தாய்மொழிப்பள்ளிகளை சூதாட்ட, மதுபான நிறுவனங்களிடம் கையேந்த வைத்த தந்தை நஜிப்!


தாய்மொழிப்பள்ளிகளை சூதாட்ட, மதுபான நிறுவனங்களிடம் கையேந்த வைத்த தந்தை நஜிப்!

ஜீவி காத்தையா, அக்டோபர் 3, 2017.

மலேசிய அரசாங்கம் தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள்) நிதியை வாரிவாரிக் கொட்டுகிறது என்று கூறப்படுகிறது. அதிலும், மற்ற பிரதமர்களைவிட அதிகமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பவர் பிரதமர் நஜிப் ரசாக் என்றும் கூறப்படுகிறது.

தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நஜிப் வழங்கும் நிதி உதவிகள் பற்றியச் செய்திகளைப் பார்த்தால், அவருக்கு அதைவிட வேறு வேலையே இல்லை என்பது போல் தோன்றுகிறது.

கடந்த செப்டெம்பர் 30, 2017 இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி, “157 தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு மானியமாக 25 மில்லியன் வெள்ளியை வழங்க” பிரதமர் நஜிப் ஒப்புதல் வழங்கியதுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் தெரிவித்திருந்தார்.

மேலும், 2009 ஆம் ஆண்டிலிருந்து (நஜிப் பிரதமராகப் பதவி ஏற்ற காலத்திலிருந்து) “ஆண்டுதோறும் முழு அரசாங்க மானியம் பெறாத தமிழ்ப்பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் மானியம் வழங்கப்பட்டு” வந்ததாகவும் அச்செய்தி கூறியது.

ஆனால், தமிழ்ப்பள்ளிகளுக்கு இலட்சக்கணக்கில்  அளிக்கப்படும் இந்த மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குப் போதுமானதா என்று எந்தத் தலைவரும் இன்றுவரையில் கூறவில்லை.

அதோடு, தமிழ்ப்பள்ளிகளுக்கு அளிக்கப்படும் இந்த இலட்சக்கணக்காண மானியங்கள் தேசியப்பள்ளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களுக்குச் சமமான நிலையைக் கொண்டதா என்பது பற்றிய செய்தி எதுவுமே இல்லை.

பாகுபாடு காட்டப்படாது

12ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடப்பதற்கு இரு நாள்களுக்கு முன்னர் மார்ச் 6, 2008 இல், கோலாலம்பூரில் மஇகா பேராளர்களிடம் பேசிய அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் தேசியப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுகளுக்கிடையில் பாகுபாடு காட்டப்படாது என்று உறுதி கூறியுள்ளார்.

மீண்டும் அதையே கூறினார்:   செப்டெம்பர் 30, 2011 இல், தமது தலைமையிலான கூட்டரசு அரசாங்கம் இந்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எவ்வித பாகுபாடின்றி சரிசமமான சலுகைகளையே வழங்கி வருகிறது என்று வலியுறுத்தினார்.

தேசிய, சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளுக்கிடையில் பாகுபாடு காட்டுவதே மலேசிய அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆளுங்கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் அதைக் கூறுவதில்லை. அதோடு, நஜிப்பின் இன்னொரு துரோகத்தையும் அரசியல் தலைவர்கள் மக்களிடமிருந்து மறைக்கின்றனர்.

அரசாங்கத்தை நம்பி இருக்காதீர், தந்தை நஜிப் அறிவிப்பு

தாய்மொழிப்பள்ளிகள் நிதி ஒதுக்கீட்டிற்காக அதிகமாக அரசாங்கத்தை நம்பி இருக்கக்கூடாது என்று பிரதமர் நஜிப் நவம்பர் 1, 2012 இல் அறிவித்தார்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தனியார் துறையின் பங்களிப்பை நாடுவதற்கான நேரம் வந்து விட்டது என்று அறிவித்து தாம் பாகுபாட்டின் ஒட்டுமொத்த உருவம் என்பதை நஜிப் காட்டி விட்டார்.

நஜிப்பின் இந்த அறிவிப்புக்கு முன்பே, தனியார்துறையின் பங்காளிகள் யார் என்று தீர்மானிக்கப்பட்டு அவற்றின் பங்களிப்புகளை நிருவகிப்பதற்கென்று “சமூகப் பெட்டகம்” (Community Chest) என்ற அறக்காப்பு நிதியம் செப்டெம்பர் 27, 2011 இல் கெந்திங் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட தொடங்கியது. இந்த அமைப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சூதாட்ட மையங்கள் மற்றும் மதுபானம் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களாவர். ஆக, தாய்மொழிப்பள்ளிகள் (தமிழ்ப்பள்ளிகள் உட்பட)  சூதாட்டம் மற்றும் மதுபானம் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த சூதாட்டம் மற்றும் மதுபானம் தயாரிப்பு நிறுவனங்களின் சமூக பெட்டகத்திலிருந்து அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளுக்கு மட்டுமே. தேசியப்பள்ளிகளுக்கு தேவைப்படும் நிதி அனைத்தையும் அரசாங்கமே வழங்குகிறது.

தாய்மொழிப்பள்ளிகளுக்கான அரசாங்கத்தின் பொறுப்பை வாணிக சமூகத்தினரிடம் தள்ளி விடுவது முறையல்ல. மேலும், “பொது பள்ளிக்கூட அமைவுமுறையை நிலைநிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நஜிப் அவருடைய அடிப்படையான பொறுப்பை சாதாரணமாக தனியார்துறையிடம் தள்ளிவிட முடியாது”, என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

தேசியப்பள்ளிகளுக்கு முழு அரசாங்க நிதி ஒதுக்கப்படும் போது, இதர தாய்மொழிப்பள்ளிகளுக்கு முழுமையான அரசாங்க நிதி ஒதுக்கீடு இல்லை என்ற நஜிப்பின் நிலைப்பாடு அரசமைப்புச் சட்ட பிரிவு 12 ஐ மீறியதாகும். அரசமைப்புச் சட்ட பிரிவு 12 க்கு முரணாக  தேசியப்பள்ளி, சீன மற்றும் தமிழ் மொழிப்பள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காட்டப்படுவதை பலர் கண்டித்துள்ளனர். இந்த வேறுபாட்டை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி வழங்கி அவற்றை பராமரிக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பு அரசமைப்புச் சட்ட பிரிவு 12 இல் தெளிவாக்கப்பட்டுள்ளது என்று அதிருட்டுக் கூறியுள்ளார் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவரான ஜி. வடிவேலு.

அவர் கூறுகிறார், “The Government’s responsibility to fund and maintain Tamil schools is now clearly spelt out in Article 12(1) of the Federal Constitution which provides that “there shall be no discrimination against any citizen on the grounds of religion, race, descent or place of birth … (b) in providing out of funds of a public authority financial aid for the maintenance or education of pupils or students in any educational institution (whether or not maintained by public authority…)”.

அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக,  அரசாங்கத்தை நம்பி இருக்க வேண்டாம் என்ற நஜிப்பின் நிலைப்பாட்டினால், தமிழ்ப்பள்ளிகள் சூதாட்ட மற்றும் மதுபான தயாரிப்பு நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து இருக்க வேண்டியதால், பல தமிழ்ப்பள்ளிகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.

அவற்றுக்கு எடுத்துக்காட்டாக, கின்றாரா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் எதிர்கொண்டுள்ள பிரச்சனை உள்ளது.

பூச்சோங் தாமான் கின்றாரா தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய நான்கு மாடிக் கட்டப்படுவதற்கு ரிம35 இலட்சம் ஒதுக்கீடு என்று பிரதமர் நஜிப் ஜனவரி 22, 2012 ஆம் ஆண்டில் அறிவித்ததாக கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. கட்டடம் இன்னும் எழும்பவில்லை.

இதனிடையே, அக்கட்டடம் ரிம20 இலட்சத்தில் கட்டி முடிக்கப்படும் என்று துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் நவம்பர் 22, 2016 இல் அறிவித்தாராம். இன்னும் கட்டடம் எழுந்தபாடில்லை. ஏன்?

இந்தப் பள்ளியின் கட்டடத்தைக் கட்டுவதற்கு நஜிப் அறிவித்த ரிம 35 இலட்சம் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை. அக்கட்டத்தை கட்டுவதற்கு  சூதாட்ட மற்றும் மதுபான நிறுவனங்களின் அமைப்பான சமூகப் பெட்டகம் (Community Chest) ரிம20 இலட்சம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. கமலநாதன் அறிவித்தது அதாகத்தான் இருக்க வேண்டும். (அப்படியானால், நஜிப் அறிவித்த ரிம35 இலட்சம் கண்துடைப்பா?)

கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பெப்ரவரி 26, 2017 இல் பதில் அளித்த மஇகா உதவித் தலைவர் டி. மோகன், “பள்ளி நிர்வாகமோ, பெற்றோர்-ஆசிரியர் சங்கமோ, கட்டுமான நிறுவனமோ தவறிழைக்கவில்லை. சரியான நேரத்தில் பணம் வராத காரணமும், அனுமதி கிடைக்க காலதாமதம் ஆனதாலும் 2012 ஆம் ஆண்டில் 20 இலட்ச வெள்ளியில் கட்டி முடிக்க வேண்டிய இக்கட்டடத்திற்கு இன்றைய காலகட்டத்தில் 28 இலட்ச வெள்ளி செலவாகிறது”, என்றார்.

சூதாட்ட மற்றும் மதுபான தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பான “சமூகப் பெட்டகம்”, இப்போது இக்கட்டடத்தைக் கட்டுவதற்கு தேவைப்படும் ரிம28 இலட்சத்தில் ரிம8 இலட்சத்தை முதலில் திரட்டிய பின்னர் அதன் பங்கான ரிம20 இலட்சத்தை தருவதாக தெரிவித்துள்ளது என்று மோகன் மேலும் தெரிவித்தார்.

அடுத்து, மோகன் கேட்கிறார்: “மீதமுள்ள 8 இலட்ச வெள்ளியைப் பள்ளி நிர்வாகம் எவ்வாறு வசூல் செய்ய முடியும்?” என்ன பரிதாப நிலை!

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்நாட்டின் குடிமக்கள்

தந்தை நஜிப் தாய்மொழிப்பள்ளிகளுக்கான அவரது பொறுப்பை தனியார்துறையிடம் ஒப்படைத்ததின், அதைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்தாததின் விளைவு இந்த கின்றாரா தமிழ்ப்பள்ளியின் பரிதாப நிலை.

கின்றாரா தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள்.   அவர்கள் இந்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர்கள். அவர்களுக்குச் சேவையாற்ற வேண்டிய பிரதம சேவகர் தந்தை நஜிப், அவர்களை அனாதைகளாக்கி, தனியார்துறையின் சமூகப் பெட்டகத்திடம் கையேந்தி நிற்க வைத்து விட்டார்.

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • Beeshman wrote on 3 அக்டோபர், 2017, 15:14

    இந்த கபடதாரியின் அன்றைய செய்திகளும், காணொளிகளும் வெளிச்சம்போட்டு காட்டும் இவன் யாரென்று ! மொழி, இன, மத வெறிகளை உள்ளடக்கியவன் உத்தம வேடம் போடுகிறான், இன்று ! கொழுத்த மாமிசத்தை தின்று எலும்புத்துண்டுகளை விட்டெறியும் இவனுக்கு வால்பிடிக்கும் வானரங்களை என்னவென்று சொல்வது ? இவன் “கடமையை செய்வதற்கு” இவனுக்கென்ன துதிபாட வேண்டியுள்ளது ? நமக்குப் பெற்றுத்தர வேண்டியவற்றை நமது முன்னாள் தலைவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள் ! இந்நாள் தலைவர்கள் நம்மால் பிரதிநிதித்துவம் பெற்று தங்களை மேம்படுத்திக் கொள்வதிலேயே குறியாய் இருக்கின்றனர். நம் கைகளை ஊன்றி நாமே கரணம் போட வேண்டியுள்ளது. நம்மையே நாம் நம்புவோமாக.

  • s.maniam wrote on 4 அக்டோபர், 2017, 18:42

    ஜிவி கந்தையா வுக்கு தெரிந்த உண்மைகள் ம .இ . கா .காரனுக்கு தெரிந்திருக்காதா ? கல்வி பிரிவு என்று ஒன்று இருக்கிறதா ! தெரியவில்லையே ! மாரிமுத்து எங்கே போனார் ! அன்றைய மேலவை தலைவர் , ஜி. வடிவேலு சட்டம் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு என்ன சொன்னது என்றெல்லாம் தெரியும் ! இப்போது உள்ள நமது மேலவை தலைவரை கேட்டால் ! பிரதமரை கேட்டு சொல்கிறோம் என்பார் !! தானை தலைவனின் நியமனத்தில் நமக்கு மேலவை தலைவர் இருந்தார் ! அவர் எடுத்த நீல படங்களெல்லாம் நூறு நாள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியதா !! வீர வசனம் பேசி மக்களை முட்டாளாக்கி சுயநல கொள்ளை கூட்டம் என்று தலைமை வகித்ததோ அப்போதே இந்த சமுதாயம் ஆதாள பாதாளத்தில் விழுந்து புதையுண்டு போனது !! தினமும் விடியும் ! ஆனால் இந்த சமுதாயம் விழிப்பது ???????

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: