எம்.ஏ.சி.சி. ‘வாரிசான்’ உதவித் தலைவரைத் தடுத்து வைத்தது

பார்ட்டி வாரிசான் சபா (வாரிசான்) உதவித் தலைவர் பீட்டர் அந்தோணி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) தடுத்து வைக்கப்பட்டார்.

நேற்று மாலை, கோத்தா கினாபாலு எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு, விசாரணைக்கு வந்த அவர் தடுத்து வைக்கப்பட்டதை எம்.ஏ.சி.சி. உறுதிபடுத்தியதாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி கூறியது.

நாளை காலை, பீட்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவு பெற அழைத்துச் செல்லப்படுவார் என்றும் எம்.ஏ.சி.சி. கூறியது.

நேற்று முன்தினம், சபாவில் பல இடங்களில் சோதனை செய்ததன் மூலம் RM150 மில்லியன் பணத்தை எம்.ஏ.சி.சி. பறிமுதல் செய்துள்ளது.

அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின் வழி, பண மோசடி செய்யும் சிண்டிகெட் இருப்பதாக எம்.ஏ.சி.சி. கூறுகிறது. நடைபெறாத மேம்பாட்டுத் திட்டங்களுக்குக் கணக்கு காட்டி, பணம் பறிப்பதே இவர்களின் வேலை என்றும் அது கூறியது.

துணை ஆணையர் அஷாம் பாக்கி, எம்.ஏ.சி.சி. நடத்திய சோதனையை உறுதிபடுத்தினார், ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சுகளை அவர் வெளியிடவில்லை.

முன்னதாக வாரிசானின் தேசியத் தலைவர் ஷாஃபி அப்டால் கைவசமிருந்த, கிராமப்புற மற்றும் கூட்டரசுப் பிரதேச அபிவிருத்தி அமைச்சிடமிருந்து, பல அபிவிருத்தி திட்டங்களை பீட்டர் பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், தான் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்றும், சரியான செயல்முறையின் படியே அவற்றைப் பெற்றதாகவும் பீட்டர் தெரிவித்தார்.

2015-ல், அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு, அம்னோவிலிருந்து விலகிய ஓராண்டுக்குப் பிறகு, ஷாஃபி வாரிசான் கட்சியை உருவாக்கினார்.