இட்லியின் கதை! –ஆரூர் புதியவன்

இட்லிக்காக ‘ஆவி’யை விசாரிக்க முடியாத காலத்தில்

இட்லி குறித்து வெளிவரும் உண்மைகள்

சத்திய மனங்களைச் சட்னி யாக்குகின்றன…

“அவர் இட்லி சாப்பிட வில்லை

சாப்பிட்டதாக நாங்கள்

சொன்னது பொய்” என்கிறார்கள்…

அப்படியாயின் அந்த இட்லியை

யார் சாப்பிட்டது என்பதும்,

இட்லி சாப்பிட்டதாகச் சொல்லப்பட்டவரின் உயிரை

யார் சாப்பிட்டது என்பதும் தவிர்க்க முடியாத

வினாக்கள்???

அவர் பெயரால்தானே அவரவரும் அனைத்தும்

சாப்பிட்டனர் என்பதை அகிலம் அறிந்திருக்க

இட்லியை மட்டும் அவர்தான் சாப்பிட்டார்

என சுட்டிக்காட்டுவது எதன் பொருட்டு?

அரிசி உளுந்து கலந்த அம்’மாவை’ இட்லியாக்கும்

இயல்புக்கு மாறாக அம்மாவையே

இட்லி சாப்பிட வைத்ததாக சொன்னது எப்படி?

வேகும் வரை மறைந்து மர்மமாய்

இருக்கும் இட்லிகள் சாகும் வரை மறைந்து மர்மமாய்

மாறியது எப்படி?

மக்களின் செவிகளை இட்லித் தட்டாக்கி

இதுவரை இவர்கள் இட்லி சுட்டிருப்பார்களோ?

இட்லி மாவுக்கும், இனம் புரியாதசாவுக்கும்

முன்னால் இருப்பவை அரைக்கப்பட்ட

அனுபவம் அல்லவா?

சௌபாக்யமான அம்மாவை

நோவாக்கி அரைத்து மாவாக்கிய

வெட் கிரைண்டரை இயக்கியது யார்?

இதுவரை  இட்லி தின்பதற்காகவே

திறந்த வாய்கள் இப்போது

இட்லி குறித்து பேசத் திறப்பதற்கு

தைரியம் தந்தது யார்?

உண்மையான இட்லி வெண்மையானது

வெண்மையணிந்த  மனித இட்லிகள் சொல்வது

உண்மையானதா?

பாட்டி வடை சுட்ட  கதையை

வென்றுவிட்டது இட்லியின் கதை…

ஏனெனில் இந்தக் கதையை

நரிகளே எழுதி வெளியிட்டுள்ளன…!