பள்ளி வளாகத்தில் அம்னோ கொடிகள் பறக்க, மாணவர்கள் “ஹிடோப் அம்னோ” பாட்டைப் பாடினர்

புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியின் கருப்பொருள் “அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு என்பதாகும்.

அத்தொடக்கப்பள்ளியின் வளாகம் முழுவதும் அம்னோ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அம்னோ கொடிகளை உயர்த்திக்காட்டிக் கொண்டு கட்சியின் பாடலை பாடிக்கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் மாணவர்கள் தேசியக் கொடியையும் அம்னோ கொடியையும் அசைத்துக் காட்டினர்..

இன்னொரு கட்டத்தில், ஒரு பதாகை “ஹிடுப் அம்னோ, ஹிடுப் மலாயு. முன்பு, இப்போது, எப்போதும்” (“Hidup Umno, Hidup Melayu. Dulu, Kini dan Selamanya”)என்ற வாசகங்களுடன் மேடையில் தோன்றியது.

இந்த நிகழ்ச்சியை கூட்டரசுப் பிரதேச அமைச்சு, புத்ரா ஜெயா கல்வி இலாகா, புத்ரா ஜெயா அம்னோ தொகுதியின் கல்விப் பிரிவு மற்றும் இரண்டு அரசுசாரா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் அங்கிருந்தார். அவரது உரையில், ஆசிரியர்களை அம்னோவில் சேரும்படி வலியுறுத்தினார். அமைச்சர் அவரது உரையை முடித்தவுடன், மாணவர்கள் “ஹிடோப் அம்னோ” என்று பாடினர்.

அதன் பின்னர், அமைச்சர், தலைமை ஆசிரியர் முகமட் அமின் ஹம்சா பின்தொடர, மாணவர்கள் அம்னோ பாடலை ரீங்காரம் செய்ய, அலங்கரிக்கப்பட்டிருந்த வகுப்புகளைச் சுற்றிப் பார்த்தார். அங்கு அவருக்கு அம்னோ சின்ன-வடிவிலான நாசி கூனிட் உணவு பரிமாறப்பட்டது.

பின்னர், செய்தியாளர்கள் அவரைச் சந்தித்து, பள்ளிகளில் அம்னோ கொடிகள் போடப்பட்டிருப்பது முறையானதா என்று கேட்டதற்கு, தெங்கு அட்னான் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

அதன் பின்னர் மலேசியாகினியிடம் பேசிய தலைமை ஆசிரியர் முகமட் அமின், பள்ளி எந்தச் சட்ட விதியையும் மீறவில்லை என்றார். இக்கருப்பொருளை உருவக்கியது கூட்டரசுப் பிரதேச அமைச்சுதான் என்று விளக்கம் அளித்தார்.

“உண்மையில் இதில் அரசியல் கூறுகள் அவ்வளவு வெளிப்படையானதாக இல்லை. நாங்கள் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு வெறும் ஆதரவு அளித்தோம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”, என்று முகமட் மேலும் கூறினார்.

அம்னோ கொடிகள் மற்றும் மாணவர்கள் அம்னோ பாடலைப் பாட வைக்கப்பட்டது பற்றி கேட்ட போது, “இது தற்காலிகமானதுதான்”, என்றாரவர்.

பெயரை வெளியிட விரும்பாத ஓர் ஆசிரியர், அரசியல் சார்ந்த இந்த நிகழ்ச்சி தமக்கும் தமது சகாக்களில் சிலருக்கும் ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், “நாங்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை, ஏனென்றால் எங்களுக்கு அரசியலில் விருப்பம் இல்லை. ஆனால், இக்கருப்பொருளைப் பயன்படுத்த அமைச்சு தீர்மானித்திருந்ததால், நாங்கள் என்ன செய்ய முடியும்”, என்று அந்த ஆசிரியர் கூறினார்.

“கடந்த ஆண்டு, ‘சுதந்திரம்’ என்ற கருப்பொருளைப் பயன்படுத்தும்படி அமைச்சு எங்களைக் கேட்டுக் கொண்டது’, என்று அந்த ஆசிரியர் மேலும் கூறினார்.