அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன? மின்னல் வானொலியில் தொடரும் ‘தகிடுதத்தம்’


அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன? மின்னல் வானொலியில் தொடரும் ‘தகிடுதத்தம்’

குமரிமலையன்,

இன்றல்ல; நேற்றல்ல; ஆண்டுக் கணக்கில்  அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் தொடரும் தகிடுதத்தம் நின்றபாடில்லை; ஏதோ உடற்கட்டமைப்பு ஆடை என்று சொல்லிக் கொண்டு அதை விற்பதற்காக அந்த ஆடைகள் ஜெர்மனிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை யென்றும் அதில் கலந்துள்ள அதீத சிவப்பணுக்கள்தான் தடித்த உடலையுடைய ஆண்-பெண் இருபாலரின் உடலையும் சீராக வைத்திருக்க உதவுகின்றன என்றும் சொல்லி, இன்னும் பலவிதமாகவும் பசப்பி விளம்பரம் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் மாலை மயங்கும் வேளையில் ஆளை மயக்கும் இந்த வேலையைப் பற்றி பல காலம் சிந்தித்த நான், ஒரு நாள் ஒரு மருத்துவரிடம் அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன ஐயா என்று வினவினேன்.

அவர், முனைவர் பட்டம் பெற்றுக் கொண்டு டாக்டர் என்று தம்பட்டம் அடிக்கும் வரிசையில் அணிவகுப்பவர் அல்லர்; போலி மருத்துவரும் அல்லர்; இல்லாத ஒரு பல்கலைக்கழகம் இருப்பதாகச் சொல்லி, அந்தப் பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர்(முனைவர்) பட்டம் அளித்ததாக பத்திரிகை அறிக்கையும் விட்டு விளம்பரமும் செய்து கொள்ளும் மானமுள்ள(!) மருத்துவரும் அல்லர் அவர்; உண்மையிலேயே எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவரான அவரிடம்தான் விளக்கம் கேட்டேன். நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் எத்தனையோ பேர் இருக்க, குறிப்பிட்ட அவரிடம் ஏன் கேட்டேன் என்றால், அவர் ஓர் இலக்கியவாதியும்கூட  என்பதால்;

கேட்ட மாத்திரத்தில் சிரித்தார்; அதுவும் பகடிச் சிரிப்பு.

இந்த உலகில் அதீத சிவப்பணு என்பதாக ஒன்று இல்லவே இல்லை; மருத்துவ உலகில் அப்படிப்பட்ட பொருளை அல்லது உயிரியை அல்லது நுண்கிருமையைத் தேடி அலைந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். உண்மை நிலை இவ்வாறிருக்க, இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி, அதுவும் ஜெர்மனிய தொழில்நுட்பம் என்று சொல்லிக் கொண்டு ஏமாந்தவர்கள் தலையை மழித்து சந்தனத்தைத் தடவும் ஏமாற்று வேலையை அரச வானொலியான மின்னல் வானொலி வஞ்சகமில்லாமல் காலங்காலமாகத் தொடர்கிறது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட வேலையை மின்னல் வானொலியினர் செய்கின்றனர் என்றால், நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் தோன்றி இருந்தால் அப்பாவி மக்களை இன்னும் எப்படி யெல்லாம் ஏமாற்ற முனைந்திருப்பார்களோத் தெரியவில்லை.

ஒன்று மட்டும் புரியவில்லை; மின்னல் வானொலியான அரச வானொலி இயங்குவதற்கு அரசு நிதி அளிக்கும் நிலையில், இப்படியெல்லாம் சமுதாயத்தை ஏமாற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிப்பது, விளம்பர வருமானத்திற்குத்தான். இப்படி யெல்லாம் பொருளீட்டி மின்னல் நிருவாகத்தினர் என்னதான் செய்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

