வாலிபர் மர்ம மரண வழக்கு.. பாராலிம்பிக் மாரியப்பனின் பெயரை சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: சேலத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மரண வழக்கில் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பனின் பெயரை சேர்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன். இதைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் சார்பில் அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி மாரியப்பன் தனது நண்பருடன் புதிதாக வாங்கப்பட்ட காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் ஓமலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரின் பைக் மாரியப்பனின் கார் மீது மோதியது.

இளைஞர் மர்ம மரணம்

காரில் லேசாக கீறல் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாரியப்பனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறிது நாள்களுக்கு பிறகு ரயில் தண்டவாளம் அருகே சதீஷ்குமார் இறந்து கிடந்தார்.

தாயார் புகார்

கார் சேதமானதற்கு மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிறகே தனது மகன் இறந்துள்ளதால் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாய் முனியம்மாள் காவல் துறையில் புகார் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் மனு

எனினும் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சதீஷ்குமார் மர்ம மரண வழக்கில் மாரியப்பனின் பெயர் சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

24-ஆம் தேதிக்கு வழக்கு

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரண வழக்கில் மாரியப்பனின் பெயரை சேர்க்குமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் இந்த வழக்கை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

tamil.oneindia.com

TAGS: