“சமூக செயற்பாட்டாளர்கள் சொல்வதை இந்திய பொருளாதார நிபுணர்கள் கேட்க வேண்டும்”

பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸீன் புதிய புத்தகம் மரபார்ந்த வளர்ச்சி குறியீடுகளை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறம் சார்ந்த, நல்ல, முற்போக்கான சமூகத்தை உண்டாக்குவது என்று வாதிடுகிறது, என்று எழுதுகிறார் நிலஞ்சனா எஸ் ராய்.

ஜோலா, உறுதியான அலங்கரிக்கப்பட்ட தொங்கு பையை நீங்கள் இந்தியா முழுவதிலும் பார்க்கலாம். இப்போது நாம் பயன்படுத்தும் முதுகுபைக்கு முன்னோடியாக இருந்த இந்த பை காலப்போக்கில் பல விதமான இந்தியர்களாலும், அதாவது சாதுக்கள் முதல் மாணவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், ஊரக ஊழியர்களின் குறியீடாக இந்த பை இருந்தது. இவர்கள் அனைவரும் `ஜோலாவாலாக்கள்` என்றே அழைக்கப்பட்டார்கள்.

முன்பு அவர்களை `ஜோலாவாலாக்கள்` என்று அழைப்பது அன்பின் மொழியாக இருந்தது. ஆனால், இப்போது அரசியல்வாதிகளாலும், ஊடகங்களினாலும் சுதந்திர சிந்தனை கொண்டவர்களை, செயற்பாட்டாளர்களை, பெரு நிறுவனங்களை எதிர்ப்பவர்கள் என்றும் பழிப்பதற்காக ஏளனம் செய்வதற்காக இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது.

வளர்ச்சி பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ் தன்னுடைய `சென்ஸ் அண்ட் சாலிடாரிட்டி : ஜோலாவாலா எக்னாமிக்ஸ் ஃபார் எவரிஒன்` (Sense and Solidarity : Jholawala Economics for Everyone) என்ற கட்டுரை தொகுப்பில், ” இந்தியாவில் பெரு நிறுவனங்கள் ஆதரவளிக்கும் ஊடகங்களால் ஜோலாவாலா என்ற பதம் வசை சொல்லாக, செயற்பாட்டாளர்களை இழிந்துரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.” என்று குறிப்பிடுகிறார்.

அவர் “ஜோலாவாலா பொருளாதார நிபுணர்” என்பவர் உண்மையில் நிஜத்தில் இல்லாத ஒருவர், அது ஒரு புராணமான அம்சம் என்று கூறும் ட்ரீஸ், அதேநேரம் அந்த பதத்துக்கு வேறு ஒரு பொருளை கண்டெடுத்துள்ளார்.

அவர் கொடுக்கும் பொருள் யாதெனில் ஜோலாவாலா பொருளாதார நிபுணர் என்பவர் சாமானிய பொருளாதார அறிஞர் அல்லது உண்மையான முற்போக்கான வளர்ச்சிக்கான அறிஞர். அதாவது, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சமூக வளர்ச்சி என்பது அறநெறி வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நம்பும் ஒருவர்.

அறநெறியுடைய சமூகம்:

பாரம்பர்யமான வளர்ச்சிக் குறியீடுகளை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு அறநெறியுடைய, முற்போக்கான சமூகத்தை உருவாக்குவதும் முக்கியம்.

ட்ரீஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர். இந்திய குடியுரிமை வைத்திருப்பவர். கடந்த 40 ஆண்டுகளாக அவர் இந்தியாவில்தான் வசிக்கிறார், பணி செய்கிறார். அவர் இந்தியாவின் தலைசிறந்த வளர்ச்சி பொருளாதார நிபுணர்களில் ஒருவர்.

பாலின பாகுபாட்டிற்கு எதிரான, வறுமை ஒழிப்புக்கான அவரது உழைப்புக்காக, அவரது வியத்தகு பங்களிப்புக்காக அறியப்படுபவர்.

அவர் இப்போது, நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த ஜார்கண்டின் தலைநகரமான ராஞ்சியில் வசிக்கிறார்.

புத்தகத்தின் தொடக்க உரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பொட்டில் அடிப்பதுபோல உள்ளன.