ஒரு கல் வியாபாரி, ருத்திராக்கக் கொட்டையை வாங்கி அணிந்து கொண்டால், பெற்றோரை மதிக்காக பிள்ளைகள், முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த தம் பெற்றோரை உடனே அழைத்து வந்து பராமரிப்பதுடன் மரியாதையுடனும் நடத்துவர்; அதைப்போல தம் பிள்ளைகளிடம் அன்பு காட்டாத பெற்றோர், இதை வாங்கி அணிந்து கொண்டால்,  உடனே தம் மக்களிடம் அன்பு மழை பொழிவார்கள் என்றெல்லாம் கதையளந்து பேசுகிறார். இவ்வாறெல்லாம் அவர் பேசுவதற்கு விளம்பர பணத்தைப் பெற்றுக் கொண்டு வாய்ப்பளிக்கிறது மின்னல் வானொலி;

சூரியன் என்ற கோள், இரண்டாம் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார் என்றெல்லாம் வானொலியிலேயே பேசும் இவர், சூரியனுக்கு ஆங்காங்கே வீடுகளைக் கட்டிக் கொடுத்து, புதுமனைப் புகுவிழாவையும் நடத்தி வைத்திருப்பார் போலும்!

அதைப்போல, இன்னொருவருக்கும் விளம்பர வாய்ப்பு அளிக்கிறது மின்னல் வானொலி; அவர் கல் வியாபாரியைப் போல் அல்லாமல், சொல் கொலைஞராகத் திகழ்கிறார். புதுமை ஞானி என்று தன்னைத்தானே பறைசாற்றிக் கொள்ளும் அவர், வாழ்க்கை என்று சொல்லை மனங்கூசாமல் ‘வாள்க்கை’, வாள்க்கை’, வாள்க்கை’ என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி தமிழ்க் கொலை புரிகிறார்.

போதாக்குறைக்கு, தமிழ்ச் செய்திப் பிரிவினரும் தங்கள் பங்கை நிறைவு செய்யும் விதமாக, மீண்டும் முருங்கை மரம் ஏறுகின்றனர். செய்தி அறிக்கையில் Assistant Commissioner, Ceiling போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியப்படியேப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வளவோ நல்லன புரியும் மின்னல் வானொலியினர், இவற்றை யெல்லாம் செம்மைப் படுத்திக் கொண்டால், நம் சமூகத்திற்கு நன்மை விளையும்.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • s.maniam wrote on 4 அக்டோபர், 2017, 16:44

  பல ஆண்டுகளுக்கு முன்பே RTM தமிழ் பிரிவு திரு . கிருஷ்ணனிடம் இதை பட்றி கேட்டேன் , காலத்தின் கட்டாயம் வானொலி நிலையமும் வியாபார ரீதியாக இயங்க வேண்டி இருக்கிறது என்றார் ! இஸ்லாமிய பாடல்கள் ! கிறிஸ்துவ பாடல்கள் ! இந்து பக்தி பாடல்கள் எல்லாம் சம நிலையில் ஒளிபரப்பானது என்பது முன்னோரு காலத்தில் உண்மைதான் ! ( இப்போதும் ஒளியேறலாம் , நாம் தான் இப்போதெல்லாம் வானொலி கேட்பது குறைந்துவிட்டதே ! ) TH ராக ! 24 மணி நேர ஆஸ்ட்ரோ ! செம்மை படுத்துங்கல் சமூகத்திற்கு நன்மை விளையும் என்றால் ! யார் அதை செய்வது ! தமிழ் ஆறாம் வகுப்பு படித்ததையே தமிழில் எமக்கு அனைத்தும் தெரியும் ! என்று கடமைக்கு கடமையாற்றும் நமது மின்னல் மேதாவிகளை குறை கூறுதல் முறையில்லை ! நமது பல்கலைகழக தமிழ் மேதாவிகளே கண்டு கொள்வதில்லை ! ம .இ . க .காரனுக்கும் ,கல்வி பிரிவு ! மொழி பிரிவு என்று எதாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை ! பதன் படுத்தி ! நீர் விட்டு ! பேணி காத்து வளர்க்க வேண்டிய நமது தமிழ் எனும் ரோஜா செடி , மழை நீரை நம்பி காட்டு செடியாக வளர்ந்து கொண்டிருக்கிறது ! கேள்வி பதில் அங்கத்தில் தமிழ் தெரியாதவன் எல்லாம் உளறி கொண்டுஇருக்கிறான் அதையும் நாம் மானம் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறோம் !!

