ஜமால் சிலாங்கூர் செயலகத்துக்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கினார்

சுங்கை  புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்   மறுபடியும்   சிலாங்கூர்    அரசுக்கு     எதிராக  போர்க்  கொடி   தூக்கினார்.

இன்று  காலை   அவர்  சிலாங்கூர்  செயலகக்  கட்டிடடத்துக்கு    வெளியில்   பெட்டிகளில்   பீர்  போத்தல்களை  நிரப்பி  வைத்து   ஒரு  சம்மட்டியால்   அடித்து   நொறுக்கினார்.

“குடிக்க   விரும்பினால்,  (சிலாங்கூர்  மந்திரி   புசார்)  அஸ்மின்   அலியும்  அவரது   கூட்டமும்  எக்ஸ்கோக்களும்   அவர்களின்  அலுவலகங்களிலேயே  குடிக்கட்டும்,  குடித்து  மயங்கிப்   போதையாகட்டும்.

“ஆனால்   பீர்  விழாக்களில்  சிலாங்கூர்  மக்கள்  குடித்துக்  கூத்தடிப்பதற்கு   இடமளிக்கக்  கூடாது.

“சிலாங்கூர்  மக்கள்  குடித்துக்  கூத்தடிப்பதைத்தான்     எம்பி (மந்திரி  புசார்)   விரும்புகிறாரா? (விழாக்களை) இரத்துச்  செய்யுங்கள்”,  என்று  ஜமால்  கூறினார்.

கோலாலும்பூரிலும்   சிலாங்கூரிலும்   பீர்  விழாக்களுக்கு    எதிர்ப்பு  கிளம்பியுள்ளது.

கிள்ளான்  முனிசிபல்  மன்றம்   அண்மையில்,  கிள்ளானில்  ‘ஜெர்மன்  எப்&பி  விழா’  நடத்த   அனுமதி   அளித்தது.  அதில்   மதுபானமும்  உண்டு  எனத்   தெரிகிறது.