கையூட்டு கொடுக்க முயன்றது குறித்து சைட் சாதிக் புகார் செய்ய வேண்டும்: லிம் அறிவுறுத்து

பார்டி  பிரிபூமி  பெர்சத்து   மலேசியா  இளைஞர்   தலைவர்   சைட்  சாதிக்  கூறுவதுபோல்    அவருக்குக்    கையூட்டு  கொடுக்கும்  முயற்சி   நடந்திருந்தால்   அது  குறித்து   அவர்  மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்திடம்   புகார்   செய்ய  வேண்டும்  என  பினாங்கு  முதல்வர்   லிம்  குவான்   எங்   கூறினார்.

அதுதான்  முறையாகும்   என்று   கூறிய   அவர்,   சாதிக்   ஆக்ஸ்போர்ட்   பல்கலைக்கழகத்தில்  முதுநிலை  கல்வி   பயில   உதவிச்  சம்பளம்   கிடைத்தது   என்றும்   ஆனால்,  அரசியலில்  கவனம்   செலுத்துவதற்காக   அவர்   அதை   நிராகரித்து   விட்டார்  என்றும்  சொன்னார்.

இதனிடையே,  சைட்  சாதி  கட்சித் தாவுவதற்குத்    தனக்குக்  கையுட்டு  கொடுக்க  முன்வந்தார்கள்  என்று  கூறியுள்ளார்.

“அவர்  அப்படி  கூறியது    வியப்பளிக்கவில்லை.  அப்படி   அவருக்குக்  கையூட்டுக்  கொடுக்கும்  முயற்சி   நடந்திருந்தால்    அவர்   அதைச்  சட்டப்படி   எம்ஏசிசி-யிடம்  புகார்   செய்ய    வேண்டும்”,  என  டிஏபி   தலைமைச்   செயலாளருமான   லிம்   கூறினார்.

சைட்  சாதிக்  பெர்சத்து   கட்சியைவிட்டு   வெளியேற  ரிம5 மில்லியன்  கையூட்டுக்  கொடுக்க  முயன்ற  அமைச்சரின்   உதவியாளர்   யார்  என்பதை  ஊடகங்கள்    அறிவிக்காதது   ஏன்  என்றும்  லிம்   வினவினார்.

“ஊடகங்கள்  கையூட்டுக்  கொடுக்க  முயன்றவரின்   பெயரை  வெளியிட   வேண்டும்.  அவர்  யார்   என்பதைத்   தெரிந்துகொள்ள  விரும்புகிறோம்”,  என   லிம்  குறிப்பிட்டார்.