 • கயவன் wrote on 4 அக்டோபர், 2017, 18:32

  RTM தமிழ் பிரிவா? இல்லை இந்தியன் பிரிவா? முதலில் அதை தெளிவு படுத்துங்கள். இந்தியன் பிரிவு வந்தவுடன் நான் RTM .. கேட்பதையே விட்டு விட்டுவிடடேன். தெலுங்கனும் மலையாளியும் தமிழ் பேசினால் RTM . தமிழ் பிரிவு சந்திதான் சிரிக்கும்

 • s.maniam wrote on 5 அக்டோபர், 2017, 18:38

  நமது நாட்டில் தமிழ் பள்ளியில் தமிழ் படித்தவன் எல்லாம் தமிழன் தான் ! நாம் அனைவரும் இந்தியர்கள் என்று அரசியல் ரீதியாக ஒன்று பட்டு இருக்கிறோம் ! இங்கு தெலுங்கன் ! மலையாளி ! என்றெல்லாம் பேதம் கிடையாது ! அரை குறை ஆங்கிலத்தையும் ! அரை குறை தமிழையும் கலந்து பேசும் மானங்கேட்ட தமிழனை விட மற்றவர்கள் சிறப்பானவர்கள் !! தமிழின் வளர்ச்சிக்கும் ! தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காட்ரிய தமிழ் தொண்டு செய்தவர்கள் அனைவரும் தமிழ்களே ! தமிழ் பட்ருள்ள அணைத்து தமிழனும் அவர்களுக்கு நன்றி கடன் பட்டவன் ! அவர்களை போற்றும் கடப்பாடு கொண்டவன் ! ஜாதி மதம் இனம் அனைத்திற்கும் அப்பாற் பட்டது மொழி ! பிரிவினை வளர்த்து சட்டிக்குள் குதிரை ஓட்டும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள் நண்பர்களே !!

 • கயவன் wrote on 6 அக்டோபர், 2017, 9:07

  தமிழ் படித்தவன் தமிழன் என்றால் சீனனும் (சில) தமிழ் படித்தவர்கள் தமிழன் ஆகி விடுவார்களா? ( அரை குறை ஆங்கிலத்தையும் ! அரை குறை தமிழையும் கலந்து பேசும் மானங்கேட்ட தமிழனை விட மற்றவர்கள் சிறப்பானவர்கள). யாரு அந்த மற்றவர்கள்? உன்னை போல போல தெலுங்கன்தானா? நான் தமிழன், நீ தெலுங்கன் என்னை தரை குறைவா பேச நீ யாரு ? இதை விட கீழ்தரமா என்னால் பேச முடியும் … நான் பண்புள்ள தமிழன் . உன்னை போல மடடமான தெலுங்கன் இல்லை .. இந்தியர்களை பற்றி பேசு , தமிழர்களை பேச உனக்கு என்ன தகுதி இருக்குறது . தெலுங்கனை பேச உன் தெலுங்கு மொழிக்கு போ . இந்தியர்களையும் தமிழர்களையும் நீ எப்படி வித்தியப்படுத்தி எழுதுவதை இங்கு எல்லோரும் படித்து கொண்டு இருக்கார்கள் . உங்களை போல ஆட்கள் தமிழ் படித்து தமிழனுக்கு தொண்டு செய்ய வரவில்லை , தமிழர்களின் அறியாமையை பயன் படுத்தி எங்களுக்கே ஆப்பு வைக்குறீங்க.. தமிழர்களை மடடமமாகவும் கீழ்தரமா பேசுவதை வழக்கமா வைத்துருக்குறீங்க . தெலுங்கனை பற்றி இப்படி எழுத்து இருக்கியா? ( ஜாதி மதம் இனம் அனைத்திற்கும் அப்பாற் பட்டது மொழி) தத்துவங்களும் நியாயங்களும் தமிழனுக்கு மட்டும்தானா? தெலுங்கனுக்கு இல்லையா ..(பிரிவினை வளர்த்து சட்டிக்குள் குதிரை ஓட்டும் தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள் நண்பர்களே !!) நீ எழுதியதை நீயே படித்து பாரு .. உனக்கு நல்லா பொருந்தும்

 • s.maniam wrote on 7 அக்டோபர், 2017, 8:43

  உயர் திரு .கயவன் ( இது தமிழனின் பெயரா மன்னிக்கவும் இது வரை கேள்விப்பட்டதில்லை ) ஒரு உண்மை தமிழனின் எழுத்தை கொச்சை படுத்துவதும் ,இழிவு படுத்துவதும் தான் உமது தமிழ் பண்போ !! ஒரு தமிழனின் ஆதங்கம் என் எழுத்துக்கள் ! தலைநகர் மணியம் யார் என்று விளம்பர பலகைகளில் தமிழ் இருக்க வேண்டும் என்று தலை நகர் தெருக்களில் என்னுடன் சுட்ரி திரிந்த வர்களை தயவு செய்து கேளுங்கள் ! இங்கு யாருடனும் பகைமை வளர்க்க இந்த பகுதிக்கு நான் எழுதுவதில்லை ! உங்களை என் எழுத்து புண் படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் !!

 • முகில் wrote on 10 அக்டோபர், 2017, 16:02

  கயவன் கூறியது உண்மைதான் நாங்கள் எங்கள் தமிழ் உரிமையாய் பேசுகிறோம் ,கண்டவர்கள் இடையில் புகுந்து எங்களுக்கு சைத்தான் வேதம் ஓதுவதை நாங்கள் விரும்பவில்லை

 • s.maniam wrote on 10 அக்டோபர், 2017, 21:30

  தமிழன் உருப்படாமல் போவதற்க்கு இதுதான் காரணம் ஒற்றுமையின்மை ! ஜாதி ,மதம் ,இனம் ,என்ற வெறி ,பாகுபாடு ! தானும் படுக்க மாட்டான் ! தள்ளியும் படுக்கமாட்டான் ! அறிவாளிகளையும் ! படித்தவர்களையும் ! சமுதாயம் உயர பாடுபடுபவர்களையும் மதிக்க தெரியாது !எத்துணை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டார்கள் என்பது உண்மைதான் !!

 • iraama thanneermalai wrote on 11 அக்டோபர், 2017, 7:17

  எந்த மொழியை கற்றாலும் எந்த மொழியை பேசினாலும் ஆழ்மனதில் தமிழன் என்ற உணர்வோடு செயல்பட்டு சமுதாயயத்தின் உயர்விற்கும் ஒற்றுமைக்கும் உண்மையாக பாடுபடும் நம்மவன்தான் நம் இனத்த்தை முன்னெடுத்து செல்வான் . அறுபது ஆண்டுகளாக வேற்றுமொழி நடிகர்கள் தமிழ் நாட்டை ஆண்டு இன்று நல்ல ஒரு தமிழனை எட்டு கோடி பேர்களில் காண முடியாத ஒரு நிலையை உருவாக்கி வைத்து உள்ளார்கள் .

 • abraham terah wrote on 11 அக்டோபர், 2017, 10:12

  இந்த நிகழ்ச்சி தொடர்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 14 அக்டோபர், 2017, 23:10

  தமிழன், தெலுங்கன், மலையாளி மொழி பெயர்த்து பார்க்க வேண்டாம் காரணம் எல்லோரும் தமிழில் தான் பேசுகிறார்கள் தமிழ் பள்ளியில் படிது வந்தவர்கள். நாம் தமிழில் பேசும் போடும் எழுதும் போடும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆவல். எழுது பிழைகள் பேசும் போது மொழி பிழைகள் இல்லாமல் பார்து கொண்டாலே தமிழுக்கு புணியமாக இருக்கும். இங்கு ஒன்றை சுட்டி காட்ட விரும்புகிறேன். அதாவது பாடகர் டி.எம். சௌந்தரராஜன் மிக சிறந்த பாடகர் யாரும் மறுக்க முடியாது. இதில் என்ன பெருமை என்றால் அவர் தமிழர் எல்லை இருப்பினும் தமிழில் பாடும் பொழுது மிகவும் சுத்தமாக அந்த ல்,ள்,ழ,ம் அவர் படும் போது அந்த தமிழ் மொழி மிளிரும். அவர் தமிழர் இல்லை என்றாலும் உண்மையான தமிழர்கள் நம்மால் அப்படி பட முடியுமா. சிந்திக்க வேண்டும் நாம். என் நண்பர் பல நாட்கள் கழிது தான் தெரிந்தது அவர் தெலுங்கர் என்று. அவர் எப்பொழுது பேசினாலும் தமிழன் தமிழன் மட்டமானவன் தமிழன் அறிவு இல்லாதவன் என்று சொல்லி கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரின் விடிற்கு சென்ற பொழுது தான் தெரிந்தது அவர் தெலுங்கர் என்று. இப்படியும் சில ஜென்மங்கள் உண்டு. என்ன செய்வது. நாங்கள் தமிழர்கள் ஒரு சில தெலுங்கர்கள், மலையாளிகள் செய்யும் தவறுகளை வைத்து சுட்டிகாட்டும் பொழுது அவர்களுக்கு கோபம் வருகிறது. நாம் எல்லோரும் இந்த நாட்டிற்கு வந்து அண்ணன் தம்பிகள் போல இருக்க வேண்டும். நமக்குள் பிரச்சனைகள் இருக்க கூடாது. ஒரு சில மருத்துவ போலி முனைவர், டாக்டர், போலி சித்தர்கள் என நிறைய பேர்களுக்கு மின்னல் வானொலியில் வாய்ப்பு கொடுது வரிசை பிடிது வருகிறார்கள். அரசாங்க வானொலி மின்னல் எப். எம் மிகவும் கவனமுடன் அவர்களின் பின் பலத்தை நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பணத்திற்காக தவறுகள் செய்தால் ஒரு நாள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டி வரும். நன்றி

 • en thaai thamizh wrote on 15 அக்டோபர், 2017, 11:16

  ஜி.மோகன் அவர்களே நீங்கள் சொல்வது உண்மையே. தமிழ் பேசி தமிழர்களாக வாழ்பவர்களை நாம் மதித்து ஏற்றுக்கொள்வது தான் உண்மையான மனிதாபிமானம். அத்துடன் கலாச்சாரமும் ஒத்து போகும் தன்மை உடையது. எப்படியும் அவர்களும் மனிதர்கள் . என்ன மலையாளீகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் நம்மை எப்போது மட்டம் தட்டியே பெருமை பட்டுக்கொள்கின்றனர். இதற்க்கு காரணம் என்ன? இவர்களில் பலர் தமிழ் நாட்டுக்கு வந்து மட தமிழர்களை ஆண்டு கொண்டிருக்கின்றனர்– இதனால் தமிழ் நாடும் தமிழர்களும் பயன் அடைந்திருக்கின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இந்த நாட்டில் ஒரு காலத்தில் ஒற்றுமை இருந்தது இப்போதைய இன துவேசம் 1960 -களில் சிறிதாக ஆரம்பித்து இன்று ஆலமரமாக வளர்ந்து மலாய்க்காரன் அல்லாதவர்களை கேவலமான நிலைக்கு தள்ளி விட்டிருக்கிறது. தற்போது இவ்வுலகம் ஒரு கிராமம் – இவ்வுலக மக்கள் யாவரும் ஒரு கிராமத்து மக்கள் என்ற எண்ணம் இருந்தால் இவ்வுலகம் அமைதியா இருக்கும் –நடக்குமா?

 • singam wrote on 15 அக்டோபர், 2017, 16:57

  en thaai thamizh சொல்வது சரி. எவராயினும் நாம் பேதம் பாராது நெருங்கி வாழ முற்படுவோம். சிறு சிறு பிணக்குகளை ஒதுக்கி தள்ளுவோம். தற்போது நம் நாட்டில், இந்த அரசியல்வாதிகளே நம்மை பிரிக்கிறார்கள். கவனமுடன் இருங்கள். 

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: