சார்ல்ஸ் சந்தியாகோ : நாட்டின் கல்வி முறை, இந்திய மாணவர்களைப் புறக்கணிக்கிறது

கல்வி மக்களின் அடிப்படை உரிமையாகும், இன அடிப்படையில் அதனை அரசியலாக்கக் கூடாது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

உயர்க்கல்வி கூடங்களில் (ஐபிடிஏ), இந்திய மாணவர்களுக்கு 700 இடங்களை ஒதுக்க வேண்டுமென்ற, பிரதமரின் அறிவிப்பு குறித்து சந்தியாகோ கருத்துரைத்தார்.

நாட்டின் தற்போதையக் கல்விமுறை, ஒரு சாராருக்குச் சாதகமாகவும் குறிப்பிட்ட சிலருக்கு இலாபம் அளிப்பதாகவும் இருப்பதால், அது அர்த்தமற்றதாகத் தெரிகிறது என்று அவர் சொன்னார்.

“மாணவர்களுக்கு முன்னதாக ஏன் இடம் கொடுக்கப்படவில்லை? மதம், இனம் அடிப்படையில் இல்லாமல், தகுதி அடிப்படையில் இடம் வழங்கப்படுகிறது என்றால், அரசியல்வாதிகளும் பிரதமரும் ஏன் அதில் தலையிட வேண்டும்?” என்று அந்த டிஏபி தலைவர் கேள்வி எழுப்பினார்.

“எல்லாச் சமூக மாணவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும், ஆலோசித்து, பின்னர் தாமதமாக ஓர் இடத்தை வழங்கக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

பல இந்திய மாணவர்கள், அனைத்து பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றாலும், அவர்கள் விரும்பியத் துறையில் படிக்க, பொது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பல மாணவர்கள், சட்டம் மற்றும் மருத்துவத் துறைகளில் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று தன்னிடம் வறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“பல மாணவர்களுக்கு மீன் பிடி அல்லது கால்நடை துறையில் பயிலவே இடம் கிடைக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் தங்கள் படிப்பை ஒத்திவைக்கிறார்கள் அல்லது தங்கள் கனவைத் தொடர கடன் வாங்குகிறார்கள். இது மலேசியாவில் பல ஆண்டுகளாக நடப்பில் இருக்கும் விசயமாகும்,” என்று அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில், ஆரம்பக் கல்வியைப் பயிலும் மாணவர்கள் மீதும் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்று சந்தியாகோ தெரிவித்தார்.

அண்மையில் ஜகார்த்தாவில், 2017 சர்வதேச இளையர் கண்டுபிடிப்பு விருதில், 6 தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த 10 மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றதாக அவர் தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, கடந்த சில வருடங்களாக, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில், சர்வதேச அளவில் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளனர். மற்ற நாடுகளில், அவர்களின் திறமைக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் பிற ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு அரசாங்கம் இம்மாணவர்களை வளர்த்தெடுக்கத் தவறிவிட்டது. கல்வி அமைச்சும் வாய்மூடி கிடப்பது வறுத்தமளிக்கிறது,” என்றார்.

இந்த நிலை நிறுத்தப்படாவிட்டால், தமிழ்ப்பள்ளிகளில் இருக்கும், பல இளம் திறமைசாலிகளை, மலேசியா இழக்க நேரிடும் என்றும் சந்தியாகோ கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நஜிப் தகுதி அடிப்படையிலான தேர்வுமுறை, மலேசியாவுக்கு ஏற்றதல்ல, அது இந்திய மாணவர்கள் ஐபிடிஏ-வில் நுழைய உதவி செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அதுகுறித்து கருத்துரைக்கையில் சார்ல்ஸ் சந்தியாகோ இவ்வாறு கூறினார்.