காவிரி: தமிழகத்துக்கு தரும் நீரில் இருந்து 60 டிஎம்சியை தர கர்நாடகா கோரிக்கை!

டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 197 டிஎம்சி நீரில் இருந்து 60 டிஎம்சி நீரை தங்களுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வலியுறுத்தியுள்ளது.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மாநிலங்களின் வாதங்கள் தாக்கல்

மேலும் 2 வாரங்களுக்குள் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதால் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தன.

கூடுதல் நீருக்கு கோரிக்கை

தமிழக அரசு 4,000 பக்கங்களில் 5 வால்யூம்களாக வாதங்களைத் தாக்கல் செய்தது. அதில் தமிழகத்துக்கு கூடுதலாக 72 டிஎம்சி நீர் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தமிழகத்துக்கு எதிராக வாதம்

இதேபோல் கர்நாடகாவும் எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று தாக்கல் செய்தது. அதில், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 197 டிஎம்சி நீரின் அளவை குறைக்க வேண்டும். இதில் இருந்து 60 டிஎம்சி நீரை கர்நாடகாவுக்கு தர வேண்டும்.

விரைவில் தீர்ப்பு தேதி

அத்துடன் தமிழகம் முன்வைத்துள்ள 72 டிஎம்சி கூடுதல் நீரை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கர்நாடகா வலியுறுத்தியுள்ளது. இந்த வாதங்களைத் தொடர்ந்து தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: