இராக் படையினரிடம் ஹவிஜா நகரை இழந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இறுதி நிலப்பகுதிகளில் ஒன்றான ஹவிஜாவை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக இராக் அரசு படைகள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் (புதன்கிழமை), 196 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாகவும், 98 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் ஹவிஜா நகர் கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் தீவிரவாத குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்நகர் மீண்டும் கைப்பற்றப்பட்டதையடுத்து, தீவிரவாதிகள் குழுக்கள் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதிகளில் தற்போது வெறும் ஒருபகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

ஆனால், சிரியாவில் உள்ள சில பகுதிகளை ஐ.எஸ் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இராக்கில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள படையினர், போலீசார் மற்றும் பாராமிலிட்டரி படையினர் ஹவிஜா நகரின் மத்தியை முழுவதுமாக விடுவித்துள்ளனர் என்றும், படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் ராணுவ நடவடிக்கையின் தளபதி அப்தெல் அமிர் யாரல்லா தெரிவித்துள்ளார்.

ஹவிஜா நகரை ராணுவம் முழுமையாக ஐ.எஸ் வசமிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக இராக் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமையன்று, இராக்கின் தெற்கில் அமைந்திருந்த ரஷாத் விமான தளத்தை இராக்கிய படைகள் கைப்பற்றியிருந்தன.

இந்த விமான தளத்தை தீவிரவாதிகள் முன்பு பயிற்சி முகாம்களாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

-BBC_Tamil