பிரபாகரன் உடலைப் பார்த்த போது எனக்கும் பிரியங்காவுக்கும் குற்ற உணர்வு ஏற்பட்டது:ராகுல் பரபர பேச்சு

வதோதரா : தமது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை..வேதனைப் பட்டோம்.. எங்களுக்கு ‘குற்ற உணர்வு’ம் கூட ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்று அவர் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அதில், வேலைவாய்ப்பு இல்லாத கோபத்தில் மக்கள் இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை பாஜக அரசுக்கு இருப்பதாக கூறினார் ராகுல். மேலும் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு ராகுல் காந்தி அளித்த பதில்:

துக்கமாக உணர்ந்தோம்

அரசியல்வாதிகள் மனதில் தோன்றவதை சொல்லமாட்டார்கள் ஆனால் நான் அப்படியில்லை. நான் என் மனதில் பட்டதைத் தான் சொல்வேன். நான் அடிக்கடி என் தந்தையைப் பற்றி நினைத்து பார்ப்பதுண்டு. என்னுடைய அப்பாவை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொன்றார். ஆனால் இலங்கை கடற்பகுதியில் அவர் கொல்லப்பட்டு கிடந்த காட்சியை பார்த்து எனக்கு துக்கமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

குற்ற உணர்வுகூட ஏற்பட்டது

உடனடியாக பிரியங்கா காந்திக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பிரியங்காவிற்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். என்னுடைய அப்பாவைக் கொன்றவர் இறந்து கிடக்கிறார் ஆனால் எங்களுக்கு துக்கமாக இருந்தது, எங்களுக்கு ஒரு குற்றஉணர்வு ஏற்பட்டது என்று கூட சொல்லாம்.

மகிழ்ச்சியடையவில்லை துக்கப்பட்டோம்

பிரபாகரனின் கடைசி மகனின் வாழ்க்கை எவ்வளவு போராட்டகளமாக இருந்ததோ அப்படித் தான் எங்களுடைய வாழ்க்கையும் இருந்தது. தந்தையை இழந்த துக்கத்தில் தான் நாங்கள் வளர்ந்தோம். என்னுடைய தந்தையைக் கொன்றவர் இறந்துவிட்டார் என்று நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை மாறாக துக்கப்பட்டோம்.

வளர்ப்பு அப்படி

இது நாங்கள் வளர்ந்த விதம் என்று கூட சொல்லலாம். இதற்காக நீங்கள் எங்களை முட்டாள், கோமாளி என்று என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம், ஏனெனில் காந்தி குடும்பத்தின் வளர்ப்பு அப்படி. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

tamil.oneindia.com

TAGS: