‘கமுக்கமாக’ கோட்டா முறையைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன, தேசியக் கல்வி ஆலோசகர் கூறுகிறார்

ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைக் (கோட்டா) ‘கமுக்கமாக’ பயன்படுத்தும் பொது உயர்க்கல்வி கூடங்கள் (ஐபிடிஏ), நாட்டில் இருக்கவே செய்கின்றன என்று முன்னாள் தேசியக் கல்வி ஆலோசகர் கூறுகின்றார்.

இருப்பினும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது அதிக அளவில் இல்லை எனவும் பேராசிரியர் தியோ கொக் சியோங் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஒதுக்கீட்டு முறையை “எப்போதாவது” பயன்படுத்துவது தேவையான ஒன்றாகும்.

“இல்லையென்றால், குறிப்பிட்ட ஒருசிலப் பயிற்சிகளில் குறிப்பிட்ட ஓர் இனம் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதாக ஆகிவிடும். உதாரணத்திற்கு, தகுதி முறையைப் பின்பற்றினால், மருத்துவம் போன்ற துறையை, மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் நிரப்பிவிடுவர்,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நஜிப், இந்திய மாணவர்கள் ஐபிடிஏ-வில் நுழைய, தகுதி அடிப்படையிலான தேர்வுமுறை உதவவில்லை, என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நஜிப், “அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால், ஐபிடிஏ-வில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3 அல்லது 4 விழுக்காடு மட்டுமே இருக்கும், 7 விழுக்காட்டை அவர்களால் அடையமுடியாது,” என்று கூறினார்.

உடல்பேறு குறைந்த மாணவர்கள், பாலினம் மற்றும் பூர்வக்குடிகளைப் போன்று சிறுபான்மையின மாணவர்களைச் சமன்நிலையில் சேர்க்கவும், ஒதுக்கீடு முறை தேவை என்று தியோ கூறினார்.

அவரைப் போன்றே, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘இனக்குழு ஆய்வு நிறுவனம் (கீத்தா), மாணவர் சேர்க்கைக்கு 100% தகுதி அடிப்படையிலான முறையைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

தகுதி அடிப்படையைப் பயன்படுத்தினால், ஒரு குழுவினர் நீக்கப்படும் வாய்ப்பும் உண்டு, உதாரணத்திற்கு, பிரதமர் நஜிப் கூறியது போல, இந்தியச் சமூகம் என்று ‘கீத்தா’ கூறியது.