக்கு   அதிகமான   ஆள்கள்   இருப்பதாகக்  குறை   சொல்லும்போதும்   அவர்களின் எண்ணிக்கையைப்   பாதியாகக்   குறைக்க    விரும்புவதாகக்   கூறும்போதும்   நாங்கள்   ஆத்திரமடைகிறோம்.

“அரசாங்க   அதிகாரிகள்  ‘திறனற்றவர்கள்’  என்றும்     makan gaji buta (வேலை  செய்யாமல்  சம்பளம்  வாங்கும்  கூட்டம்)   என்றும்  எதிரணி  முத்திரை  குத்தி  வைத்துள்ளது.

“அரசுப் பணியாளர்கள்  எதற்கும்  பயன்படாதவர்கள்  என்றுகூட   சில   எதிரணித்   தலைவர்கள்   துணிச்சலாகக்  கூறுகிறார்கள்.

“இந்த   எதிரணி   நாட்டை   ஆள்வதற்கு   அனுமதித்தால்   பெரும்பான்மை   அரசுப்  பணியாளர்கள்   என்ன   ஆவார்கள்  என்பதை   எண்ணிப்   பாருங்கள்”,  என்று   நஜிப்   கூறினார்.