அவர் எந்த நன்றியையும் எதிர்பார்க்க முடியாத, கடுமையான உழைப்பைக் கோருகிற, குறிப்பாக ராஞ்சியில் நிலக்கரி சுரங்கங்களில் பணி செய்பவர்களின் வாழ்க்கைக்கும், புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்கிற, அதிலிருந்து வரும் அனைத்து பலன்களையும் அனுபவிக்கிறவர்களின் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளியை குறிப்பிடுகிறார்.

இந்த இரு துருவங்களையும் எது பிரிக்கிறது…? என்று கேள்வி எழுப்பி அதற்கு வாய்ப்புதான். வாய்ப்பின்றி வேறெதுவும் இல்லை என்ற பதிலையும் அளிக்கிறார் ட்ரீஸ்.

“இந்த உலகத்தில் உள்ள மற்ற இடங்கள் போலவே இந்தியாவிலும் வசதியானவர்கள், ஆதிக்க வகுப்பினர், அவர்கள்தான் வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்குக்கும் தகுதியானவர்கள் என்று எண்ணுகிறார்கள்.

பணம்படைத்தவர்கள் போலத்தான், நிலக்கரி சுரங்கத்தில் பணி செய்பவர்கள், கட்டட வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

அவர்கள் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், அதனால் இந்த வசதிகள் எங்களுக்கு கிடைக்கின்றன என்று நினைக்கிறார்கள்.

ஏழை மக்களும் இதுபோலத்தான் கடுமையாக உழைக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு எந்த நன்மையும் நிகழ மாட்டேன் என்கிறது…?

இதுகுறித்து அவர்கள் என்றுமே கேள்வி எழுப்ப மாட்டார்கள்; வருந்தமாட்டார்கள். அதேநேரம், அந்த மக்களின் நிலைக்கு அந்த மக்களேதான் காரணம் என்று ஏழைகளை குற்றஞ்சாட்டுவார்கள்.

இதுகுறித்து பேசும், விவாதிக்கும் செயற்பாட்டாளர்களையும் நசுக்குகிறார்கள். ஆனால், இதுகுறித்து இப்போது விவாதிக்கப்படுவது அவசியமான ஒன்று.

2000 முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒரு விரிவான கள ஆய்வின் அடிப்படையிலான இந்தக் கட்டுரை தொகுப்பு, சமூக கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துக்கிறது.

ஜோலாவாலாக்களும், பொருளதார நிபுணர்களும் ஒருவரிடமிருந்து இன்னொருவர் அதிகம் கற்றுக் கொள்ள முடியும் என்று இந்த தொகுப்பு பரிந்துரைக்கிறது.

மிகை உணவும்… பஞ்சமும்:

ட்ரீஸ் எழுதுகிறார், “2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த தேசத்திடம் மிகையான உணவுப் பொருள் கையிருப்பு இருந்தது. இந்திய உணவு கழகத்திடம் இருப்பு இருந்த அனைத்து உணவுப்பொருள் மூட்டைகளை நீள வாக்கில் வரிசையாக அடுக்கி வைத்தால், அது ஒரு மில்லியன் கிலோமீட்டர் நீளத்துக்கு இருந்திருக்கும்.”

ஆனால், 2002 -ஆம் ஆண்டு ட்ரீஸும் அவரது நண்பர் பெலா பாட்டியாவும் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலமான குசுமடாண்ட்டுக்கு பட்டினி சாவுகள் குறித்து விசாரிக்க செல்ல நேரிட்டது.

அந்த விசாரணையில் கண்டவை அனைத்தும் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மொத்த கிராமமும் பாதி பட்டினியில் உழன்று கொண்டு இருந்தது. குழந்தைகள் விளையாடவில்லை. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால், எழுந்து கூட நிற்க முடியாமல், கிழிந்த ஆடைகளுடன் இருந்தார்கள்.

இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் மத்திய பிரதேசத்தில் உள்ள சார்ச் என்னும் கிராமத்துக்கு 2003-ம் ஆண்டு பயணம் செய்தது, வறுமை சூழ்ந்த ஒரு கருமையான இருட்டில் பயணம் செய்வதுபோல இருந்தது.

