வீரத் துறவி-பெருங்கவி வள்ளலார் சுவாமிகள்

‘ஞாயிறு’ நக்கீரன்- ஆசு கவி, சிந்து கவி, சித்திரக் கவி, வித்தார கவி என்றெல்லாம் ஐம்பெருங்கவித்திறம் படைத்த பெரும்பாவலவராக.. சொற்பொழிவாளராக.. உரைநடை ஆசிரியராக.. எழுத்தாளராக.. நூலாசிரியராக.. உரையாசிரியராக.. ஞானாசிரியராக.. ஆன்மிக அறிஞராக.. சித்த மருத்துவராக.. இவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாக.. ஞானியாக.. சித்தராக.. என்றெல்லாம் பெருந்திருவுடன் விளங்கிய தமிழ்த் திருமகனார் இராமலிங்க சுவாமிகளுக்கு அக்டோபார் திங்கள் 5-ஆம் நாள் பிறந்த நாள்.

நாம், சமய எல்லையைலேயே காலமெல்லாம் நிறுத்திவைத்திருக்கும் வள்ளலார் சுவாமிகள் என்னும் இராமலிலிங்கனார், உண்மையில் ஓர் பல்திற இலக்கியவாதி, அதுவும் பேரிலக்கியவாதி என்பதையும் தமிழ் அறிஞர் என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை!

இத்துணைச் சிறப்புகள் இருந்தும் கடைசியில் இவர், ஆரிய சூழ்ச்சிக்கு ஆளானது பெருஞ்சோகம்.

பசித்த வயிறுக்கும் வாடிய பயிருக்கும் மனமிறங்கிய இவர், பசிப் பிணிக்கும் பயிர்ப் பிணிக்கும் இன்றளவும் தீர்வு எட்டப்படாத நிலையில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஓர் அறையில் புகுந்து ‘காற்றோடு கலந்து விட்டார்; சுடர்விடும் சோதியில் ஐக்கியமாகி விட்டார்’ என்பதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதை; ஆரியம் கட்டவிழ்த்துவிட்ட புரட்டும் புனைசுருட்டும் ஆகும்.

அப்பழுக்கற்ற சிவபக்தரான நந்தன் எப்படி தீயில் தள்ளிவிடப்பட்டு சோதியில் ஐக்கியமாகி விட்டார் என்று கதை அளக்கப்பட்டதோ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எப்படி வஞ்சகமாக இரு கூட்டத்தால் கொலை செய்யப்பட்டாரோ அதைப்போல வள்ளலாரும் ஆரியத்தின் வஞ்சக வலையில் வீழ்ந்தார் என்பதுதான் உண்மை.

தமிழர்களின் பாரம்பரிய இறை வணக்க முறை இயற்கையை வணங்குவதாகும். இயற்கைக்கு ஆதாரமான சூரிய வணக்க முறையைத்தான் சோதி வழிபாடாக உருவாக்கினார் வள்ளலார் பெருந்தகை; இன்றைய இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், கௌரம், காணாபத்தியம் என்னும் ஆறு கொள்கைகளில் இடம்பெற்றுள்ள ஒரு கொள்கையான கௌரம் என்னும் கொள்கை சூரியனை வணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

மாசற்ற மனதோடும் மறுவற்ற சிந்தையோடும் இறைவனை எண்ணினாலேப் போதும்; எல்லாம் அறிந்த இறைவன் நாம் வேண்டும் வரத்தை அருள்வார்; பரிகாரத்தால் பரம்பொருளை வசப்படுத்த இயலாது என்பதுதான் சோதி வழிபாட்டில் சொல்லப்படும் முறை. ஏறக்குறைய ஆழ்வார்கள் நாயன்மார்களும் திருமுறையில் சொல்லி வைத்த இந்தக் கொள்கையைத்தான் வள்ளலாரும் பின்பற்றினார். உலகையும் உலகவாழ் உயிர்களையும் இயக்கி வரும் முழுமுதற் பொருளான கடவுள், அனைவர் உள்ளத்திலும் சோதி வடிவாகத் திகழ்கின்றார், அத்தகைய அருட்பெருஞ்சோதியாகிய ஆண்டவரின் தனிப்பெருங் கருணையே உலக உயிர்களையெல்லாம் வாழ வைக்கிறதென்றும் கண்டுணர்ந்தார். இவ்வுண்மையினை மனத்திற் கொண்டு, சாதிமத வேறுபாடின்றி, எல்லா உயிர்களிடத்திலும் இரக்கமுடையவராய் வாழும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை நல்கும் சீவகாருண்ய ஒழுக்கமே உலகில் உயர்ந்தது என அறிந்து தெளிந்தார். இதனால் சமரச சன்மார்க்க நெறியைக் கைக்கொண்டார்.

செந்தமிழிலும் கிரந்த மொழியிலும் ஓதி உணரும் பெருஞானம் கைவரப் பெற்ற வள்ளலார் சுவாமிகள், சைவ நெறியோடு வளர்ந்து தான் கண்ட பக்தி மார்க்கத்தில் ஆன்மிக நன்னெறிக்கும் வித்திட்டார்.  முருகப்பெருமானைக் கடவுளாகவும் திருஞான சம்பந்தரைக் குருவாகவும் திருவாசகத்தை வழிபாட்டு நூலாகவும் கொண்ட வள்ளலார் சுவாமிகள், பின்னர் தாமே பல்லாயிரக் கணக்கான பாடல்களை இயற்றினார். அப்பாடல்களின் தொகுதியே திருவருட்பா என்னும் இறைக்கருவூலமாகும்.

ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்ட திருவருட்பா, 399 பதிகங்களையும் 5818 பாடல்களையும் கொண்டது. எல்லாப் பாடல்களும் இறைவனை முன்னிறுத்திப் பாடப்பெற்றவை. இது மாந்தன் கண்ட இறைநேசப் பயணத்தில் ஒரு புதுமை; சுத்தமான மனதாலும் செயலாலுமே இறைவனை அண்ட முடியும் என்று இறைநேசப் பாதை வகுத்தார் வள்ளலார்;

மொத்தத்தில் பரிகாரம் இல்லாத இறைமார்க்கத்தை வடிவமைத்த வள்ளலார் சுவாமிகள், பரிகாரத்தால் இறைவனை அண்ட முடியாது என்பதை தெளிவாக மக்களிடையே உணர்த்தினார்.

ஆனால், பரிகாரத்தை நம்பியே வாழ்க்கைச் சக்கரத்தை திட்டமிட்டு நகர்த்தும் ஆரியம், இந்தக் கொள்கைக்கு இடம் தருமா என்ன? கடைசியில், நந்தனார் பட்டியலில் வள்ளலாரையும் இணைத்துவிட்டது; இளித்தவாயினரான தமிழர்கள் வழக்கம்போல இதிலும் ஏமாந்து கிடக்கின்றனர் இன்றளவும்.

1823, அக்டோபர் 5-ஆம் நாளில் தோன்றிய வள்ளலார்,  மக்கள் நலம் பேணவும் மக்களுக்கான இறைஞானம் காணவும் தானே உருவாக்கிய சன்மார்க்க சங்கம் – சத்திய தரும சாலை – சத்திய ஞான சபை என்னும் மூன்று அருள்நெறி அமைப்புகளை அப்படியப்படியே விட்டுவிட்டு ஐம்பது அகவையிலேயே 1874-ஆம் ஆண்டு தைப்பூச நந்நாளில்(ஜனவரி 30-ஆம் நாளில்) காற்றோடு கலக்க வேண்டிய காரணத்தை தமிழர்கள் இன்றுவரை  எண்ணிப் பார்க்கவில்லை!