இந்த `இந்தியா` எப்போதாவதுதான் தொலைக்காட்சி விவாதங்களில் இடம்பிடிக்கும். வழக்கமான `யோஜனாக்களை` கடந்து அவசர திட்டங்களை கடந்து, இதற்கு ஒரு தீர்வை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சாதிய கட்டமைப்பு:

இந்த புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயம் `முக்கிய` மற்றும் நீடித்த பிரச்னையாக இருக்கும் வறுமை, தகுதியுள்ள குடும்பங்களை சமூக திட்டங்களில் சேர்ப்பது மற்றும் வாழ்வதற்காக முயற்சிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் கசப்பான போராட்டம் குறித்து விவாதிக்கிறது.

இந்த வறுமையினால் மிக மோசமாக முதியவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அமைதியான, முனைப்பற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். எப்போதாவது தங்களது கஷ்டங்கள் குறித்து பொதுவில் புகார் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய சோகக் கதைகள் முடிவற்றது.

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவை வழங்கி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அங்கு மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உட்கார்ந்து உண்ண பணிக்கப்படுவதால், அந்த திட்டம் உண்மையில் இந்தியாவின் வளமையான சாதி கட்டமைப்புக்கு சவாலாக இருக்கிறது.

சாதி குறித்து எழுதும் ட்ரீஸ், அது எவ்வாறு மிக நுணுக்கமாக பாகுபாட்டினை உண்டாக்குகிறது என்று விவரிக்கிறார்.

வட இந்திய நகரமான அலகாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பொது நிறுவனங்களில் பொறுப்பிலும், அதிகாரத்திலும் இருப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் உயர் சாதிக்காரர்கள் என்று தன் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதே நேரம் தலித் கிராமங்கள் இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன என்கிறார்.

அவர் பார்வையிட்ட மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தின் தலித் கிராமமொன்றுக்கு சாலை வசதி இல்லை. அந்த கிராமத்தைச் சுற்றி உயர் சாதி விவசாயிகளின் நிலம்தான் இருக்கிறது என்கிறார்.

அந்த கிராமம் பகை நாடுகளால் முற்றுகைக்கு உள்ளான ஒரு தீவு போல இருந்தது என்று தன் புத்தகத்தில் எழுதி உள்ளார்.

புரியாத வணிக வாசகங்கள் `இடையூறு`என்ற வார்த்தையை நேர்மறையாக பயன்படுத்துகிறது. ட்ரீஸ் அந்த வார்த்தையை அவர்களிடமிருந்தும், அந்த பொருளிலிருந்தும் மீட்கிறார். மிக அழுத்தமாக மக்கள் பாதிப்புக்கு உள்ளானதை குறிப்பதற்காக பயன்படுத்துகிறார்.

அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு அறிவிப்பாகட்டும், ஆதார் திட்டமாகட்டும், இதனால் ஏற்பட்ட இடையூறுகளால் மக்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள், மரணித்து இருக்கிறார்கள், தீவிரமான உளவுக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையிலிருந்து ட்ரீஸும் தப்பவில்லை.

அவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் அரசே மதங்களுக்கிடையே முரண்பாட்டை வளர்ப்பதால், மதவாதம் உச்சத்தில் இருக்கிறது என்று பேசினார்.

அப்போது இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர், ட்ரீஸை மேடையிலிருந்து கீழே இறங்கச் சொல்லி கத்தினார்.

ட்ரீஸ் ஆதரிக்கும் பொருளாதார மாதிரி உண்மையில் பெரிய அணைகளைவிட, புல்லட் ரயில்களைவிட நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

அவரது கட்டுரை தொகுப்பின் கடைசி கட்டுரையில், `சுயநலம்` தான் பொருளாதார தரகர்களின் உள்நோக்கம். அந்த சுயநல பொருளாதார தரகர்கள் முன்மொழிந்த மைய பொருளாதார கொள்கையின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஓய்வளிக்க இதுதான் சரியான நேரம் என்கிறார்.

மக்கள் அன்பு, இரக்கத்துடனும் ஒற்றுமை உடனும் செயல்படுகிறார்கள். வளர்ச்சிக்கான சிந்தனையாளர்கள் இந்த விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டு சுதந்திரமான, சமத்துவமான பொருளாதாரத்தை வடிவமைக்க வேண்டும்.

இந்த விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டு எழுப்பப்படும் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும்…?

இது ஒரு பெரிய கேள்விதான். ஆனால், இந்தக் கேள்விக்கு பதிலளிப்பவரால்தான் ஒரு புதிய இந்தியாவை கட்டமைக்க முடியும்! -BBC_Tamil

TAGS: